காவிமயமாக்கப்பட்ட பாடப்பகுதிகள் நீக்கப்படும் – கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு

ஹிந்துத்துவ சிந்தனைகளைப் பிஞ்சு நெஞ்சங்களில் விதைக்கும் நோக்கத்துடன் இடைச்செருகலாக சேர்க்கப்பட்ட பாடப்பகுதிகள், பள்ளி பாடப்புத்தகங்களிலிருந்து உடனடியாக நீக்கப்படும் என்று கல்வி அமைச்சர் தங்கம் தென்னரசு சட்டசபையில் அறிவித்துள்ளார்.

பாடபுத்தகங்களில் சில பகுதிகள் ஹிந்துத்துவ மயமாக்கும் எண்ணத்துடன் திட்டமிட்டுச் சேர்க்கப்பட்டது என்றும் அவற்றை உடனே நீக்கம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இந்திய விடுதலைச் சிறுத்தைகள் (Dalith Panthers of India) இயக்கத்தின் உறுப்பினர் ரவிக்குமார் விடுத்த கோரிக்கைக்கு பதிலளிக்கையில், கல்வியமைச்சர் தென்னரசு இவ்வாறு கூறியுள்ளார்.

திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சிப்பொறுப்பை ஏற்ற பிறகு கல்வித்துறையை காவித்துறை ஆக்குவதற்கான முயற்சிகள் எதுவும் இதுவரை நடைபெறவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.  திணிக்கப்பட்ட அப்பகுதிகளைப் பாடப்புத்தகங்களில் இருந்து நீக்கம் செய்வதற்கான நடவடிக்கைகள் துரிதமாக மேற்கொள்ளப்படும் என்று அவர் உறுதியளித்துள்ளார்.

கடந்த அ.தி.மு.க ஆட்சியில் காவிமயமாக்கும் சிந்தனையுள்ள சில பாடப்பகுதிகள் பள்ளிப் பாடப்புத்தகங்களில் சேர்க்கப்பட்டதும், தேசப்பிதா மகாத்மா காந்தியடிகளைக் கொலை செய்த கோட்சே ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தைச் சார்ந்தவர் என்ற உண்மையைப் பாடபுத்தகத்திலிருந்து மறைத்ததும் நினைவிருக்கலாம்.

கடந்த வாரத்தில் இதே பிரச்சினை ஒன்று அண்டை மாநிலமான கேரளத்தில் எழுப்பப்பட்டு  சர்ச்சைகளைக் கிளப்பிய சில பகுதிகள் பாடப்புத்தகங்களில் இருந்து நீக்கப்பட்டது இங்கே குறிப்பிடத்தக்கது.

– சத்தியமார்க்கம்.காம் செய்திக்குழு