இஸ்லாமிய சமூகத்தின் எதிர்காலம்!

முன்குறிப்பு:  சமீபத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் வெளியான உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி இறுதித்தேர்வு முடிவுகளில் எப்பொழுதும் இல்லாத அளவிற்கு மாநில, மாவட்ட அளவில் முஸ்லிம் மாணவ, மாணவிகள் புரிந்த சாதனைகளே இக்கட்டுரை எழுதுவதற்குத் தூண்டுகோலாக அமைந்தது. தம் எதிர்காலத்தை குறித்து ஒட்டுமொத்த சமூகமும் கவலைப்பட்டுக் கொண்டிருக்கும் இக்காலகட்டத்தில், சமூகத்திற்கு உற்சாகம் அளிக்கும் விதத்தில் அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்திய அனைத்து மாணவ கண்மணிகளுக்கும் சத்தியமார்க்கம்.காம் தனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறது. இக்கட்டுரையின் மூலம் சமூகத்தில் ஓர் ஊசி முனையளவு நன்மை விளையுமெனினும், அதற்காக இறைவன் புறத்திலிருந்து கிடைக்கும் மகத்தான பிரதிபலன்களுக்கு சாதனை புரிந்த அனைத்து சமுதாய கண்மணிகளுமே உரித்தாவார்கள். – நிர்வாகம்(சத்தியமார்க்கம்.காம்)

அதிநவீன இந்த விஞ்ஞான நூற்றாண்டில் உலக அளவில் பிரச்சனைகளை ஒட்டுமொத்தமாக எதிர்கொள்ளும் ஒரு சமூகமாக இன்று இஸ்லாமிய சமூகம் மாறிக் கொண்டிருக்கின்றது. தனிநபர் அடக்குமுறையிலிருந்து அரச பயங்கரவாதங்கள் வரை மிக நுணுக்கத்துடன் நிதானமாக திட்டமிட்டு முஸ்லிம்கள் மீது அக்கிரமங்கள் கட்டவிழ்த்து விடப்படுகின்றன. உலகில் அநியாயங்களும், அக்கிரமங்களும் தலைவிரித்தாடிய காலங்களிலும், "ஐரோப்பாவின் இருண்ட காலம்" என அழைக்கப்பட்ட மத்திய காலகட்டங்களிலும் கூட உலகில் சமாதானத்தையும், சமத்துவத்தையும் பரப்பி உலகிற்கு வழிகாட்டியாக இருந்த ஒரே மார்க்கம் இஸ்லாம் மட்டுமே ஆகும். அவ்வளவு ஏன் உலக வரலாற்றில் மிக நீண்ட காலம் சமாதானமான, பல்வேறு நவீன மக்கள் திட்டங்களை நிறைவேற்றி பொதுமக்கள் மனதார நேசிக்கும் அரசாக, அனைத்து மக்களும் விரும்பும் விதத்தில் ஆட்சியில் இருந்த சமுதாயங்களை எடுத்துக் கொண்டால், அதிலும் முஸ்லிம் சமுதாயத்தின் பக்கம் எவருக்கும் நெருங்க முடியாது.

ஸ்பெயினில் சுமார் 800 வருட ஆட்சி, இந்தியாவில் சுமார் 700 வருட ஆட்சி என இஸ்லாம் பரந்து விரிந்த பகுதிகளில் எல்லாம் ஆரம்ப காலங்களில் அப்பகுதி மக்களை அன்பாலும், தன் மாசற்ற கொள்கையினாலும் ஆட்கொண்டு மிகச் சிறப்பாக கோலோச்சியுள்ளன. அப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த சமாதானத்தை தன் பெயரிலேயே கொண்ட உயரிய இம்மார்க்கமும், அதனை உளமார ஏற்றுக்கொண்டு சமாதானவாதிகளாக வாழும் முஸ்லிம்களும் இன்று உலகளாவிய அளவில் மூர்க்கமானவர்களாக, கொடூரமானவர்களாக சித்தரிக்கப்பட்டு அனைத்து வழிகளிலும் கொடுமைப்படுத்தப்படுகின்றனர்.

தான் பரவும் இடமெல்லாம் மக்களின் மனதை வெகு எளிதில் கொள்ளை கொள்ளும் படைத்தவனின் இத்தூய மார்க்கத்தின் மீது, இன்றைய அதிநவீன அறிவியல் நூற்றாண்டில் மட்டும் இத்தனை வீரியமாக அபாண்டங்களும், அவதூறுகளும் சுமத்தப்பட்டு நிற்பதன் காரணம் என்ன?. இது சமூக அக்கறை கொண்ட ஒவ்வொரு தனிமனிதன் முதல், சமூக நலனை மட்டுமே தங்களின் ஒரே நோக்கமாக கொண்டு செயல்படும் அமைப்புகள் வரை, அனைவரும் உடனடியாக ஆராய்ந்து, தீர்வு காணப்பட வேண்டிய விஷயமாகும்.

ஒரு கொள்கை/சமூகத்தின் நிலைநிற்பு என்பது, அக்கொள்கை/சமூகத்தின் ஒழுக்கங்கங்கள், சிறந்த பழக்கவழக்கங்கள் எந்த அளவிற்கு பொது மக்கள் முன்னிலையில் கொண்டு சேர்க்கப்படுகின்றன என்பதை பொறுத்தே அமைகின்றது. இவ்விஷயத்தில் தகவல் பரிமாற்றம் மிக முக்கிய பங்கு வகிக்கின்றது. ஒரு காலத்தில் ஒரு மைல் கல்லினுள் வசிக்கும் மக்களுக்கிடையில் தகவல்களை பரிமாறிக் கொள்வதற்கே ஒருநாள் சமயம் வேண்டி இருந்தது. ஆனால் இன்று நிலைமை அவ்வாறல்ல.

வானொலி, தொலைக்காட்சி, தொலைபேசி, இணையம் போன்றவற்றின் மூலம் தகவல்பரிமாற்ற சமயம் வெகுவாக குறைந்து இன்று உலகமே ஒரு கைப்பிடிக்குள் அடங்கி விடக்கூடிய நிலையில் முன்னேறிக் கொண்டுள்ளது. ஆனால் காலத்தின் மாற்றத்தில், நவீன உலகை வடிவமைக்க காரணிகளாக அமைந்த இந்த சக்தி வாய்ந்த தொடர்பு சாதனங்களை, ஒருகாலத்தில் உலகை கட்டி ஆண்ட இஸ்லாமிய சமூகம் கவனிக்காமல் தவறவிட்டு விட்டது.

இதன் பாரிய விளைவே இன்று உலக அளவில் இஸ்லாமிய சமூகத்திற்கு எதிராக தொடுக்கப்படும் அக்கிரமங்கள் ஆகும். இன்று உலகில் மக்களிடம் தகவல்களை கொண்டு சேர்க்கும் இந்த துறை முழுவதும் நவீன அரசு பயங்கரவாதிகளின் கைகளில் சேர்ந்ததன் விளைவு மிகக் கொடுமையானதாகும்.

உலகில் இன்று இஸ்லாமிய சமூகத்தின் நிலைநிற்பே இந்த தொடர்புசாதனங்களை கையகப்படுத்துவதில் மட்டுமே நிலைகொண்டுள்ளது என்பதை காலம் கடந்தெனினும் சமூகம் கண்டு கொள்ள முன்வர வேண்டும். உலகத் தொடர்பு சாதனங்களின் சக்தியைக் குறித்து எவ்வித சிந்தையும் இன்றி இச்சமுதாயம் இருப்பதன் காரணம் அறியாமையே ஆகும்.

"ஐரோப்பாவின் இருண்டகாலம்" என அழைக்கப்பட்ட மத்தியகாலத்தில் கல்வித்துறையில் உலகிற்கே வழிகாட்டியாக இருந்த முஸ்லிம்களின் நடைமுறை சார்ந்த உலகியல் அறிவு இன்று மிகவும் பிந்தங்கியுள்ளது. கல்வியறிவின்மையே முஸ்லிம்களை தங்களைக் குறித்தும், தன் சமுதாயம் எதிர் கொள்ளும் பிரச்சனையைக் குறித்தும், தான் பின்பற்றும் மார்க்கத்தின் மகத்துவத்தைக் குறித்தும், தன்னை சுற்றி நடக்கும் காரியங்களின் விளைவுகளைக் குறித்தும், அதனை எதிர்கொள்ள கையாள வேண்டிய வழிமுறைகளைக் குறித்தும் புரிந்து கொள்ள விடாமல் எவ்வித பிரக்ஞையும் இன்றி இருக்க வைக்கின்றது. கல்வியறிவு இன்மையே ஒருவரை எடுப்பார் கைப்பிள்ளையாக யார் என்ன கூறினாலும் அதனை அப்படியே நம்புவதற்கும், அதன்படி செயல்படுவதற்கும் வழிவகுக்கிறது.

இந்திய விடுதலைப் போரின் போது, தாய்நாட்டுப் பற்றை தங்கள் உணர்வோடு சேர்த்து வளர்க்க வழிகாட்டும் உத்தம நபி(ஸல்) அவர்களின் செயல்பாட்டை தங்கள் வாழ்வில் பிரதிபலித்த சில முஸ்லிம் அறிஞர்களின், நாட்டை அடிமைப்படுத்தி வைத்திருந்த ஆங்கிலேயர்களுக்கு எதிரான "ஆங்கில மொழி கற்பதற்கு எதிரான கட்டளை"க்கு தங்களை முழுமையாக கட்டுப்படுத்திய இன்றைய இந்திய முஸ்லிம்களின் முன்னோர்களின் கண்களில், தங்களது வருங்கால சந்ததியினரின் உன்னத வாழ்வை விட, தங்களை ஈன்றெடுத்த தாய்நாட்டின் மீதான பற்று உயர்ந்து நின்றதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை தான்.

அன்றைய நாட்டின் நிலைமைக்கு, நாட்டை அன்னிய கொள்ளையர்களிடமிருந்து காப்பாற்ற இந்த சமூகம் சில அபாயகரமான சமூகத்திற்கு எதிர்காலத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் நடவடிக்கைகளை நாட்டுக்காக எடுத்ததை நியாயப்படுத்தி விடமுடியும். ஆனால் அதற்காக அன்னியனை அடித்து விரட்டியப்பின்னரும் அதே நிலையில் தான் இருப்போம் என பிடிவாதம் பிடித்ததை சுத்த அறிவீனம் என்றல்லாமல் வெறென்ன கூற முடியும்? நாட்டு விடுதலைக்குப் பின்னரும் சமுதாயம் கல்வியின் அவசியத்தை உணராததன் விளைவு, இன்று சமூக அமைப்புகளை சமூகத்திற்காக இடஒதுக்கீடு கேட்டு தமது அனைத்து நேரத்தையும், பொருளையும் போராட்டங்களில் வீணடிக்கும் நிலைக்கு கொண்டு வந்து நிறுத்தியுள்ளது. இங்கே, சமூக அமைப்புகள் சமூகத்தின் முன்னேற்றத்திற்காகத் தானே போராட்டங்கள் நடத்துகின்றன. பின்னர் எப்படி அது வீணடித்தல் ஆகும்? என்ற கேள்வி எழலாம்.
 
இன்ஷா அல்லாஹ் தொடரும்.