{mosimage}ஆஸ்திரேலியாவில் நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் வலதுசாரி பிரதமராக இருந்த ஜான் ஹோவர்டின் கட்சியைப் பெரும் தோல்வி அடையச் செய்து வெற்றி பெற்று புதிய பிரதமராகப் பொறுப்பேற்றுள்ள கெவின் ரூட், முந்தைய பிரதமர் ஹோவர்டின் கொள்கைகளுக்கு எதிரான கொள்கைகளை முன்வைத்துள்ளார். தேர்தலின் போதே அவற்றை முன்னிலைப் படுத்திப் பிரச்சாரம் செய்து தேர்தலில் அமோக வெற்றியும் பெற்றார்.
தற்போது ஹோவர்டு தோற்று ரூட் டிசம்பர் 3 அன்று பதவி ஏற்க உள்ள நிலையில் மிக முக்கிய அறிவிப்பாக அவர் வெளியிட்டுள்ளது இராக்கில் இருக்கும் 2000 ஆஸ்திரேலியத் துருப்புகளைப் படிப்படியாக விலக்கிக் கொள்வதாகும். அடுத்த ஆண்டு ஜூன் மாதத்திற்குள் இராக்கில் இருக்கும் அனைத்துத் துருப்புகளையும் நாங்கள் விலக்கிக் கொள்வோம் என அவர் அறிவித்துள்ளார். இது குறித்த பேச்சு வார்த்தைகளை அமெரிக்காவுடன் ஏற்கனவே தொடங்கி விட்டோம் என அவர் தெரிவித்தார்.
இதற்கு முந்தைய பிரதமரான ஹோவர்டு, இராக்கிலிருக்கும் ஆஸ்திரேலியப் படைகளை விலக்கிக் கொள்ளும் பேச்சுக்கே இடமில்லை என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. அதோடு ஆஸ்திரேலியாவின் பழங்குடியின மக்களை இழிவு படுத்துமாறு அவர் கருத்துத் தெரிவித்திருந்ததுடன் அது குறித்து மன்னிப்பு ஏதும் கோரப்போவதில்லை என்றும் தெரிவித்திருந்தார். தற்போது கெவின் ரூட், ஆஸ்திரேலியப் பழங்குடியினரிடம் ஆஸி அரசு முறையான மன்னிப்புக் கோரும் என்று குறிப்பிட்டுள்ளார்.
பல்வேறு மத, இன மக்களைக் கொண்டுள்ள ஆஸ்திரேலியா அனைத்தையும் அரவணைத்துச் செல்லும் பிரதமராகத் தான் இருக்கப் போவதாக ரூட் தெரிவித்துள்ளது குறிப்பிடத் தக்கது. ஹோவர்டு ஆஸி முஸ்லிம் மக்களைத் தனிமைப் படுத்தும் விதமாகப் பலமுறை கருத்து கூறியது நினைவு கூரத் தக்கது.