ஊடகங்களின் வலிமை என்ன என்பதையும் அதனை வைத்து ஒரு நாட்டையே அழிக்க மேற்கத்திய ஊடகங்கள் எவ்வாறு துணை புரிகின்றன என்பதையும் இஸ்ரேலின் தற்போதைய லெபனான் மீதான அத்துமீறிய அராஜக தாக்குதலிலிருந்து தெளிவாக அறிந்து கொள்ளலாம். இத்தாக்குதலுக்குக் காரணமாக இஸ்ரேல், தனது இரு இராணுவ வீரர்களை ஹிஸ்புல்லா படையினர் இஸ்ரேலில் புகுந்து பிணையக் கைதிகளாக்கி பிடித்துச் சென்றுவிட்டனர் என்று கூறினர். இதனை அப்படியே மேற்கத்திய ஊடகங்கள் திரும்பத் திரும்ப ஒப்பித்துக்கொண்டே இருந்தது. அதே நேரத்தில் இஸ்ரேல் தனது விமானப்படையை கடந்த 12-07-2006 முதல் லெபனான் மீது ஏவி, அதன் தகவல் தொடர்பு சாதனங்களக் குண்டுவீசி தகர்த்து துண்டித்துவிட்டு அத்துடன் திருப்தியடையாமல் தண்ணீர், மின்சாரம், விமான நிலையம், முக்கியசாலைகள் என பொதுமக்களுக்கு அத்தியாவசியமான அனைத்து அடிப்படை வசதிகளையும் குறிவைத்துத் தகர்க்கத் தொடங்கியது. இஸ்ரேல் கூறிய காரணம் உண்மையா என எவரும் ஆராய்வதற்கு முன்பே இவை அனைத்தையும் கச்சிதமாக செய்து முடித்தது.
ஆனால் நடந்தது என்ன?
சம்பவம் நடந்ததாகக் கூறப்படும் அன்று இஸ்ரேலிய அதிரடிப் பயிற்சி பெற்ற சிப்பாய்கள் லெபனானின் தெற்கு பகுதியில் அத்துமீறி நுழைந்தனர். அவர்களின் எல்லை மீறலை தடுத்து நிறுத்த ஹிஸ்புல்லாஹ் போராளிகள் முயன்றபோது அங்கு ஓர் சிறிய மோதல் உருவானது. இதில் இஸ்ரேலின் ஒரு பீரங்கியினை ஹிஸ்புல்லா படையினர் தகர்த்தனர். அந்த மோதலில் 6 இஸ்ரேலிய சிப்பாய்கள் கொல்லப்பட்டனர். மேலும் இருவரை ஹிஸ்புல்லாஹ் போராளிகள் கைது செய்து அவர்களின் ரகசிய இடத்திற்கு கொண்டு சென்று விட்டனர்.
இச்சம்பவம் நடந்தது லபனானின் தெற்கு பகுதியில் உள்ள அல் ஷாப் என்ற கிராமத்திலாகும். இதனை லெபனானை தலைமையகமாகக் கொண்டு இயங்கும் The National Council of Arab Americans என்ற அமைப்பினரின் “டாங்கை திரும்ப எடுத்துச் செல்வதற்கு அல் ஷாப் கிராமத்தினுள் மீண்டும் நுழைய இஸ்ரேலிய இராணுவத்தினரால் இன்னும் முடியவில்லை. அத்துமீறி நுழைந்ததில் கொல்லப்பட்ட இஸ்ரேலிய இராணுவத்தினரின் உடல்கள் தற்போதும் அங்கேயே கிடக்கின்றன” என்ற அவர்களின் சமீபத்திய அறிக்கை உண்மைப்படுத்துகிறது.
ஹிஸ்புல்லாஹ் போராளிகள் எல்லையைக் கடந்து தங்கள் நாட்டினுள் நுழைந்தவர்களைத் தான் கைது செய்தனர் என்ற செய்தி வெளிவரும் முன்னே முந்திக் கொண்டு தங்கள் நாட்டிற்குள் நுழைந்து தமது படைவீரர்களை ஹிஸ்புல்லாஹ் படையினர் அநியாயமாக கடத்திச் சென்று விட்டனர் என்பது போன்ற தோற்றத்தினை தங்களுக்கு வெண்சாமரம் வீசும் மேற்கத்திய ஊடகங்களின் மூலம் உலக அரங்கத்தின் முன்பு திரும்பத் திரும்ப கூறவைத்து அவர்களை மீட்பதற்காகவே தாக்குதல் தொடுப்பதாகக் கூறிக் கொண்டு லபனானை அழித்துக் கொண்டிருக்கிறது இஸ்ரேல்.
இஸ்ரேல் பொய்யான காரணம் கூறி ஒரு பக்கம் லெபனான் மீது வான் வழியாகவும் தரை வழியாகவும் தாக்குதல் நடத்திக் கொண்டிருக்கும் அதே நேரம் இந்த மேற்கத்திய ஊடகங்கள் என்ன செய்கின்றன? தங்களது நாட்டின் மீது அநியாயமாக தாக்குதல் தொடுத்து அப்பாவி மக்களை கொத்து கொத்தாக கொன்றொழித்துக் கொண்டிருக்கும் இஸ்ரேலிடமிருந்து தங்களை காத்துக் கொள்ள எதிர் தாக்குதல் தொடுக்கும் ஹிஸ்புல்லாஹ் போராளிகளைப் பயங்கரவாதிகளாக சித்தரித்து இஸ்ரேலின் லெபனான் மீதான தாக்குதலை நியாயப்படுத்த முயற்சிக்கின்றன.
இதற்கு உதாரணமாக B.B.C யில் கடந்த 20.07.2006 இரவு 9 மணிக்கு ஒளிபரப்பப்பட்ட HardTalk நிகழ்ச்சி மற்றும் அதே நேரம் Euro News சானலில் ஒளிபரப்பப்பட்ட No Comments நிகழ்ச்சி தொகுப்பைக் காணலாம். தமிழகத்தில் முஸ்லிம் சமூகத்தை “தீவிரவாதிகள்” என்ற அடைமொழியுடன் முத்திரைக் குத்துவதற்கு பேருதவியாக இருந்த சன் குழுமத்தைச் சார்ந்த சன் நியூஸ் இதே நாள் இதே நேரம் இஸ்ரேலிய தாக்குதலைக் குறித்து கொடுத்த செய்தி மேற்கத்திய ஊடகங்களில் வரும் செய்தியை எவ்வித ஆராய்ச்சியோ, நடுநிலை சிந்தனையோ இன்றி அப்படியே பிரதிபலிக்கும் கேடுகெட்ட செயலுக்கு தக்க சான்றாகும். ஆம். தமிழ்நாட்டின் சன் தொலைக்காட்சியில் (20.07.2006 இரவு 8 மணி செய்தியில்) இஸ்ரேலில் நடந்த ஒரு திருமண நிகழ்ச்சியைக் குறித்த செய்தியில் குறிப்பிடும் போது, “ஹிஸ்புல்லா தீவிரவாதிகளின் பயங்கரமான தாக்குதலுக்கு பயந்து இஸ்ரேலில் பதுங்கு குழியில் நடைபெறும் திருமணம்” என்று குறிப்பிட்டனர்.
மட்டுமல்ல அதனை முழுமையாக காண்பித்து ஹிஸ்புல்லா தீவிரவாதிகளின் அட்டூழியத்தால் இஸ்ரேலியருக்கு தினசரி வாழ்வு பாதிக்கப்பட்டுள்ளது என்று கூறினர். இது போன்ற ஓர் வஞ்சகமும் துவேஷமும் ஒருங்கே நிறைந்த ஒரு மனிதாபிமானமற்ற செய்தியை எங்கும் காண இயலாது. இவர்கள் இச்செய்தியினை வாசித்த அதே நாளில் இஸ்ரேலின் காட்டுமிராண்டித்தனமான விமானத்தாக்குதலுக்கு குழந்தை, பெண்கள் உட்பட 263 க்கு மேற்பட்ட அப்பாவி பொதுமக்கள் லபனானில் கொல்லப்பட்டிருந்தனர்.
மட்டுமல்லாமல் பெய்ருட் உள்பட பல நகரங்களின் மேல் இஸ்ரேல் பொழிந்த குண்டு மழையினால் 1 இலட்சத்திற்கும் மேபட்ட பொதுமக்கள் இருப்பிடம் இன்றி வீதிக்கு கொண்டு வரப்பட்டிருந்தனர். ஒரு பக்கம் லெபனானில் சரியான குடிநீர் மற்றும் மருத்துவ வசதி கூட இல்லாத நிலையில் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை முதலிய எவ்வித அடிப்படை உதவியும் கிடைக்காமல் லட்சக்கணக்கான மக்கள் தெருவில் கிடக்கும் போது மறுபக்கத்தில் இஸ்ரேலில் ஒரு திருமணம் எல்லா பாதுகாப்புடன் உற்சாகமாக நடந்தேறியது தான் இவர்களுக்கு மிகுந்த பரிதாபத்திற்குரிய செய்தியாக தெரிந்திருக்கிறது.
இதுதான் மேற்கத்திய ஊடகங்களின் அழுகிப் போன உண்மையான முகங்கள். மேற்கில் உள்ள ஊடகங்களின் நிலை இவ்வாறு எனில் சமாதானத்திற்கும், நடுநிலைக்கும் பெயர்பெற்ற உலகில் பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் உள்ள ஊடகங்கள் இச்சம்பவத்தை எவ்வாறு செய்தியாக்கின என்பதை அறிந்து கொள்வது மிக முக்கியமாகும். இஸ்ரேலின் தற்போதைய லெபனான் மீதான தாக்குதல் சம்பவத்திற்கே வருவோம். அனைவரும் இத்தாக்குதலை தற்போதும் ஹிஸ்புல்லாவின் அத்துமீறலால் நடைபெறுவதாக எண்ணிக் கொண்டிருக்கின்றனர். ஆனால் சம்பவத்தை சற்று உற்று நோக்குபவர்களுக்கு கூட இதற்கு அது காரணமல்ல என்பது தெளிவாக விளங்கும். சரி அப்படியே ஹிஸ்புல்லா இஸ்ரேலிய சிப்பாய்களை பிடித்து வைத்தது தான் தாக்குதலுக்கு காரணமெனில், ஹிஸ்புல்லா மற்றும் ஹமாஸின் ஆயிரக்கணக்கான வீரர்களை இஸ்ரேல் சிறையில் வைத்துள்ளதே?
தங்கள் கைதிகளை விடுவிக்க அடுத்த நாட்டின் மீது தாக்குதல் தொடுப்பது தவறில்லை எனில், ஹமாஸும் ஹிஸ்புல்லாவும் இஸ்ரேல் மீது போரை ஆரம்பிப்பதல்லவா நியாயம்? மேலும் இங்கு மற்றொரு விஷயமும் கவனத்தில் கொள்ள வேண்டியதாகும். இரு படை வீரர்களுக்காக அந்நாட்டின் மீது தாக்குதல் தொடுத்திருப்பதாக காரணம் கூறும் இஸ்ரேலின் நிலைபாடு இதற்கு முன் இஸ்ரேலின் சிப்பாய்கள் எவரும் ஹிஸ்புல்லா மற்றும் ஹமாஸ் படையினரால் தாக்கப்பட்டிருக்கவில்லை என்பதை கூறாமல் கூறுகின்றன. ஆனால் இதற்கு முன் இஸ்ரேலிய இராணுவம் ஹமாஸ் மற்றும் ஹிஸ்புல்லாவினால் மிகுந்த சேதம் அடைந்துள்ளது தான் உண்மை.
பின் எதற்காக இரு சிப்பாய்களுக்காக இவ்வளவு பெரிய ஓர் தாக்குதலை நடத்த வேண்டும்?
காரணம் மிகவும் வெட்டவெளிச்சமானது. இத்தாக்குதலின் பின்னணியில் இஸ்ரேலுக்கு ஆயுத உதவியை தொடர்ந்து வழங்கிக் கொண்டிருக்கும் அமெரிக்காவின் கைகள் பலமாக உள்ளன. அதற்கென ஓர் தனி திட்ட வரைபடம் உள்ளது. உலகில் தன்னை மிஞ்ச வேறு வல்லரசுகளோ தனக்கு சவாலாக வேறு சக்திகளோ வளர்வதை அமெரிக்கா ஒரு போதும் விரும்பியதில்லை. ஒருங்கிணைந்த ரஷியாவின் வீழ்ச்சிக்குப் பின் தனக்கு மிகப்பெரும் சவாலாக வரும் என அமெரிக்கா கணித்துள்ளது, மத்திய ஆசியாவிலுள்ள அரபு ராஜ்ஜியங்களையாகும்.
எனவே அங்கு தனக்கென ஓர் இருப்பிடத்தை உறுதியாக்கவே இஸ்ரேலை அங்கு வளர்த்தியெடுத்தது. தற்போது இஸ்ரேலை அங்கு முக்கிய ஓர் சக்தியாக உருவாக்க அதன் அண்டை நாடுகளை ஆக்ரமித்து அதன் பகுதிகளை இஸ்ரேலோடு சேர்ப்பதற்கு அது உதவிக் கொண்டிருக்கிறது. தற்போதைய லெபனான் தாக்குதலில் கூட லெபனானின் சில கிராமங்களை இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ளதாக வரும் செய்திகள் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியதாகும்.
–அபூசுமையா