கடத்த முயன்ற பயங்கர வெடிபொருட்கள் பறிமுதல்!

அலகாபாத்: மத்தியப்பிரதேச மாநிலத்தில் இருந்து அலகாபாத்திற்கு ஜீப்பில் கடத்த முயன்ற பயங்கர வெடிபொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

போலீசார் கடந்த வியாழன்(24/05/2007) அன்று இரவு வழக்கமான ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொழுது இவை கைபற்றப்பட்டதாக காவல்துறை தெரிவித்தது. இது தொடர்பாக வெடிபொருட்களை ஏற்றி வந்த ஜீப் டிரைவர் ராஜேஷ் படேல் என்பவரை கைது செய்துள்ள காவல்துறையினர், அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஜீப்பில் இருந்து 50 கிலோ அமோனியம் நைட்ரேட்டும் 1000 மீட்டர் வெடிமருந்து ஒயர்களும் பறிமுதல் செய்யப்பட்டது.

வெடிபொருட்கள் பறிமுதல் தொடர்பாக காவல்துறை கண்காணிப்பாளர் தீபக்பட் கூறுகையில், "இவை கல் உடைக்கும் பணிக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளது முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது" என்றும், "நக்சல்களுக்கு இது எடுத்துச் செல்லப்பட்டதா என்ற கோணத்தில் விசாரணை நடப்பதாகவும்" கூறினார்.

கடந்த செவ்வாய் கிழமையன்று கோரக்பூரில் நிகழ்ந்த குண்டு வெடிப்புக்குப் பின், பைசாபாத் மற்றும் ஃபரூக்காப்பாத் ரயில் நிலையங்களில் வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. நாட்டில் பரவலாக குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடக்கும் வேளையில், தொடர்ந்து கைப்பற்றப்படும் இத்தகைய பயங்கர வெடிபொருள் பறிமுதல்களை கல் உடைக்கும் பணிக்கானவை எனக் கூறி போலீசாரே நீர்த்துப் போக செய்வதும், அவ்வெடிபொருட்கள் கல் உடைக்கும் பணிக்காக முறையான அனுமதியுடன் தான் எடுத்துச் செல்லபடுகின்றது எனில் எதற்காக காவல்துறை முதலில் அவற்றை கைப்பற்றுகின்றனர்? என்ற கேள்வியும் பொதுமக்கள் மத்தியில் காவல்துறை மீது சந்தேகத்தை எழுப்பி வருகின்றது.