காஞ்சிபுரத்தில் ஆர்எஸ்எஸ் வன்முறை

 ஆர்எஸ்எஸ் இயக்கத்தினரின் கருத்தரங்கை எதிர்த்த கம்யூனிஸ்ட், தமுமுக மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பினரைத் தடியால் அடித்துக் காயப்படுத்தினர் ஆர்எஸ்எஸ் உறுப்பினர்கள்.

காஞ்சிபுரத்தை அடுத்த ஓரிக்கையில் உள்ளது பாரதிதாசன் மெட்ரிக் பள்ளி. இங்கு 3,500 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். நேற்று விடுமுறை என்பதால் 9 முதல் 12-ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு மட்டும் தனி வகுப்பு நடந்தது. பள்ளியின் மற்றொரு பகுதியில் ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் 2 நாள் கருத்தரங்கம் நடந்துள்ளது. இந்த கருத்தரங்குக்குப் பல ஊர்களில் இருந்து ஏராளமான ஆர்எஸ்எஸ் உறுப்பினர்கள் வந்திருந்தனர். வாகனங்களில் தடி, உருட்டுக் கட்டைகளையும் அவர்கள் எடுத்து வந்ததாகக் கூறப்படுகிறது.

 

இதைக் கேள்விப்பட்ட கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், தமுமுக ஆகிய கட்சிகளின் தொண்டர்கள் பலர் கொடிகளுடன் பள்ளி முன் திரண்டனர். மதவாதம், வன்முறையைத் தூண்டும் வகையில் ஆர்எஸ்எஸ் நடத்தும் கருத்தரங்குக்கு, பொது இடமான பள்ளியில் எப்படி இடம் தரலாம்? என்று என்று பள்ளி நிர்வாகி அருண்குமாரிடம் வாக்குவாதம் செய்தனர்.

 

அப்போது, சில ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் வெளியில் வந்து கம்யூனிஸ்ட் கட்சிக்காரர்களைத் தரக்குறைவாகப் பேசியதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த கம்யூனிஸ்ட் மற்றும் இதர கட்சியைச் சேர்ந்த தொண்டர்கள் சிலர் கற்களை எறிந்துள்ளனர்.

 

உடனே பள்ளிக்குள் இருந்து தடிகள் மற்றும் உருட்டுக் கட்டைகளுடன் காக்கி அரைக்கால் சட்டையுடன் திமுதிமுவென ஓடிவந்தனர் ஆர்எஸ்எஸ்காரர்கள். வெளியில் நின்றிருந்த அனைத்துக் கட்சிகளின் இளைஞர்கள், முதியோர் என எல்லாரையும் வெறியோடு தாக்கினர். இதனால் கூட்டத்தினர் சிதறி ஓடினர். ஓடியவர்கள் மீது கற்களையும் வீசித் தாக்கினர் ஆர்எஸ்எஸ் தொண்டர்கள்.

 

இதில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் முத்துக்குமார், இந்திய கம்யூனிஸ்ட் கமலநாதன், விடுதலைச் சிறுத்தைகள் டேவிட், நாராயணன், தமுமுக பாஷா, ஆர்எஸ்எஸ் இயக்கத்தைச் சேர்ந்த மோகன்ராஜா, ராகவன் ஆகிய 6 பேர் காயமடைந்தனர். அனைவரும் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

 

இந்தக் கலவரத்தைப் பார்த்துப் பள்ளியில் இருந்த மாணவ, மாணவியர் அதிர்ச்சியில் உறைந்தனர். தகவல் நகரில் பரவி, பெற்றோர் பதற்றத்துடன் வந்து பிள்ளைகளை அழைத்து சென்றனர்.

 

காஞ்சிபுரம் டிஎஸ்பிக்கள் சமுத்திரக்கனி, முனியப்பன், இன்ஸ்பெக்டர்கள் பாலு, சிவபாதசேகரன், பஞ்சாட்சரம் ஆகியோர் தலைமையில் போலீசார் குவிந்தனர். போக்குவரத்து நிறுத்தப்பட்டு, கடைகள் அடைக்கப்பட்டன. பள்ளி நிர்வாகி அருண்குமாரை அழைத்த போலீஸ் அதிகாரிகள், ஆர்எஸ்எஸ் இயக்கத்தினரை உடனே வெளியேற்றும்படி கூறினர். கோட்டாட்சியர் முருகையா (பொறுப்பு), தாசில்தார் நடராஜன் ஆகியோர் வந்து பார்வையிட்டனர்.

 

இந்திய கம்யூனிஸ்ட் நிர்வாகி நாராயணசாமி கூறுகையில், "அமைதியான நகரம் காஞ்சிபுரம். இங்கு ஆர்எஸ்எஸ் காலூன்றி மதநல்லிணக்கத்தையும், அமைதியையும் கெடுக்கப் பார்க்கிறது. அதைத் தடுக்கவே நாங்கள் முயன்றோம். ஆனால் நாங்கள் பேசிக் கொண்டிருக்கும்போதே எங்கள் கட்சிக்காரர்களை ஆர்எஸ்எஸ் இயக்கத்தினர் தாக்கினர். கமலநாதனை இழுத்து ரோட்டில் போட்டுத் தடியால் தாக்கினர்; பாஷா தடுத்தார். அவர் முகத்தில் குத்தினர். அவருக்கு 4 பல் உடைந்தது. ஆர்எஸ்எஸ் இயக்கத்தைக் கண்டித்தும், இந்த வன்முறைக் கும்பலைக் காஞ்சிபுரத்திலிருந்து வெளியேற்றக் கோரியும் 10-ம் தேதி காஞ்சிபுரத்தில் அனைத்து கட்சி ஆர்ப்பாட்டம் நடத்துவோம்" என்றார்.

 

ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் திட்டமிட்ட வன்முறைப் பயிற்சியை தடுத்து நிறுத்தக் கோரியும், நேற்றைய வன்முறையைக் கண்டித்தும் அம்பேத்கர் சிலை அருகில் விடுதலை சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம் செய்தனர். மாவட்ட செயலாளர் விடுதலை செழியன் இதற்கு தலைமை வகித்தார்.

 

நன்றி: தட்ஸ் தழிழ்