இரண்டாம் உலகப்போருக்குப் பின் உலக நாடுகள் முழுவதிலும் நவீன காலனித்துவத்தை ஏற்படுத்த முயற்சிகளை மேற்கொள்ளும் அமெரிக்கா, அரபு மற்றும் ஆப்ரிக்க நாடுகள் பலவற்றில் “பாதுகாப்பு” என்ற போலிக் காரணம் கூறி பயமுறுத்தி தனது பெரிய பல படைத் தளங்களை ஏற்கனவே ஏற்படுத்தி விட்டது.
அமெரிக்காவின் படைத் தளப் பட்டியலில் குவைத், கத்தர், பஹ்ரைன், ஒமான், சவூதி அரேபியா போன்ற அரபு நாடுகளும் பல ஆப்பிரிக்க நாடுகளும் உள்ளன. இவையல்லாமல் ஆப்கானிஸ்தானம், இராக் போன்ற நாடுகளின் மீது நேரடியாக ஆக்கிரமிப்பு யுத்தம் நடத்தி, அங்கும் தனது இலட்சகணக்கான படைவீரர்களையும் நவீன ஆயுதங்களையும் கொண்ட படைத்தளங்களை ஏற்படுத்தியுள்ளது.
ஒரு பக்கம் தீவிரவாதம், பயங்கரவாதம், பாதுகாப்பு, அல் காயிதா, தாலிபான், 9/11 போன்ற ஏட்டில் ஆதாரத்துடன் நிரூபிக்க இயலாப் பொய்க் காரணங்களைக் கூறி ஆக்ரமிப்புகளையும் ஆக்ரமித்த நாடுகளில் காலனித்துவத்தையும் ஏற்படுத்தி வரும் அமெரிக்கா, இவற்றைப் பெரிதாகக் கண்டு கொள்ளாத, நடுநிலை வகிக்கும் பல முக்கிய நாடுகளில் பொருளாதாரத்தின் மூலமும் உலக மயமாக்கலின் மூலமும் மறைமுகமாக நவீன காலனித்துவத்தை நிறுவி வருகின்றது.
இதற்காக அணு ஆயுத உடன்படிக்கை, ஏற்றுமதி/இறக்குமதி உடன்படிக்கை போன்ற இன்னபிற விஷயங்களை முன்னிறுத்தி உடன்படிக்கைகளைப் போட்டும் அதில் ஒப்புவைக்க வற்புறுத்தியும் இந்நாடுகளையும் தனது காலனித்துவப் பட்டியலில் இணைக்க முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.
உலகில் இருப்பதிலேயே மிக அதிகம் அணு ஆயுதங்களைத் தயாரித்துக் கைவசம் வைத்துள்ள, உலகில் அணு ஆயுதப் பரிசோதனையை மற்ற நாடுகளின் மீது செய்த ஒரே நாடான அமெரிக்கா, அதே அணு ஆயுதத்தை உற்பத்திச் செய்ய முயலும் ஈரானை முடக்குவதற்கான எல்லா வேலைகளையும் செய்து வரும் அதேவேளை, ஆசியாவில் முக்கிய சக்தியாக வளர்ந்து வரும் இந்தியாவுடன் அணு ஆயுத ஒப்பந்தம் செய்ய முயற்சி செய்து வருவதும் அதில் கையெழுத்திட இந்தியாவைப் பலவகைகளில் நெருக்கி வருவதும் கவனிக்கப்பட வேண்டிய விஷயங்களாகும்.
“ஆதாயம் இல்லாமல் ஆற்றோடு போக மாட்டான்” என்ற சொல்லுக்கேற்ப, உலகில் உடல் அசையாமல் மேல்தட்டு சொகுசு வாழ்க்கை வாழ்வதிலும் அதற்காக என்ன வேண்டுமெனிலும் செய்யத்துணியும் அமெரிக்கா, எப்பொழுதுமே தனக்குப் பலனளிக்காத ஒரு விஷயத்தின் பின்னால் ஒருபோதும் அலைந்து கொண்டிருக்காது என்பது உலகம் அறிந்த இரகசியமாகும். ஒரு நாட்டுடன் ஓர் உடன்படிக்கையை, அதன் ஒருபக்க இலாபங்களைப் பட்டியல் இட்டு அந்நாட்டைக் கையெழுத்திட வைக்கும் அமெரிக்காவின் செயல்பாட்டுக்குப் பின்னால் ஒளிந்திருக்கும் தீமை என்ன என்பதைக் காலப்போக்கில் மட்டுமே அந்நாட்டால் புரிந்துக் கொள்ள இயலும் என்பதற்கு அண்மைக்கால உதாரணம் தான் தென்கொரியா.
தென்கொரியாவின் மாட்டிறைச்சி இறக்குமதியில் மிகப்பெரும் பங்கை அமெரிக்கா வகித்தது. இதற்கான உடன்படிக்கையை தென்கொரியாவை ஏமாற்றி அமெரிக்கா போட்டுள்ளது. இலாப விலைக்குக் கிடைப்பதால் அமெரிக்காவிலிருந்து மிகப்பெரிய அளவில் மாட்டிறைச்சியை இறக்குமதி செய்த தென்கொரியாவிற்குக் காலப்போக்கில் கிடைத்தப் பரிசு, பல கொடிய நோய்களாகும். இதனை மிகத் தாமதமாக உணர்ந்து கொண்ட தென்கொரிய அரசு, நாட்டில் மக்களிடையே மிக அதிகமாகப் பரவிய நோயைத் தொடர்ந்து 2003ஆம் வருடம், அமெரிக்காவிலிருந்து மாட்டிறைச்சி இறக்குமதியை நிறுத்தி வைத்தது.
தனது இலட்சியத்திற்கு எவ்வகையில் ஒரு பின்னடைவு வந்தாலும் பொறுக்காத அமெரிக்க அரசு, தனது பொருளாதாரத்தில் ஒரு முக்கியப் பங்கு வகித்த மாட்டிறைச்சி ஏற்றுமதி இலாபத்தில் ஒரு பெரிய அடி கிடைத்ததற்கு மேலாக, தென் கொரியாவின் முக்கிய உணவுப் பொருளான மாட்டிறைச்சிக்குத் தன்னை நம்பியிருக்கும் நிலை மாறப்போகிறதே என்ற உணர்வும் சேர்ந்து கொள்ள, தற்பொழுது இந்தியா, இராக் அரசுகளைத் தன்னுடனான உடன்படிக்கைகளில் கையெழுத்திட நெருக்குவதைப் போன்று தென் கொரிய அரசின் அதிபர் மீதும் நெருக்குதல் அளித்து மீண்டும் மாட்டிறைச்சியை அமெரிக்காவிலிருந்து இறக்க வைத்து விட்டது.
அமெரிக்காவின் நெருக்குதலைத் தொடர்ந்து தென் கொரிய அதிபர் லீம்யூ பாக், கடந்த ஏப்ரல் மாதம் பழைய உடன்படிக்கையை மீண்டும் புதுப்பித்தார். ஆனால், அமெரிக்காவின் மாட்டிறைச்சி நோயால் ஒருமுறை மிகக் கசப்பான அனுபவம் பெற்றிருந்த மக்கள், இந்த உடன்படிக்கைப் புதுப்பித்தலுக்கு எதிராகக் கடந்த இரு மாதங்களாகத் தென் கொரியா முழுவதும் தெருவில் இறங்கிப் போராடி வந்தனர்.
இறுதியாக, இதோ தென் கொரியா அதிபர் லீயின் ஒப்புதல் வாக்குமூலத்துடன் அமெரிக்காவின் மோசமான உணவுப்பொருள் ஏற்றுமதி முகமூடியும் கழன்று விழுகின்றது. “அமெரிக்காவுடனான உடன்படிக்கை தென் கொரியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் என்ற வகையிலேயே அதனைப் புதுப்பித்தேன். ஆனால், அச்சமயம் மக்களின் நலவாழ்வைக் கணக்கில் எடுத்துக் கொள்ளாதது நான் செய்த மிகப்பெரிய தவறாகும். இந்த உடன்படிக்கை நீடிப்பது இரு பக்கமும் நன்மை விளைவிக்காது. எனவே இதனை ரத்து செய்கிறேன்” எனத் தொலைக்காட்சியில் நேரடியாக நாட்டு மக்களுடன் பேசி, மக்களின் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளார்.
தென் கொரிய அதிபர் லீயின் முடிவு, அந்நாட்டு மக்களுக்கு நன்மையை விளைவிக்கும் என்பதோடு அமெரிக்க வரலாற்றிலேயே இதற்கு முன் காணாத அளவுப் பொருளாதாரச் சீர்குலைவைத் தற்போது சந்திக்கும் அமெரிக்காவிற்கு மாட்டிறைச்சி வியாபாரத்தில் கை கொடுத்துக் கொண்டிருந்த ஒரு நாடு, அமெரிக்காவை மொத்தமாகக் கைகழுவி விட்டிருப்பது அதல பாதாளத்தை நோக்கி விரைந்து பயணம் மேற்கொண்டிருக்கும் அமெரிக்கப் பொருளாதாரத்துக்குக் கிடைத்த இன்னொரு அடியாகும்.