பேராசிரியர் ஆஷிஷ் நந்தியைக் கண்டு நரேந்திரமோடி அஞ்சி நடுங்குவது ஏன்?

பேராசிரியர். ஆஷிஷ் நந்தி
Share this:

இந்தியாவின் முதன்மையான அறிவுஜீவிகளுள் ஒருவர் எனவும் பின் காலனித்துவ ஆய்வுகளை துவக்கியவர் எனவும் மதிக்கப்படும் பேராசிரியர் ஆஷிஷ் நந்தி தற்போது ஒரு புதிய ‘அடையாள’த்தைப் பெற்றிருக்கிறார்.  குஜராத் மாநில காவல்துறைக் குறிப்புகளின்படி ‘சாதி, மதம், பிறப்பிடம் மற்றும் மொழியின் அடிப்படையில் பல்வேறு பிரிவினரிடையே பகையுணர்வை வளர்த்ததாக’ அவர் குற்றஞ்சாட்டப் பட்டிருக்கிறார்.  பேராசிரியர் நந்தியின் எழுத்துக்களுக்காக அவர் மீது குற்றம் சுமத்தப்படும் ஒரு நாள் வரும் என்று நிச்சயமாக அவரோ அவரது ஆதரவாளர்களோ கனவில் கூட நினைத்திருக்க மாட்டார்கள்.  ஆனால் அவர்கள் மிகச் சரியாகவே சொல்லி வருவது போல குஜராத்தில்தான் இப்படி நடக்க முடியாததெல்லாம் நடக்கும்.

ஜனவரி 8-ம் தேதி ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ நாளேட்டில் பேரா.நந்தி எழுதிய ‘நடுத்தர வர்க்கத்தினரைக் குற்றம் சுமத்துக’ என்ற கட்டுரையைக் குறித்து ‘தேசிய சமூக விடுதலை மன்றம்’ (National Council for Civil Liberties) என்ற அமைப்பைச் சேர்ந்த ஒரு வழக்குரைஞர் சமர்ப்பித்த மனுவை அகமதாபாத் காவல்துறை பதிவு செய்திருப்பதாக ஊடகங்கள் தெரிவித்தன.  முன்பு ஒருமுறை சில அற்பக் காரணங்களுக்காக ‘நர்மதையைக் காப்போம்’ இயக்கத்தின் தலைவியான சமூகநல ஆர்வலர் மேதா பட்கர் மீது வழக்குத் தொடர்ந்ததும் இதே அமைப்புதான் என்பதும் கவனத்தில் கொள்ளத் தக்கது.  நீதிமன்றம் இவ்வழக்கை பிறகு தள்ளுபடி செய்தது.

உண்மையைச் சொல்வதென்றால், பேரா.நந்தியின் அக்கட்டுரை நரேந்திர மோடியை மீண்டும் பதவியிலமர்த்திய டிசம்பர் 2007 குஜராத் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகளை ஆராய்ந்திருந்தது.  குறிப்பாக, மூன்று விஷயங்களைப் பற்றி அக்கட்டுரை கருத்து தெரிவித்திருந்தது.

முதலாவதாக, 2002 கலவரங்களுக்குப் பிறகு குஜராத்தில் இரண்டாந்தர குடிமக்களாக நடத்தப்படும் முஸ்லிம்களின் அவல நிலையை அக்கட்டுரை இவ்வாறு தெளிவாகப் படம் பிடித்துக் காட்டியிருந்தது.

குஜராத்தின் முஸ்லிம்களும் ‘தங்களுக்கான இடம் இதுதான்’ என்பதை பழகிக் கொண்டு விட்டார்கள்.  தங்கள் சொந்த மாநிலத்திலேயே நீதியும் நிவாரணங்களும் மறுக்கப்பட்டு, தன்னார்வலத் தொண்டு நிறுவனங்களின் தயவில் காலத்தைக் கழித்துக் கொண்டிருக்கிறார்கள்.  மாநில அரசு தர மறுக்கும் நிவாரண உதவிகளில் ஒரு பகுதியை அடிப்படைவாத நோக்கமுடைய சிலத் தன்னார்வல அமைப்பினர் தருகின்றனர்.  நிவாரண உதவிகளை வழங்கும் அதே வேளையில், குஜராத் முஸ்லிம்கள் குஜராத்திய மொழி பேசுவதை விடுத்து உருது பேச வேண்டும், பெண்கள் முக்காடிட வேண்டும், பிள்ளைகள் மதரஸாக்களுக்கு அனுப்பப்பட வேண்டும் எனவும் அவர்கள் வற்புறுத்துகின்றனர்.

இரண்டாவதாக,  முஸ்லிம்களின் அவல நிலையை சுட்டிக் காட்டியதோடல்லாமல், அக்கட்டுரை குஜராத்தில் மதச்சார்பின்மை அடிப்படையிலான அரசியல் கூட்டமைப்புகள் இயங்கும் சூழ்நிலையையும் விளக்குகிறது.  இத்தகைய கூட்டமைப்புகள் மற்றும் தனிநபர்களைப் பற்றியும் பேரா.நந்தி தனது கட்டுரையில் விமர்சிக்கத் தவறவில்லை.

சங்பரிவார அமைப்புகளை எதிர்ப்பவர்களின் மதச்சார்பின்மை கொள்கை உரிய பலனை அளிக்கவில்லை.  மதச்சார்பற்ற வழக்குரைஞர்கள் மற்றும் சமூகநல ஆர்வலர்களின் மூலம் பயனடைபவர்கள்கூட மதச்சார்பின்மை கொள்கைகளை தேவைப்படும் நேரத்தில் ஒரு கருவியாக மட்டும் உபயோகித்துக் கொள்கின்றனர்.  அவர்களுக்கு இக்கொள்கைகள் புரிவதுமில்லை; அவர்கள் அவற்றை மதிப்பதுமில்லை. பாதிக்கப்படும் மக்களுக்கு அவர்களின் மதங்களே ஆறுதலளிக்கின்றன.  அவர்கள் தாக்கப்படும்போதெல்லாம் தங்கள் நம்பிக்கைகளை மேலும் பற்றிப் பிடித்துக் கொள்கிறார்கள். உண்மையில், ஆழமற்ற மதச்சார்பின்மைக் கொள்கைகள் காந்திய கொள்கைகளின் முதுகெலும்பையே முறித்து, அலி ஷரியதி, டெஸ்மண்ட் டுட்டு, தலாய் லாமா போன்றோர் உருவாவதையும் தடுக்கிறது. இவர்களைப் போன்றவர்கள் வறிய மற்றும் வலிமையற்ற மக்களின் துயரங்களில் தலையிட்டு அவற்றைப் போக்குவதற்கு குரல் கொடுக்கக் கூடியவர்கள்.

குஜராத்தின் படித்த நடுத்தர வர்க்கத்தினர், போலியான சமுதாயப் பற்று, மதாபிமானம் என்ற போர்வையில் அராஜகங்களுக்கு துணைபுரிவதையும் இக்கட்டுரை கடுமையாகச் சாடுகிறது.

படித்த நடுத்தர வர்க்கத்தினரின் பிடியிலிருந்து குஜராத்தை விடுவிப்பது எளிதானதன்று. இந்த வர்க்கத்தினர் போராட்ட மதவாதத்தின் மூலம் தங்களுக்கு ‘போர்க்குணம் கொண்ட சமுதாயம்’ என்றதொரு புதிய அடையாளமும் சுயமதிப்பும் கிடைப்பதாக நம்புகிறார்கள். இதே காரணங்களுக்காகத்தான் பெங்காலி பாபுகள், மஹராஷ்ட்ரிய பிராமணர்கள், காஷ்மீர் முஸ்லிம்கள் போன்றோரும் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் வன்முறைகளில் நம்பிக்கைக் கொண்டிருந்தனர்.  குஜராத்தின் இந்த வர்க்கம் தங்கள் கரங்களில் இரத்தக்கறை படியாமலேயே, திட்டமிடுதல், பணஉதவி மற்றும் ஒருங்கிணைப்பு ஆகியவற்றின் மூலமாகப் படுகொலைகளை அரங்கேற்றி அதன் இரத்த வாடையை நுகர்ந்து கொண்டிருக்கிறார்கள். இக்கொலைகளைச் செய்பவர்கள் பழங்குடிகள், தலித்கள் போன்ற மிக கீழ்த்தட்டைச் சேர்ந்த மக்கள்தான். சமீப காலத்தில் நடுத்தர வர்க்கத்தினரின் கட்டுப்பாட்டில் உள்ள ஊடகங்களும் கல்வி நிறுவனங்களும் ‘வெறுப்புணர்வை உற்பத்தி செய்யும் தொழிற்சாலை’களாக மாறிப்போயிருக்கின்றன. தேசியவாதம் என்ற பெயரில் இரத்தவெறி கொண்ட பொறுப்பற்ற பல வெளிநாட்டு வாழ் இந்தியர்களும், பாதுகாப்பான தூரத்தில் இருந்து கொண்டு இது போன்ற அராஜக செயல்பாடுகளுக்கு ஆதரவளித்துக் கொண்டிருக்கின்றனர்.

பேரா. நந்தியின் கருத்துக்களை படிப்பவர்கள் அனைவரும் அவற்றுடன் ஒத்துப்போவர் என்றுச் சொல்ல முடியாது என்றாலும், அவரது எழுத்துக்களில் வெற்று வாதங்கள் இருப்பதில்லை என்பதையும் சமுதாயம் எதிர்கொள்ள வேண்டிய சவால்களை அவை தெளிவாக விவரிக்கின்றன என்பதையும் புரிந்து கொள்வர். எல்லோருடைய மனத்திலும் இயல்பாகத் தோன்றும் ஒரு கேள்வி, பேரா.நந்தியின் மீது கிரிமினல் வழக்குப் பதியும்படி காவல்துறைக்கு சமிக்ஞை கொடுக்கப்படும் அளவிற்கு இக்கட்டுரை குஜராத் அரசு வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியதற்குக் காரணம் என்னவாக இருக்கும்? என்பதே.

பொதுவாகவே, தமது கொள்கைகளை எதிர்ப்பவர்களை இலக்காக்கி அவர்கள் மீது பலவகைகளில் களங்கம் சுமத்துவது ஹிந்துத்துவப் படையினரின் நடைமுறை. எதிர்க்கருத்துக் கொண்டவர்களை வாயடைத்துப் போகச் செய்யும் அரசியல் உத்தி இது. பேரா. நந்தி மீதான இந்த வழக்கும் இவ்வகையைச் சார்ந்ததே.

கடந்த ஆறு ஆண்டு கால குஜராத்தின் வரலாற்றில், சிறுபான்மையினர் மீதான வெறுப்புணர்வை விதைக்கும் இந்துத்துவச் செயல்திட்டங்களுக்கு எதிராக எழுப்பப்பட்ட குரல்கள் அடக்கப் பட்டதற்கு ஏராளமான உதாரணங்கள் இருக்கின்றன. வெவ்வேறு சந்தர்ப்பங்களில் சமூகநல ஆர்வலர்கள் சாராபாய், நஃபிஸா அலி, ஜி.என்.டேவி போன்றோர் இத்தகைய அடக்குமுறைகளுக்கு ஆளானதை குறிப்பிடலாம்.  பேரா. நந்தியின் விவகாரத்தில், ஒருவேளை அவர் ஆர்.எஸ்.எஸ் போன்ற இயக்கங்கங்களின் எதிர்காலத் திட்டங்களை தெளிவாக முன்னறிவிப்புச் செய்தது சில சக்திகளுக்குப் பிடிக்கவில்லை போலும்.

உருது கவிதைகளின் ஸ்தாபகர் என மதிக்கப்படும் வலி குஜராத்தியின் அடக்கவிடம் நிர்மூலமாக்கப் பட்டது, இந்திய முஸ்லிம்களின் பன்முகப்பட்ட செறிவான கலாச்சார அடையாளங்களை அழிக்கும் ஒரு முயற்சியாகவே தோன்றுகிறது.  சீக்கிய தீவிரவாதம் தலைதூக்குவதற்கு ராஜிவ் காந்தி காரணமாக இருந்தது போலவே, இந்தியாவில் அடிப்படைவாத இஸ்லாமின் வளர்ச்சிக்கு சங்பரிவாரங்கள் ஒரு முக்கிய காரணம் என்பதை வருங்காலத் தலைமுறை நினைவுகூரும்.

பேரா. ஆஷிஷ் நந்தி மீது போடப்பட்டிருக்கும் கிரிமினல் வழக்கு, பாஜக மத்தியில் ஆட்சியிலிருந்தபோது கட்டவிழ்த்து விடப்பட்டிருந்த அவதூறுப் பிரச்சாரங்களை நினைவு படுத்துகிறது.  1998-ல் பாஜக ஆட்சியைப் பிடித்ததைத் தொடர்ந்து கல்வி பாடத்திட்டங்களை தமது கொள்கைகளுக்குத் தோதாக மாற்றியமைக்க முயன்றபோது, சங்பரிவாரங்களின் வரலாற்றுத் திரிப்புகளை எதிர்த்த அறிவுஜீவிகளும் கல்வியாளர்களும் பலவிதமான தாக்குதல்களை எதிர்கொள்ள நேர்ந்தது.  பாஜகவினர், அவர்கள் மாற்றிக் காட்ட விரும்பிய இந்திய வரலாற்றை ஒப்புக் கொள்ளாத அறிஞர்கள் மற்றும் வரலாற்றாய்வாளர்களை திட்டமிட்டு அவமானப் படுத்தினர்; அவர்கள் காட்டும் ஆதாரப்பூர்வமான வரலாற்றை அங்கீகரிக்காமல் உதாசீனப் படுத்தினர்.  இந்திய வரலாற்று ஆய்வு மன்றத்தின் ஆதரவில், பேராசிரியர்கள் சுமித் சர்க்கார், கே.என். பணிக்கர் ஆகியோரின் தலைமையில் நடந்து கொண்டிருந்த ‘விடுதலையை நோக்கி’ என்ற ஆய்வுத்திட்டம் நிறுத்தப் பட்டது.  இவர்களைப் போன்ற நடுநிலை வரலாற்று ஆய்வாளர்களுக்கு, ‘ஹிந்து எதிர்ப்பு ஐரோப்பிய இந்தியர்கள்’ என்று ஆர்.எஸ்.எஸ் தலைவர் சுதர்சன் பெயரிட்டார்.  மேலும், இந்த வரலாற்றாய்வாளர்களின் தாக்கம் இந்திய கல்வித்திட்டத்தில் இருந்துவிடக் கூடாது என்பதற்காக தேசிய கல்வி ஆய்வு மற்றும் பயிற்சி மன்றம் (NCERT) மிக முனைப்புடன் செயல் பட்டது.   2001-ல், ‘இந்துக்களின் மத உணர்வுகளை புண்படுத்துகிறது’ என்று காரணம் காட்டி பாடப்புத்தகங்களிலிருந்து பல பகுதிகளை NCERT நீக்கிக் கொண்டிருந்த சமயத்தில், ஆரிய சமாஜிகளின் குழு ஒன்று அப்போதைய மனித வளத்துறை அமைச்சர் முரளி மனோஹர் ஜோஷியைச் சந்தித்து, இத்திட்டங்களுக்கு இடைஞ்சலாக இருந்த வரலாற்றாய்வாளர்கள் ரொமிலா தாப்பர், ஆர்எஸ் ஷர்மா, அர்ஜுன் தேவ் ஆகியோரை கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தது.  ஜோஷியும் தம் பங்கிற்கு, ‘ஆயுதந்தரித்த பயங்கரவாதிகளை விட கல்வி சார்ந்த பயங்கரவாதிகள் மிக மோசமானவர்கள்’ என அவ்வப்போது தமது ‘சொந்த ஆய்வுக் கருத்தினை’ வலியுறுத்திக் கொண்டிருந்ததும் குறிப்பிடத் தக்கது.

இது குறித்த பேராசிரியர். நந்தியின் தொலைக்காட்சி பேட்டி

தமிழாக்கம்: இப்னு பஷீர்


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.