ஏவுகணைத் தொழில் நுட்பத்தின் முன்னோடி – திப்புசுல்தான் (இந்திய பாதுகாப்புத்துறை அறிவிப்பு)

18ம் நூற்றாண்டில் வாழ்ந்த அரசரான திப்புசுல்தானின் (மைசூரில் இருந்து 100 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ஸ்ரீரங்கப்பட்டினத்தில் அமைந்திருக்கும்) கோட்டையிலுள்ள போர்ப்படையின் ஏவுகணைத் திடலைப் பார்வையிட்ட இந்திய பாதுகாப்புத்துறையின் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிப்பிரிவின் (Defence Research and Development Organisation – DRDO) தலைமை இயக்குனரான திரு. சிவதாணு பிள்ளை பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில் இதைத் தெரிவித்துள்ளார். அத்துடன் DRDO மன்னர் திப்பு சுல்தானுக்கு ஏவுகணைத் தொழில் நுட்பத்திற்கான முன்னோடி(pioneer or rocket technology) எனும் அதிகாரப்பூர்வமான பட்டத்தையும் கொடுத்து கவுரவிக்கவுள்ளது.

இந்தியாவின் பிராமோ ஏவுகணையின் வளர்ச்சியில் முக்கியப்பங்காற்றிய விஞ்ஞானியான திரு. சிவதாணு பிள்ளை மேலும் பேசுகையில், "ஏவுகணைத் தொழில் நுட்பத்தின் பிறப்பிடமாக இந்தியா திகழ்கிறது என்பதை உலகிற்குச் சொல்லவேண்டிய சமயம் வந்துவிட்டது" என்றதுடன் ஸ்ரீரங்கப்பட்டினத்தை "ஏவுகணை தொழில்நுட்பத்தின் பிறப்பிடம்" எனச் சிறப்பித்துக் கூறினார்.

இரு நூற்றாண்டுகளுக்கு முன்பே திப்பு சுல்தான் பயன்படுத்திய ஏவுகணைகளுக்கான தொழில் நுட்ப அடிப்படைக்கோட்பாடுகளை விவரிக்கும் ஆதாரங்களுக்கான அனைத்து ஆவணங்களையும் தயார் செய்யும் பணியில் DRDO முழு மூச்சுடன் இறங்கும் என்றும் தெரிவித்துள்ளார். அத்துடன், ஏவுகணை வரலாற்றில் ஒரு மைல் கல்லான திப்பு சுல்தானின் படைகள் பயன்படுத்திய 2 கி.மீ தூரம் வரை சென்று இலக்கைத் துல்லியமாகத் தாக்கக்கூடிய ஏவுகணைகளுக்கான பகுப்பாராய்வு ஆவணங்கள் தற்போது இலண்டனில் உள்ள ஆர்ட்டிலரி பொருட்காட்சி மையத்தில் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன என்றும் கூறியுள்ளார்.

DRDO வின் பழுத்த அனுபவசாலியான விஞ்ஞானி ஒருவர் பத்திரிகையாளர்களிடம் பேசுகையில் 1792லேயே 6000 போர்வீரர்களையும் 27 படைத்தளபதிகளையும் கொண்ட ஒரு முழுமையான ஏவுகணைப்படையைத் தயார் செய்து வைத்திருந்த முதல் மன்னர் திப்புசுல்தான் ஆவார் என்று கூறியது குறிப்பிடத்தக்கது.

-சத்தியமார்க்கம் செய்திக்குழு (நன்றி: Khaleej Times)

திப்புசுல்தான் பற்றி மேலும் படிக்க: Milligazette (16~31-05-2005 பழைய பதிப்பு)