வன்முறையைத் தூண்டும் ‘ஸாம்னா’ பத்திரிக்கைக்குத் தடைவிதிக்கக் கோரிக்கை!

{mosimage}மும்பை மற்றும் மஹாராஷ்டிராவின் முக்கிய நகரங்களில் இருந்து வெளிவரும் சிவசேனாவின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான 'ஸாம்னா'-வுக்குத் தடை விதிக்கக் கோரி மும்பைக் காவல்துறை ஆணையாளருக்கு பிரபல மனித உரிமை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

மும்பையில் மஹாராஷ்டிரர் அல்லாத பிற மாநிலத்தவரின் வருகைக்கும், குடியேற்றத்திற்கும் எதிராக பால்தாக்கரேவால் தொடங்கப்பட்ட சிவசேனாவின் பத்திரிக்கையான 'ஸாம்னா' நாளடைவில் சிறுபான்மையினருக்கு, குறிப்பாக முஸ்லிம்களுக்கு எதிராக மாற்றப்பட்டு முஸ்லிம்களுக்கு எதிரான விஷமக் கருத்துகளைப் பரப்பி வந்தது.

இந்துத்துவாவின் ஊதுகுழலாகவே மாறிவிட்ட 'ஸாம்னா' 1992-93-ல் நடந்த முஸ்லிம்களுக்கெதிரான வகுப்புக்கலவரங்களின் போது துவேஷமிக்க நச்சுக் கருத்துகளைப் பரப்பி, கலவரத்தில் பெருமளவில் முஸ்லிம்கள் கொல்லப்பட ஒரு முக்கியக் காரணமாக இருந்ததாக நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா சமர்ப்பித்த அறிக்கையில் தெரிவித்திருந்தார்.

மஹாராஷ்டிராவில் நிகழ்ந்த ஆட்சி மாற்றங்களினால் கிடப்பில் போடப்பட்ட இவ்வறிக்கை மீண்டும் அரசின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டதை அடுத்து நச்சுக் கருத்துகளைப் பரப்பும் 'ஸாம்னா'வை உடனடியாகத் தடை செய்யவேண்டும் என பிரபல மனித உரிமை ஆர்வலர்களான விஜய் டெண்டுல்கர், அனில் தார்கர், கிரண் நாகர்கர், மஹேஷ் பட் மற்றும் டீஸ்டா செட்டல்வாத் ஆகியோர் மும்பை மாநகர காவல்துறை ஆணையர் திரு ஜாதவுக்கு எழுத்துமூலம் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

இதில் இக்கலவரங்களின் போது 'ஸாம்னா' பரப்பிய நச்சுத் தகவல்களையும் அதன் மூலம் சிவசேனா உள்ளிட்ட இந்துத்துவ சக்திகள் நிறைவேற்றிய சதித் திட்டங்களையும் விளக்கமாகக் குறிப்பிட்டுள்ள அவர்கள், தகவல் அறியும் சட்டத்தின் கீழ் இது தொடர்பான வழக்கு விசாரணை விவரங்களையும் மீள் ஆய்வு செய்யவும் கோரியுள்ளனர்.