அல்லாஹ்வின் பெயரால் சத்தியப்பிரமாணம் எடுக்கலாம்! – கேரள உயர்நீதிமன்றம் தீர்ப்பு

இஸ்லாமிய சமூகத்தில் உள்ளவர்கள் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து சத்தியபிரமாணம்(உறுதிமொழி) எடுப்பதில் எவ்விதத் தடையுமில்லை என கேரள உயர்நீதி மன்றம் நேற்று (21-07-2006) ஒரு வழக்கில் தீர்ப்பு கூறியுள்ளது. அல்லாஹ்வின் பெயரால் உறுதிமொழி கூறுவதால் அரசாங்க விதிமுறைகள் எதுவும் மீறப்படவில்லை எனவும் கோர்ட் சுட்டிக்காட்டியுள்ளது.

கேரள சட்டமன்றத்தில் அல்லாஹ்வின் பெயரால் உறுதிப்பிரமாணம் எடுத்த பி.கே. அப்துல் ரப், எம். உமர், கெ. முகம்மதுண்ணி, வி.கே. இப்ராகிம் குஞ்ஞு, அப்துல் ரஹ்மான் ரண்டத்தாணி, சி.டி. அகமது அலி, பி.எம்.ஏ. ஸலாம், வர்க்கலை கஹார், எம்.ஏ.வாஹித், கெ.டி. ஜலீல், பி.டி.ஏ.ரஹீம் ஆகிய 11 சட்டசபை உறுப்பினர்களை சபை நடவடிக்கைகளில் இருந்து நீக்க வேண்டும் எனக் கோரி யுவமோர்சா மாநில துணை தலைவர் மது பருமலை கேரள உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.

இவ்வழக்கை தள்ளுபடி செய்த நீதிபதிகளான கே.எஸ். ராதாகிருஷ்ணன், வி. ராம் குமார் உட்பட உள்ள டிவிஷன் பெஞ்ச்,  இஸ்லாமிய சமூகத்தைச் சார்ந்த உறுப்பினர்களின் சத்தியபிரமாணம் தொடர்பான மேற்கண்ட முக்கிய தீர்ப்பை வெளியிட்டனர்.

மதசார்பற்ற இந்தியாவில் மதசகிப்புத்தன்மை பேணுவது சமூக முன்னேற்றத்திற்கும் மக்களுக்கு சிறந்த சேவை கிடைப்பதை உறுதிபடுத்துவதற்கும் துணைபுரிவதாகும். இச்சூழலில் அல்லாஹ்வின் பெயரால் உறுதிமொழி எடுத்த 11 சட்டமன்ற உறுப்பினர்களின் செயல் இந்திய அரசாங்கத்தின் ஜனநாயக தத்துவத்தின் மேல் உள்ள அவர்களின் உறுதியையும் தேசத்தின் மீது அவர்கள் வைத்திருக்கும் நம்பிக்கையையும் வெளிக்காட்டுவதாக அமைந்துள்ளதாகவும் கூறினர்.

உறுதிமொழி என்பது தனிப்பட்ட மனிதனைச் சார்ந்தது என்றும் அது தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுதி மக்களை கணக்கில் எடுத்து செய்யப்படுவதல்ல என்றும் தீர்ப்பில் சுட்டிக்காட்டினர். மத நம்பிக்கையுள்ள ஓட்டுரிமையுடையவர்களைத் தவிர்த்து மத நம்பிக்கையற்றவர்களையும் இதர மத நம்பிக்கையுடையவர்களையும் உறுதிமொழி எடுக்கும் நபரோடு தொடர்புபடுத்த இயலாது எனவும் நீதிமன்றம் தெளிவுபடுத்தியது.

அல்லாஹ்வின் பெயரால் உறுதிமொழி எடுத்த நபர்களுக்கு மத நம்பிக்கை உண்டு என்ற விஷயத்தில்  வழக்கு தொடுத்தவருக்கு ஆட்சேபணை எதுவும் இல்லை என்பதை கோர்ட் சுட்டிக்காட்டியது. அல்லாஹ் என்ற வார்த்தை ஏகதெய்வம் என்ற வார்த்தையின் மறுவடிவமும் முஸ்லிம் சமூகத்தின் அடையாளமுமாகும். இந்த காரணத்தினாலேயே தெய்வம் என்பதற்குப் பகரமாக அல்லாஹ் என்ற பதம் உபயோகிப்பதில் தவறில்லை எனவும் இரண்டும் ஒன்றே எனவும் நீதிமன்றம் உறுதிபடுத்தியது.

இவ்வழக்கு ஆவணப்படுத்தப்படாமலேயே தள்ளுபடி செய்யப்பட்டதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

– சத்தியமார்க்கம்.காம் செய்திக்குழு