மக்கா மஸ்ஜித் குண்டு வெடிப்பு: நான்கு பேர் குற்றமற்றவர் என விடுதலை!

நாட்டில் எங்குக் குண்டு வெடிப்புகள் நடந்தாலும் அப்பாவி முஸ்லிம்கள் கைது செய்யப் படுவதும் அதைப் பத்திரிகைகள் "முஸ்லிம் தீவிரவாதி(!) கைது" என்று தலைப்புச் செய்தி போடுவதும் வழக்கமாகி விட்ட ஒன்று. ஆனால் கைது செய்யப் பட்ட அப்பாவிகளை நீதிமன்றங்கள் குற்றமற்றவர்கள் எனக் கூறி விடுதலை செய்யும்போது அதே ஊடகங்கள் – குறிப்பாக – தமிழ் ஊடகங்கள் கள்ள மெளனம் சாதித்து அந்தச் செய்திகளைத் தொலைத்து விடும்.

 

 

கடந்த ஆண்டு ஆகஸ்ட் 18 அன்று நடந்த ஹைதராபாத் மக்கா மஸ்ஜித் குண்டு வெடிப்பைத் தொடர்ந்து காவல்துறை கைது செய்த நான்கு பேரைக் குற்றமற்றவர்கள் என நீதிமன்றம் அவ்வழக்கிலிருந்து விடுவித்தது. மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஷுஹைப் ஜகிர்தர், அவரின் மருமகன் இம்ரான்கான், முஹம்மது கலீம், அப்துல் மஜீத் என்ற நால்வரை கூடுதல் பெருநகர அமர்வு நீதிபதி விடுதலை செய்து உத்தரவிட்டார். அவர்கள் மீது சுமத்தப்பட்டக் குற்றத்தை நிறுவுவதில் அரசு தரப்பு வழக்கறிஞர் தோல்வியடைந்து விட்டதாக நீதிமன்றம் கூறியது.

கிரிமினல் சதித்திட்டம், தேசவிரோத நடவடிக்கையில் ஈடுபடுதல் போன்ற குற்றங்களை இவர்கள் மீது சுமத்தியிருந்த ஹைதராபாத் காவல்துறை, குற்றம் சுமத்தப்பட்டவர்கள் நிரபராதிகள் என விடுவிக்கப்பட்டதால் பாதிவழியில் விக்கித்து நிற்கின்றது. பி.டெக் மாணவரான இம்ரான்கானைத் தவிர மற்ற மூவரும் இவ்வழக்கில் முன்னரே ஜாமீனில் வெளியாகியிருந்தனர். இத்தீர்ப்புக்குப் பின்னர் இம்ரானும் விடுதலையானார். முஹம்மது கலீம் இத்துடன் இரண்டாம் முறையாக கிரிமினல் சதித் திட்ட வழக்கில் குற்றமற்றவர் என விடுவிக்கப்பட்டிருக்கின்றார் என்பது குறிப்பிடத் தக்கது.

பங்களாதேஷிலிருந்து ஷமீர் என்ற நபர் கடத்திய 10 கிலோ ஆர்.டி.எக்ஸைக் கைப்பற்றியதாக இம்ரான் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. தன் மகன் எந்தக் குற்றமும் செய்யவில்லை என அவரின் தாயார் உறுதியுடன் கூறுகிறார். ஷுஹைபும் அவரின் நண்பர் சமீரும் ஒருநாள் இரவு தம் வீட்டில் தங்கியிருந்ததை ஒப்புக் கொண்ட அவர், "இரு நண்பர்கள் ஒரு வீட்டில் இரவு தங்குதல் ஒரு தேசவிரோதக் குற்றமா?" என்று அவர் கேள்வி எழுப்பினார்.

"நீதிமன்றம் தனக்கு நீதி வழங்கியது" எனச் சிறையிலிருந்து விடுதலையான பின் இம்ரான் கூறினார். ஆனால், தான் இழந்த 16 மாதங்களை யார் திரும்ப தருவர்? என அவர் கேள்வி எழுப்பினார்.

"அரக்கத்தனமாக என்னை அடித்துச் சித்திரவதை செய்திருந்தாலும் என்னிடத்தில் செய்யாத ஒரு குற்றத்தை ஒப்புக்கொள்ளும்படி எதுவுமே இல்லை. ஆர்.டி.எக்ஸ் வைத்து இந்தக் குற்றத்தை நீயே செய்ததாக ஒப்புக்கொள். இல்லையெனில் என்கவுண்டர்தான் என்ற மிரட்டல், மற்றும் உயிர் போகும் அளவு அடி ஆகிய வேதனைகளைத் தாங்க முடியாமல் ஒரு நேரத்தில் போலிஸ் கேட்கும் அத்தனையையும் ஒப்புக் கொண்டேன். உயிர்பிச்சை கேட்டு குப்தா மற்றும் இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரனின் காலில் விழுந்து கதறினேன்" எனக் காவல்துறை தன் மீது அவிழ்த்து விட்ட அக்கிரமங்களைக் குறித்து இம்ரான் நினைவு கூர்ந்தார்.

2007இல் நடந்த மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பிற்குக் காரணமானவர்கள் குறித்து இன்று வரை ஒரு துரும்பும் காவல்துறைக்குக் கிடைக்கவில்லை. இதற்கிடையில் இவ்வழக்கை விசாரிக்கும் சி.பி.ஐ, மாலேகோன் குண்டுவெடிப்பில் தொடர்புடையவர்களாகக் கைது செய்யப்பட்ட ப்ரக்யா சிங் தாகூரையும் அவருடைய கூட்டாளிகளையும், மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக விசாரிக்கப்போவதாக உயர்மட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

அப்பாவிகள் கைதிகளாகச் சிறைச்சாலைகளில் தொலைக்கும் அநீதியான காலத்துக்கு நமது நீதிமுறையில் பதிலேதுமில்லை.