வாஜ்பாய் மற்றும் அத்வானிக்கு மாபியா குழுக்களுடன் தொடர்பு – உமாபாரதி

உமாபாரதி

முன்னாள் பிரதமர் வாஜ்பாயிக்கும் முன்னாள் உள்துறை அமைச்சர் எல். கே. அத்வானிக்கும் போதைப்பொருள் கடத்தல் கும்பல்களுடன் தொடர்பு இருக்கிறது என பாரதீய ஜனதாவிலிருந்து வெளியேற்றப்பட்ட முன்னாள் மத்தியப் பிரதேச முதல்வர் உமாபாரதி குற்றம் சாட்டியுள்ளார். இவர்கள் போதைப்பொருள் கடத்தல் மாஃபியா கும்பல்களுடன் தொடர்பு கொள்வதற்கு வாஜ்பாயி உடைய வளர்ப்பு மகளின் கணவர் மற்றும் அத்வானியின் மகன் போன்றோர் உதவுகின்றனர் எனக் குறிப்பிட்டுள்ளார். பாரதீய ஜனசக்தி என்ற புதிய கட்சியை உருவாக்கிய உமாபாரதியின் இந்த அதிரடி அறிக்கை பாரதீய ஜனதா கட்சிக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியிருக்கிறது.

பாரதீய ஜனதாவின் தலைமையிலான முந்தைய ஆட்சியில் பொது விமானத்துறை அமைச்சராக இருந்த சரத்யாதவின் எதிர்ப்பினைப் பொருட்படுத்தாமல் ஒரு விமான நிறுவனத்திற்கு அன்றைய உள்துறை அமைச்சராக இருந்த அத்வானியின் அலுவலகம் அனுமதி வழங்கியது. இச்சம்பவம் போதைப்பொருள் கடத்தல் கும்பல்களோடு இவர்களுக்கு உள்ள நெருக்கத்தோடு தொடர்புள்ள ஒன்று என உமாபாரதி குறிப்பிட்டுள்ளார். இந்த முன்னாள் மத்திய அமைச்சருக்கு தீவிரவாதிகளோடும் போதைப்பொருள் வியாபாரிகளோடும் தொடர்பு உள்ளதற்கான ஆதாரம் தன்னிடம் உள்ளது எனவும் அவர் கூறியுள்ளார். சமீபத்திய மும்பை தொடர் குண்டு வெடிப்பு குறித்து சிபிஐ விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவிடும் பட்சத்தில் சாட்சி என்கின்ற நிலையில் அதற்கான முழு ஆதாரங்களையும் சமர்ப்பிக்க, தான் தயாராக இருப்பதாகவும் உமாபாரதி தெரிவித்தார். பிரதமர் மன்மோகன் சிங் அவர்களை நேரில் சந்தித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட கோரப்போவதாகவும் அவர் கூறினார்.

வாஜ்பாய் மற்றும் அத்வானியின் உறவினர்களுக்கும் ஒரு முன்னாள் பாஜக பொதுச்செயலாளருக்கும் தற்போதும் மாஃபியா கும்பல்களுடன் தொடர்பிருப்பதாக அவர் அறிவித்தார். பாஜக தலைவர் ராஜ்நாத்சிங் அவர்களுக்கு தேசப்பற்று இருந்தாலும் மாஃபியாக்களுடன் தொடர்புடைய தலைவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் தைரியம் இல்லை என கண்டனம் தெரிவித்தார். பாஜக சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் உத்தரபிரதேசத்தில் ராஜ்யசபா உறுப்பினருக்காக போட்டியிட்டு தோல்வியைத் தழுவியவருக்கு அங்கு தீவிரவாதிகளுடனும் மாஃபியா கும்பல்களுடனும் தொடர்பிருந்தது என்றும் குற்றம் சாட்டினார்.

"மத்தியபிரதேசத்தில் உள்ள போபால், தீவிரவாதத்திற்கும் மாஃபியா செயல்பாடுகளுக்கும் உரிய தளமாக செயல்படுகிறது. என்னிடம் அதற்கான ஆதாரங்கள் உள்ளன. மாஃபியா கும்பல்களை வளர்ப்பதும் பாதுகாப்பதும் அரசியல் கட்சிகள் என்ற உண்மையை நான் வெளிப்படுத்தியதால் என் உயிருக்கு ஆபத்தான சூழல் உருவாகியுள்ளது" என்றும் உமாபாரதி கூறினார். பயங்கரவாதிகளுடன் தொடர்புள்ள ஒரு கட்டடம் கட்டும் தொழிலதிபருடன் மத்திய பிரதேச பாஜக முதல்வர் சிவராஜ் சிங் சௌகானுக்கு தொடர்பு உள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.

அத்துடன் மத்தியப் பிரதேச கவர்னர் டாக்டர். பலராம் ஜாக்கர் அவர்களைக் கொண்டு தனக்குத் தேவையான பாதுகாப்பு வழங்க வேண்டும் என மத்திய அரசிடம் அவர் கோரிக்கை வைத்துள்ளார்.

பாரதீய ஜனதாவின் மறைந்த மூத்த தலைவர்களில் ஒருவரான பிரமோத் மகாஜனின் இறுதிச் சடங்கில் நடந்த மதுபான விருந்தில் அளவுக்கதிகமான போதைப்பொருளைப் பயன்படுத்தி உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தற்போது போதைப்பொருள் கடத்தல் வழக்கு தொடுக்கப்பட்டிருக்கும் மகாஜனின் மகனுக்கு தங்களது ஆதரவு உண்டு என பாஜக மூத்த தலைவர்கள் அவரை சிறைச்சாலையில் சந்தித்து ஆறுதல் அளித்த சம்பவம் இங்கு நினைவு கூறத்தக்கது.

தேசத்தின் பாதுகாப்புக்கும் வளர்ச்சிக்கும், தேச ஒருமைப்பாட்டிற்கும் சவாலாக விளங்கும் குண்டுவெடிப்பு போன்ற தீவிரவாத, பயங்கரவாத செயல்பாடுகள், இளைய சமுதாயத்தின் வீழ்ச்சிக்கு பங்கம் விளைவுக்கும் போதைப்பொருள் கடத்தல் கும்பல்களின் நடவடிக்கைகள் நாட்டில் மலிந்து கிடக்கும் இன்றைய சூழலில், செல்வி உமாபாரதியின் இந்த வெளிப்படுத்தல்கள் மிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு விசாரிக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.

– சத்தியமார்க்கம்.காம் செய்திக்குழு