மங்களூரு விமான நிலையத்தில் வெடிகுண்டுகள் வைத்த தீவிரவாதி ஆதித்யா ராவ் கைது!

பெங்களூரு: மங்களூரு விமான நிலையத்தில் வெடிகுண்டுகள் சிக்கிய விவகாரத்தில், ஒரு குறிப்பிட்ட சிறுபான்மை சமூகத்தினர் மீது பழி சுமத்தப்பட்டது. ஆனால், காவல்துறையின் ஆழமான விசாரணை மூலம், பெங்களூரு போலீசில் நேற்று ஆதித்யா ராவ் என்பவர் கைது செய்யப்பட்டார். அவரை போலீசார் மங்களூரு அழைத்து சென்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கர்நாடகாவின் மங்களூரு சர்வதேச விமான நிலையத்தின் டிக்கெட் கவுண்ட்டர் அருகே கடந்த 20-ந்தேதி பை ஒன்றில் 3 வெடிகுண்டுகள் வைக்கப்பட்டு இருந்தன. இது குறித்து தகவல் அறிந்து வந்த வெடிகுண்டு நிபுணர்கள், அவற்றை கைப்பற்றி செயலிழக்க வைத்தனர். இதன்மூலம் மங்களூரு விமான நிலையத்தை தகர்க்க முயன்ற சதி முறியடிக்கப்பட்டது.

நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கிய போலீசார், விமான நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ஆட்டோவில் வந்து வெடிகுண்டுகள் இருந்த பையை அங்கு வைத்து சென்றது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து அந்த மர்ம நபரையும், அவருக்கு பின்னால் இருக்கும் கும்பலையும் பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்து தேடி வந்தனர். இதற்காக மர்மநபரின் புகைப்படத்தை கர்நாடக மாநிலத்தில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் அனுப்பி வைத்தனர்.

இதில் அந்த நபர் உடுப்பி மாவட்டம் மணிப்பால் அருகே கே.எச்.பி. காலனியை சேர்ந்த ஆதித்யா ராவ் என்ற என்ஜினீயர் என தெரியவந்தது. உடனே அவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டன. மேலும் ஆதித்யா ராவின் தந்தை, உறவினர்களிடமும் போலீசார் விசாரணை நடத்தி தகவல்களை பெற்றுக்கொண்டனர்.

இந்த நிலையில், தலைமறைவாக இருந்த ஆதித்யா ராவ் நேற்று காலை 8.30 மணியளவில் பெங்களூரு நிருபதுங்கா ரோட்டில் உள்ள போலீஸ் டி.ஜி.பி. அலுவலகத்திற்கு வந்தார். மங்களூரு விமான நிலையத்தில் வெடிகுண்டுகளை வைத்தது தான்தான் என்றும், அந்த விவகாரத்தில் போலீசில் சரணடைய வந்திருப்பதாகவும் போலீசாரிடம் அவர் கூறியதாக தெரிகிறது.

இதையறிந்த உயர் அதிகாரிகள் அருகில் உள்ள அல்சூர்கேட் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அங்கு வந்த அல்சூர்கேட் போலீசார் ஆதித்யா ராவை வாகனத்தில் ஏற்றி போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு அவரிடம் விசாரணை நடத்தி பின்னர் அவரை கைது செய்தனர். பின்னர் இது குறித்து மங்களூரு போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

அதன்பேரில் மங்களூரு உதவி போலீஸ் கமிஷனர் பெல்லியப்பா தலைமையிலான போலீசார், விமானம் மூலம் பெங்களூரு சென்றனர். அவர்களிடம் அல்சூர்கேட் போலீஸ் நிலையத்தில் வைத்து ஆதித்யா ராவை பெங்களூரு போலீசார் ஒப்படைத்தனர். முன்னதாக தனியார் மருத்துவமனையில் ஆதித்யா ராவுக்கு மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்பட்டன.

பின்னர் பெங்களூரு கூடுதல் மெட்ரோ பாலிட்டன் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நீதிபதி முன்னிலையில் பலத்த பாதுகாப்புடன் ஆதித்யா ராவ் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை மங்களூருவுக்கு கொண்டுசென்று விசாரிக்க போலீசாருக்கு நீதிபதி அனுமதி வழங்கினார். அதைத்தொடர்ந்து, அவரை பலத்த பாதுகாப்புடன் மங்களூருவுக்கு போலீசார் அழைத்து சென்றனர். அங்கு அவரிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.

இந்த நிலையில் கைது செய்யப்பட்ட ஆதித்யா ராவ் குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இவர் என்ஜினீயர் மட்டுமின்றி எம்.பி.ஏ. பட்டதாரியும் ஆவார். ஏற்கனவே கடந்த 2018-ம் ஆண்டு பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்திற்கும், சிட்டி ரெயில் நிலையத்திற்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக போலீசாரால் கைது செய்யப்பட்டு இருந்தார்.

இதில் சிக்பள்ளாப்பூர் சிறையில் 9 மாதம் சிறைவாசம் அனுபவித்த பின்பு கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் வெளியே வந்திருந்தார். பின்னர் கடந்த ஒரு மாதமாக மங்களூருவில் உள்ள ஒரு ஓட்டலில் அவர் வேலை செய்துள்ளார். தான் படித்த படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்காத விரக்தியில் விமான நிலையங்களுக்கு மிரட்டல் விடுப்பது உள்ளிட்ட சிறுசிறு குற்றங்களில் ஈடுபட்டு வந்த அவர், தற்போது விமான நிலையத்தில் வெடிகுண்டு வைத்தது தொியவந்துள்ளது.

இதற்காக ஆன்லைன் மூலம் வெடிகுண்டு தயாரிக்க தேவையான பொருட்களை வாங்கியுள்ளார். யூடியூப் மூலம் வெடிகுண்டுகள் தயாரிப்பது எப்படி? என்பதை அறிந்து கொண்டுள்ளார். அதன்மூலம் கிடைத்த தகவல்கள் அடிப்படையில் வெடிகுண்டு தயாரித்ததும், வெடிகுண்டு தயாரித்தபோது அவரது கையில் காயங்கள் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

அவர் எதற்காக மங்களூரு விமான நிலையத்தில் வெடிகுண்டுகளை வைத்தார்? இந்த சம்பவத்திற்கு பின்னால் வேறு யாரும் உள்ளார்களா? போன்றவை குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இதற்கிடையே கைது செய்யப்பட்ட ஆதித்யா ராவுக்கும், எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என அவரது குடும்பத்தினர் தெரிவித்து உள்ளனர்.

இது தொடர்பாக அவரது சகோதரர் அக்‌ஷத் ராவ் கூறுகையில், ‘ஆதித்யாராவ் எனது மூத்த சகோதரர். கடந்த முறை அவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தபோது அவருக்கு அறிவுரை கூறினோம். ஆனால் அவர் கேட்கவில்லை. இதனால் அவரை வீட்டில் இருந்து வெளியேற்றிவிட்டோம். அவருடன் நாங்கள் எந்த தொடர்பிலும் இல்லை. அவருடைய செயலுக்கு நாங்கள் பொறுப்பேற்க முடியாது. கடந்த 2 ஆண்டுகளாகவே நாங்கள் அவருடன் தொடர்பில் இல்லை. அவரிடம் இருந்து பிரிந்துதான் நாங்கள் வாழ்கிறோம்’ என்று தெரிவித்தார்.

விமான நிலையத்தில் வெடிகுண்டு வைத்த வழக்கில் என்ஜினீயர் கைது செய்யப்பட்ட சம்பவம் மங்களூருவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நன்றி: தினத்தந்தி (23-01-2020)

விகடன் (25-01-2020)

தமிழ் இந்து (23-01-2020)

தினமலர் (18-03-2022)

தினமணி (17-03-2022)

FOLLOW-UP:

கைதான ஆதித்யா ராவ்-இடம் மேற்கொண்ட விசாரணையில் ஏற்கனவே பெங்களூரு விமான நிலையம் மற்றும் பெங்களூரு சிட்டி ரெயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதும், ஒரு வருடம் சிறைவாசம் அனுபவித்து பின்னர் வெளிவந்ததும் விடுதலையாகி இருந்ததும் போலீசாருக்கு தெரிய வந்தது.

மேலும் இதுபோன்ற பயங்கரவாத செயலில் ஈடுபட்டால் நான் பிரபலம் அடைவேன், அதனால்தான் விமான நிலையத்தில் வெடிகுண்டு வைத்தேன் என்று கூறி ஆதித்யா ராவ் போலீசாரை வியக்க வைத்தார்.

விசாரணைக்கு பிறகு அவர் மங்களூரு மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

20 ஆண்டு கடுங்காவல் சிறை

அதையடுத்து அவரைப்பற்றி பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வந்தது. இந்த நிலையில் அவர் மீதான விசாரணையை முடித்து மங்களூரு 4-வது கூடுதல் செசன்சு மற்றும் விரைவு கோர்ட்டில் பஜ்பே போலீசார் 700 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். இந்த வழக்கு நீதிபதி பல்லவி முன்னிலையில் நடந்தது. விசாரணை முடிவடைந்த நிலையில் நேற்று நீதிபதி பல்லவி இவ்வழக்கில் தீர்ப்பு கூறினார்.

இந்த சந்தர்ப்பத்தில் கோர்ட்டில் நீதிபதி முன்பு ஆதித்யா ராவை போலீசார் ஆஜர்படுத்தினர். அப்போது இந்த வழக்கில் குற்றவாளியான ஆதித்யா ராவுக்கு வெடிகுண்டுகளை கையாண்ட குற்றத்திற்காக 5 ஆண்டு சிறைத்தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும், அபராத தொகையை செலுத்த தவறினால் மேலும் 6 மாதம் சிறைத்தண்டனையும் விதித்து உத்தரவிட்டார்.

மேலும் பயங்கரவாத செயலில் ஈடுபட்ட குற்றத்திற்காக 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனையும், ரூ.10 ஆயிரமும் அபராதமும், அதை செலுத்த தவறினால் மேலும் 6 மாதம் சிறைத்தண்டனையும் விதித்து நீதிபதி பல்லவி உத்தரவிட்டார். மேலும் இந்த தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்கவும் அவர் தனது தீர்ப்பில் கூறியிருந்தார்.

இதையடுத்து ஆதித்யா ராவை போலீசார் மீண்டும் மங்களூரு மத்திய சிறையில் அடைத்தனர்.

நன்றி: தினத்தந்தி (16-03-2022)