இனக்கலவரம் உண்டாக்கவே பாபரி மஸ்ஜித் தகர்க்கப்பட்டது – குரானா

குரானா

1991 ல் அத்வானி ரதயாத்திரை நடத்தியது அயோத்தியில் இராமர் கோவில் கட்டுவதற்காக அல்ல என நியூடெல்லியில் நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் முன்னாள் நியூடெல்லி முதல்வரும் பி.ஜே.பியின் மூத்த தலைவருமான திரு. மதன் லால் குரானா அறிவித்துள்ளார். தேச நலனை விட சுயலாபங்களுக்குத் தான் அத்வானி முக்கியத்துவம் அளித்ததாக மேலும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் அத்வானி தன்னை பாதுகாத்துக் கொள்வதற்காக பாபரி மஸ்ஜித் இடிப்பு வழக்கில் இருந்து தன்னுடைய பெயரை நீக்கம் செய்ய வைத்தார் எனவும் இந்த வழக்கில் முக்கிய குற்றவாளி அத்வானி தான், சுப்ரீம் கோர்ட் இதனை தெளிவுபடுத்தியிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பாபரி மஸ்ஜித்தைத் தகர்ப்பதற்காக அத்வானி நடத்திய ரகசிய ஆலோசனைக் கூட்டங்களைக் குறித்து விசாரிக்க வேண்டும் எனக் கோரி பிரதமருக்கு தான் எழுதிய கடிதத்தின் நகலை ராஜஸ்தான் மாநில முன்னாள் கவர்னர் குரானா மத்திய அமைச்சர் சிவராஜ் பாட்டீலிடம் வழங்கினார். பாபரி மஸ்ஜித் தகர்த்த வழக்கில் இருந்து அத்வானியின் பெயர் நீக்கம் செய்யப்பட்டதைக் குறித்து விசாரிக்க வேண்டும் என அக்கடிதத்தில் கோரிக்கை வைத்துள்ளார்.

 

நாட்டில் இனக்கலவரம் உருவாக்குவதற்காகத் தான் பாபரி மஸ்ஜித் தகர்க்கப்பட்டது எனவும் அக்கடித்தத்தில் தெரிவித்துள்ளார். மஸ்ஜித் தகர்ப்பதற்கு அப்போது பிரதமராக இருந்த காங்கிரஸ் தலைவர் நரசிம்மராவ் உதவியதாகவும், இவ்வழக்கை விசாரித்துக் கொண்டிருந்த சிபிஐ டைரக்டருக்கு மனித உரிமை கழகத்தில் அங்கத்துவம் தருவதாக வாக்களித்தைத் தொடர்ந்து தான், பாபரிமஸ்ஜித் வழக்கிலிருந்து அத்வானியின் பெயர் நீக்கப்பட்டது என்றும் அக்கடிதத்தில் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்.

 

– சத்தியமார்க்கம்.காம் செய்திக்குழு, நன்றி: தேஜஸ் தினசரி (18-07-2006 இதழ்)