காஷ்மீர் – இராணுவத்தினரின் வெறிச்செயல்

வீட்டினுள் அத்துமீறி நுழைந்து சிறுமியை மானபங்கப்படுத்த முயன்ற இரு இராணுவ சிப்பாய்களை, பொதுமக்கள் சுற்றி வளைத்து பிடித்தனர். பின்னர் அவர்களை நிர்வாணப்படுத்தி தெருவில் ஊர்வலம் விட்டனர்.
  
பந்திபுரா மாவட்டத்திலுள்ள குனான் எனும் கிராமத்தில் இராணுவ சிப்பாய்களின் இவ்வெறிச் செயலுக்கு எதிராக பொது மக்கள் இணைந்து இதனை செய்தனர். சாதாரண உடையில் வீட்டினுள் அத்துமீறி நுழைந்த இரு சிப்பாய்கள், வீட்டில் தனியாக இருந்த சிறுமியை மானபங்கப்படுத்த முயன்றனர்.

சிறுமியின் கதறலை கேட்டு வெளியில் வேலையாக இருந்த வீட்டினரும், அத்தெருவில் உள்ள மற்ற வீட்டினரும் வீட்டினுள் ஓடிச் சென்றனர். சிறுமியை மானபங்கம் செய்ய முயன்று கொண்டிருந்த இருவரையும் அனைவரும் இணைந்து பிடித்து அடித்து உதைத்தனர். 
  
பின்னர் அவர்களை மொட்டையடித்து முகத்தில் கரியை பூசி நிர்வாணமாக கடைவீதியில் ஊர்வலம் கொண்டு சென்றனர். சம்பவத்தை காணக் கூடிய மக்கள் கூட்டம், நடந்த சம்பவத்தை கேட்டறிந்து ஆவேசமடைந்து இராணுவத்திற்கு எதிராக ஊர்வலமும் கண்டன குரல்களும் எழுப்பினர். சம்பவ இடத்திற்கு வந்தடைந்த காவல்துறை, கண்ணீர் புகை குண்டுகளை மக்கள் கூட்டத்தில் வீசி அவர்களை கலைத்த பின்னரே சிப்பாய்களை மீட்க முடிந்தது. காவல் துறை இவர்கள் மீது மானபங்க முயற்சிக்கு எதிராக வழக்கு பதிவு செய்தது. 
  
இச்சம்பவத்தைக் குறித்து இராணுவ அதிகாரி கர்னல் மன்ஜீந்தர் சிங் கருத்து தெரிவிக்கையில், "இவை அனைத்தும் தீவிரவாதிகளின் சதியாகும். ரகசிய விசாரணைக்காகத் தான் சிப்பாய்கள் இருவரும் சாதாரண உடையில் அவ்வீட்டிற்கு சென்றனர். இதனை அறிந்து கொண்ட சில தீவிரவாதிகள் நாட்டு மக்களுக்கு தவறான தகவலை கொடுத்து அவர்களை இராணுவத்திற்கு எதிராக திருப்பி விட்டு விட்டனர்" என்று கூறினார்.