இஸ்லாத்தின் மீதான அவதூறு – மன்னிப்புக் கேட்டது பிபிஸி!

ஸ்லாத்தின் மீது பெரும் அவதூறைச் சுமத்தியதற்காக பிபிஸி நிறுவனம் மன்னிப்புக் கேட்டுள்ளது. அத்துடன் தனது தவறுக்கு வருந்தி, தான் அவதூறு பரப்பிய பிரிட்டனிலுள்ள முஸ்லிம் பேரவையின் (Muslim council of Britain) தலைவரான டாக்டர். முஹம்மத் அப்துல் பாரி அவர்களுக்கு 45,000 பிரிட்டிஷ் பவுண்டுகளை நஷ்ட ஈடாக வழங்குகிறது.

பிபிஸியின் “கேள்வி நேரம்” நிகழ்ச்சி ஒன்றின் போது பிரிட்டிஷ் படை வீரர்களைக் கடத்திக் கொலை செய்வது பற்றிய ஒரு விவாதத்தில் அவதூறான சில கருத்துக்களை பிபிஸி நடுவர் குழு தெரிவித்தது. இந்நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டிருந்த முஹம்மத் அப்துல் பாரி அவர்கள் இச்செயலை முழு மனதுடன் ஆதரித்துப் பேசினார் என இந்நிகழ்ச்சியை நடத்தும் நடுவர் குழு பழி சுமத்தியது.

இது முற்றிலும் பொய்யான அவதூறாகும் என்று முஹம்மத் அப்துல் பாரி இதனை எதிர்த்துத் குரல் எழுப்பினார். தான் கூறாத ஒரு கருத்தைத் தான் கூறியதாகவும் அதுவே இஸ்லாத்தின் நிலைபாடாகவும் பொய்யான செய்தி வெளியிட்ட பிபிஸிக்கு எதிராக வழக்குத் தொடர்ந்தார். கடந்த 2007 இல் ஈராக்கில் பிரிட்டிஷ் படைவீரர்கள் கொல்லப் பட்டதை எதிர்த்து தான் பேசியதாகவும், அதனை பிபிஸி நடுவர்கள் குழு திரித்து அவர்கள் கொல்லப்படுவதைத் தான் ஆதரித்துப் பேசியது போன்று தம் மீதும் தூய இஸ்லாமிய நெறிகள் மீதும் பிபிஸி பழி சுமத்தியுள்ளதாகவும் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.

பதிவான நிகழ்ச்சியை மீண்டும் ஆராய்ந்த பிபிஸி இறுதியில் தனது தவற்றினை முழுமையாக ஒப்புக் கொண்டு முஹம்மத் அப்துல் பாரி அவர்களிடம் மன்னிப்புக் கோரியுள்ளது. இச்செய்தி பிபிஸி தளத்திலும் வெளியாகியுள்ளது.

சம்பவத்துக்குக் காரணமான கேள்வி நேரம்(Question Time) நிகழ்ச்சியினைக் கடந்த மார்ச் 12, 2009 இல் பிபிஸி பதிவு செய்தது. அதில், பிரிட்டிஷ் படை வீரர்களை எதிர்த்து ஈராக் மற்றும் பல்வேறு நாடுகளில் நடந்து வரும் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் பற்றிய நிகழ்வு தொடர்பாக ஒரு பார்வையாளர் எழுப்பிய கேள்விக்கு முஹம்மத் அப்துல் பாரி அவர்கள் பதில் அளித்திருந்தார்.

பிரிட்டிஷ் படைவீரர்களுக்கு எதிராக நடக்கும் இத்தகைய கிளர்ச்சிகள், ஆர்ப்பாட்டங்கள் தடை செய்யப் பட வேண்டுமா? என்று பார்வையாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.

இக்கேள்விக்கு முஹம்மத் பாரி பதில் சொல்ல முற்படுகையில் குறுக்கிட்ட நடுவர் குழு, “பிரிட்டன் உட்பட பல்வேறு நாடுகளில் பிரிட்டிஷ் படைவீரர்களை எதிர்த்து இத்தகையப் போராட்டங்கள் பல நடந்தும் அதனைக் கண்டனம் செய்யத் தவறியதால் முஹம்மத் பாரி இதனை ஆதரிக்கிறார் என்று தான் எடுத்துக் கொள்ள முடியும்!” என்று கருத்துத் தெரிவித்தது.

அத்துடன் நில்லாமல் “பிரிட்டிஷ் படைவீரர்கள் மீது நிகழும் இத்தகைய கடத்தல் மற்றும் கொலைகளை முஹம்மத் பாரி அவர்கள், ஏகமனதாக ஆதரிக்கிறார்” என்றும் “இதுவே இஸ்லாம் கூறும் வழியாகும்!” என்றும் சர்வதேச அளவில் நிகழ்ச்சியைக் காணும் பார்வையாளர்கள் அதிரும் வண்ணம் நடுவர் குழு அந்நிகழ்ச்சியில் பழியும் சுமத்தியது. பிபிஸி நடுவர் குழுவின் இத்தகைய அவதூறான பேச்சில் மறைமுகமாக பிரிட்டனின் முஸ்லிம் பேரவையைக் குறிவைத்துத் தாக்கியிருந்தது வெளிப்பட்டுள்ளது.

பிபிஸியின் மோசமான இந்தச் செயல்பாட்டை எதிர்த்து முஹம்மத் அப்துல் பாரி அவர்கள் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கினைத் தொடர்ந்து, பிபிஸி தன்னுடைய இஸ்லாமிய விரோத அவதூறுக்கு மன்னிப்பு கேட்டு வருந்தியதோடு முஹம்மத் அப்துல் பாரி அவர்களுக்கு 45,000 பிரிட்டிஷ் பவுண்டுகளை நஷ்ட ஈடாக வழங்கவும் சம்மதித்துள்ளது. இந்தத் தொகையினைத் தாம் அறக்கட்டளைகளுக்கு தர்மமாக வழங்கி விடப் போவதாக முஹம்மத் பாரி அவர்கள் தெரிவித்துள்ளார்.

– அபூ ஸாலிஹா