குர்ஆனைத் தடைசெய்யவேண்டும் : டச்சு நாடாளுமன்ற உறுப்பினர்

{mosimage}முஸ்லிம்களின் வழிகாட்டியாக இறைவனின் வார்த்தைகள் என முஸ்லிம்களால் நம்பப்படும் திருமறை குர்ஆனைத் தடை செய்ய வேண்டும் என நெதர்லாந்து நாடாளுமன்ற உறுப்பினர் கியர்ட் வில்டர்ஸ் கூறியுள்ளார். 150 உறுப்பினர்கள் கொண்ட டச்சு நாடாளுமன்றத்தில் 9 உறுப்பினர்கள் கொண்ட கட்சியைச் சேர்ந்த இவர் இதை நேற்று (8/8/2007) AFP நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.

ஹிட்லரின் Mein Kampf என்ற புத்தகம் வன்முறையை வலியுறுத்துவதால் தடைசெய்யப்பட்டது போன்றே முஸ்லிம்களின் புனித நூலான குர்ஆனையும் தடை செய்ய வேண்டும் என அவர் கூறினார். இதற்கான காரணமாக குர்ஆன் முஸ்லிம் அல்லாதவர்களுடன்முஸ்லிம்களைப் போரிடச் சொல்வதாக அவர் தெரிவித்தார். முஸ்லிம்களாலும் அவர்களின் அல்லாஹ், முஹம்மத் என்ற சொற்களாலும் சலிப்பு அடைந்துள்ளதாக அவர் தெரிவித்தார். முஸ்லிம்கள் எவரையும் நெதர்லாந்தில் குடியேற அனுமதிக்கக் கூடாது என்றும் அவர் மேலும் கூறினார்.

வில்டர்சின் இந்தக் கருத்தை நெதர்லாந்து அரசு உடனடியாகக் கண்டித்துள்ளது. வில்டர்சின் இது போன்ற பேச்சுக்கள் டச்சு சமூக நல்லிணக்கத்தைக் குலைப்பதாக இருப்பதாக அரசின் அதிகாரப்பூர்வ செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது. அரசின் மூத்த அமைச்சர் எல்லா வொகேலா இது குறித்துக் கருத்து கூறிய போது வில்டர்சின் இப்பேச்சு டச்சு சமூகத்தின் மதச் சகிப்புத் தன்மையை உலக அரங்கில் கேவலப் படுத்துவது போல் உள்ளது என்றும் அமைதியை விரும்பும் பெரும்பான்மை முஸ்லிம்களின் மனதை இது புண்படுத்துவது போல்  அமைந்திருப்பதாகவும் தெரிவித்தார்.

இஸ்லாமோஃபோபிஸ்டுத் தனமாக இருக்கும் இவ்வகைப் பேச்சுக்கள் தொடர்ந்து பேசிவரும் வில்டர்ஸ் மீது எல்ஸ் லூக்காஸ் எனும் பொதுநல வழக்கறிஞர் வழக்குத்தொடர்ந்துள்ளார். இவ்வழக்கில் சமூக நல்லிணக்கத்தைக் குலைக்கும் வில்டர்சின் நச்சு நோக்கம் நிரூபிக்கப்பட்டால் அவர் மீது 23 ஆயிரம் டாலர்கள் அபராதம் விதிக்கப்படும்.  இதற்கான பூர்வாங்க வேலைகளை டச்சு அரசு வழக்குத் தொடுப்புப் பிரிவு (Dutch Public Prosecution) ஏற்கனவே தொடங்கியுள்ளது.