குண்டுவெடிப்புகளுக்குக் காரணம் ஹிந்துத்துவா அமைப்பு – மஹாராஷ்டிரக் காவல்துறை!

Share this:

குண்டுவெடிப்புகளை நடத்தியவர்கள் ஹிந்துத்துவா அமைப்பினர்தாம்!

மகாராஷ்டிரக் காவல்துறை உறுதிப் படுத்தியது!!

மும்பையில் நடைபெற்ற பல குண்டுவெடிப்புகளை நடத்தியவர்கள் ஹிந்துத்துவ அமைப்பினர் என்பதையும் அவரகளது வீடுகளிலும் தோட்டத்திலும் பதுக்கி வைத்திருந்த டன் கணக்கான வெடிப்பொருட்களையும் சத்தியமார்க்கம்.காம் ஆதாரங்களுடன் வெளியிட்டிருந்தது வாசகர்களுக்கு நினைவிருக்கலாம்.

மகாராஷ்டிர மாநிலத்திலுள்ள மாலேகோன், குஜராத் மாநிலத்திலுள்ள மொடஸா ஆகிய இரு இடங்களிலும் கடந்த மாதம் நடந்த குண்டுவெடிப்புகளுக்குப் பின்னணியில் ஹிந்துத்துவ அமைப்புகள் செயல் பட்டிருப்பது, அசைக்க முடியாத ஆதாரங்களுடன் தற்போது நிரூபணம் ஆகியுள்ளது.

 

முஸ்லிம்கள் கொண்டாடும் நோன்பு பெருநாளுக்கு முதல்நாள் (29.09.2008) மஹாராஷ்டிர மாநிலம் மாலேகோனிலும் குஜராத்திலுள்ள மொடஸாவிலும் நடந்த குண்டுவெடிப்புகளை நடத்தியவை ஆர்.எஸ்.எஸுடன் தொடர்புடைய இந்து ஜாகரண் மஞ்ச் என்ற சங்கபரிவார இயக்கம் என மகாராஷ்டிரா காவல்துறை தகுந்த ஆதாரங்களுடன் தற்போது கண்டுபிடித்துள்ளது.

“மாலேகோனில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்புக்கு உபயோகிக்கப்பட்ட இருசக்கர வாகனத்தைத் திருடியவர்களைக் குறித்த விசாரணையில், அதிர்ச்சிகரமாக இவ்வுண்மை உறுதிப்படுத்தப் பட்டது” என்று மஹாராஷ்டிராவின் தீவிரவாத எதிர்ப்புப் படை(எ.டி.எஸ்)யிலுள்ள உயர் அதிகாரி கூறினார். இம்மாதம், அக்டோபர் 10 அன்று மத்தியப் பிரதேசத்திலிருந்து கஸ்டடியில் எடுக்கப்பட்ட ஷியாம்லால், திலீப் நஹர், தர்மேந்திரா பைரகி ஆகிய மூன்று சங்கபரிவாரத் தொண்டர்களிடமிருந்து காவல்துறைக்கு மாலேகோன்-மொடஸா குண்டு வெடிப்புகள் குறித்த விவரங்கள் கிடைத்துள்ளன.

கடந்த செப்டம்பர் 29 அன்று இரவு நடந்த குண்டுவெடிப்புகளில் மாலேகோனில் ஒரு சிறுவன் உட்பட 5 முஸ்லிம்களும் மொடஸாவில் ஒருவரும் கொல்லப்பட்டிருந்தனர். அன்று குண்டுவெடிப்பு நடந்தச் சில நிமிடங்களிலேயே வழக்கம்போல் அதன் பின்னணியில் சிமியும் இந்தியன் முஜாஹிதீன் என்ற இயக்கமும் செயல்பட்டதாகக் காவல்துறையும் பெரும்பாலான ஊடகங்களும் கட்டுக்கதைகளைப் பரப்பியிருந்தன. “இரண்டு குண்டு வெடிப்புகளிலும் தொடர்புடையவர்கள்” என்பதாக உடனடியாக 12 முன்னாள் சிமி உறுப்பினர்களும் கைது செய்யப் பட்டிருந்தனர்.

அன்று எவ்வித ஆதாரங்களும் இன்றி, அவசரகதியில் விசாரணையின்றி சிமியின் மீது குற்றம் சுமத்திக் கைது செய்த மகாராஷ்டிரக் காவல்துறை, விசாரணையின் இறுதியில் இரு குண்டு வெடிப்புகளையும் ஹிந்துத்துவா அமைப்பு நடத்தியுள்ளதாக இப்போது ஆதாரங்களுடன் கூறியுள்ளது.

நோன்புப் பெருநாளுக்கு முந்தைய நாள் இரவு மாலேகானில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்பு, முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் இப்பகுதிகளில் சமுதாயங்களிடையே கலவரங்களை உருவாக்குவதற்கான முயற்சியாக இருந்தது என்றும் விசாரணையில் உறுதியானது. இதே ரீதியில் தமிழ்நாட்டின்தென்காசியில் சங்கபரிவாரத்தினரே குண்டு வைத்து விட்டு, நிமிட நேரத்தில் முஸ்லிம்கள் வைத்ததாகச் செய்தியைக் கசிய விட்டதும் அடுத்த சில மணிநேரத்திலேயே இராமகோபாலன், இல.கணேசன் உட்பட சங்கபரிவாரத்தினரால், “தீவிரவாதி முஸ்லிம்களைக் கைது செய்ய வேண்டும்” என அறிக்கைகள் விடப்பட்டதும் அடுத்த சில தினங்களிலேயே அக்குண்டுவெடிப்புகளுக்குப் பின்னணியில் சங்கபரிவார ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர்தான் ஈடுபட்டிருந்தனர் என்பது காவல்துறை விசாரணையில் உறுதியானதும் நினைவிருக்கலாம். அவ்வழக்கின் விசாரணையில், “கலவரங்களை உருவாக்குவதற்காக நாங்கள்தான் எங்கள் அலுவலகத்திலேயே குண்டு வைத்தோம்” என்று கைது செய்யப் பட்ட ஆர்.எஸ்.எஸ்காரர்களே வாக்குமூலம் கொடுத்திருந்தனர்.

காவல்துறையினரின் அண்மை வெடிகுண்டு வேட்டைகளில் சிக்கும் ஹிந்துத்துவ அமைப்பினரால் நாட்டில் நடக்கும் பெரும்பான்மையான குண்டுவெடிப்புகளின் பின்னணியில் சங்கபரிவாரத்தினரின் திட்டமிட்ட சதி இருப்பது உறுதியாகியுள்ளது.

 

கடந்த செப்டம்பரில் மகாராஷ்டிராவின் மாலேகோனிலும் குஜராத்தின் மொடஸாவிலும் இருசக்கர வாகனங்களில் வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டுகள் சில நிமிட இடைவெளியில் இரண்டு இடங்களிலும் வெடித்துச் சிதறின. மாலேகோனில், தடை செய்யப்படுவதற்கு முன்பு செயல்பட்டிருந்த சிமியின் பழைய அலுவலகத்தின் முன்பக்கத்தில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை சமூக விரோத ஹிந்துத்துவாவைச் சேர்ந்தவர்கள் நிறுத்தியிருந்தனர். குஜராத்தின் மொடஸாவில், குண்டுவெடிப்புக்கு உபயோகிக்கப்பட்ட இருசக்கர வாகனத்தின் சீட்டில் குர்ஆன் வசனங்கள் உள்ள ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தது. இதிலிருந்து திட்டமிட்டு, சிமியின் மீது குண்டுவெடிப்புகளைச் சுமத்துவதற்குச் சங்பரிவாரம் செயல்பட்டிருந்ததும் உறுதியாகியுள்ளது.

இருசக்கர வாகனங்களின் உரிமையாளர்களை அடையாளம் தெரியாமல் இருக்க வண்டியின் நம்பர் பிளேட் மற்றும் எஞ்சினில் உள்ள எண்களைச் சுரண்டி மாற்றியிருந்தனர். தடயவியல் அதிகாரிகளின் உதவியோடு காவல்துறை நடத்திய பரிசோதனையில், குண்டுவெடிப்புகளுக்கு உபயோகிக்கப்பட்ட இரு சக்கர வாகனங்கள் குஜராத்தில் விற்கப்பட்டவை என்பது உறுதி செய்யப் பட்டது.

இவ்விரு சக்கர வாகனங்களின் உரிமையாளர் ஆர்.எஸ்.எஸ்ஸின் மாணவர் இயக்கமான ‘அகில பாரதீய வித்யார்தி பரிஷத்(எ.பி.வி.பி)’என்ற அமைப்பில் தீவிரத் தொண்டராகச் செயல்பட்டிருந்தவராவார்.

இந்தக் குண்டுவெடிப்புகளை நடத்தியவர்கள், மத்தியப் பிரதேச மாநிலம் இண்டோரைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ‘இந்து ஜாகரண் மஞ்ச்’ தொண்டர்களே என்பதையும் மகாராஷ்டிரக் காவல்துறை கண்டு பிடித்துள்ளது. வழக்கின் விவரங்கள் மத்திய உளவுத்துறைப் பிரிவுகளுக்கும் வழங்கப்பட்டுள்ளதாகக் காவல்துறை தெரிவித்தது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் மாலேகோனில் நடந்த குண்டுவெடிப்புகளுக்குப் பின்னணியில் சங்கபரிவார இயக்கங்களே செயல்பட்டிருந்தன என்பதையும் வழக்கம்போல் அந்தப் பழியை முஸ்லிம்கள் தலையில் சுமத்துவதற்காக ஒட்டுத்தாடி, தொப்பி போன்றவை ஹிந்துத்துவத் தீவரவாதிகளால் பயன்படுத்தப் பட்டிருந்தன என்பதையும் அண்மையில் கேரளாவில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் விபின் தாஸ் என்பவர் தன் வீட்டுத் தோட்டத்தில் பதுக்கி வைத்திருந்த சக்தி வாய்ந்த வெடிகுண்டுகளைக்கேரளக் காவல்துறை கண்டு பிடித்ததையும் சத்தியமார்க்கம்.காம் வெளியிட்டிருந்தது வாசகர்களுக்கு நினைவிருக்கலாம். ஆனால், நாட்டில் நடக்கும் எல்லா குண்டுவெடிப்புகளுக்கும் சிமியைத் தொடர்புபடுத்துவதிலேயே காவல்துறை இதுவரை கவனம் செலுத்தியிருந்தது. சிமி வழக்கில் நீதிபதி கீதா மிட்டலின் கையால் குட்டுப் பட்ட பிறகு மகாராஷ்டிரக் காவல்துறையின் போக்கில் குறிப்பிடத் தக்க மாற்றம் தெரிய வந்துள்ளது.

மகாராஷ்டிர சிறப்புக் காவல்படையின் அண்மைக் கண்டுபிடிப்புகளைத் தொடர்ந்து நேற்றைய பாராளுமன்ற செயல்பாடுகள் அனைத்தும் ஸ்தம்பித்தன. சூனிய வேளையில், குண்டுவெடிப்புகள் தொடர்பான காவல்துறையின் கைது நடவடிக்கைத் தகவல்களை முஸ்லிம்லீக், கம்யூனிஸ்ட், காங்கிரஸ் கட்சிகள் பாராளுமன்றத்தில் வெளிப்படுத்தின.

“குண்டுவெடிப்புகள் நடைபெறும் வேளைகளில் அவற்றை ஒரு குறிப்பிட்ட சமுதாயத்திற்கு எதிராக மட்டுமே திருப்பி, அரசுகள் அநியாயம் இழைக்கின்றன” எனவும் “காவல்துறையின் இக்கண்டுபிடிப்பை அடிப்படையாகக் கொண்டு உடனடியாக பஜ்ரங்தளை அரசு தடை செய்ய வேண்டும்” எனவும் “மாலேகோன் மற்றும் நாண்டட் பகுதிகளில் இதற்கு முன்னர் நடந்த குண்டுவெடிப்புகளோடு பஜ்ரங்தளுக்குத் தொடர்புடையது நிரூபிக்கப்பட்டுள்ளது” எனவும் கம்யூனிஸ்ட் தலைவர் ப்ருந்தா காராட் அரசுக்குக் கோரிக்கை விடுத்தார். “நாட்டில் நடக்கும் அக்கிரமங்களின் பின்னணியில் சங்கபரிவாரமே உள்ளது என்பது ஆதாரப்பூர்வமாக பலமுறை கண்டறியப்பட்டு நிரூபிக்கப்பட்ட போதிலும் அரசு அவற்றுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கத் தயங்குகிறது” எனவும் அவர் குற்றம்சாட்டினார்.

“இந்தக் குண்டுவெடிப்புகளில் தொடர்புடையதாக நிரூபிக்கப்பட்டுள்ள ஹித்துத்துவ மாணவர் இயக்கமான எ.பி.வி.பியை உடனாடியாகத் தடை செய்ய வேண்டும்” என காங்கிரஸ் எம்.பி. ரஷீத் ஆல்வி கோரிக்கை விடுத்தார். “ஒரு மாணவர் இயக்கம் இதுபோன்ற தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுவது ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது இதுவே முதல் முறை” எனவும் அவர் கூறினார். ஆனால், “இது போன்ற எத்தகைய தீவிரவாத செயல்பாடுகளையும் எந்த ஒரு முழுச் சமுதாயத்தோடும் தொடர்பு படுத்தக் கூடாது” என மத்திய அமைச்சர் கபில் சிபல் பதிலளித்தார்.

குண்டுவெடிப்புகளின் பின்னணியில் சங்கபரிவாரம் செயல்பட்டுள்ள விஷயம் கண்டுபிடிக்கப்பட்ட இச்சம்பவத்தைப் பாராளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்ட நிமிடம் முதல், பாஜக பாராளுமன்றத்தின் செயல்பாடுகளை முடக்கும் விதமாக கூச்சலிட்டுப் பிரச்சனை ஏற்படுத்தியது.

நாட்டில் நீதி நிலைநிறுத்தப் படவேண்டும். உண்மைக் குற்றவாளிகள் உரிய வகையில் தண்டிக்கப் படவேண்டும்.அசைக்க முடியாத ஆதாரங்கள் கிடைத்த பின்னரும் குற்றவாளிகள் தண்டிக்கப் படாவிட்டால், நடைமுறையிலிருக்கும் சட்டங்கள் மக்களிடம் மதிப்பிழந்து விடும்.

இந்தச் சூழலில், நடுநிலை பெயரை நிலைநாட்டிய சில ஊடகங்களிலும் கூட அப்பாவி முஸ்லிம்கள் மீது பொய்யாக புனையப்பட்ட, சங்கபரிவாரத்தின் இத்தகைய திட்டமிட்ட குண்டுவெடிப்புகளுக்கு எதிராக உறுதியான எதிர்ப்புகளோ கண்டனங்களோ ஒரு சம்பிரதாயத்திற்குக் கூட வரவில்லை. முஸ்லிம் சமுதாயத்திற்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள ஊடகப்போருக்கு எதிராக உண்மையை உண்மையாக, சத்தியத்தை நெஞ்சுயர்த்தி எடுத்துரைக்கும் ஒரு நடுநிலை முன்மாதிரி ஊடகம் முஸ்லிம் சமுதாயத்திலிருந்து வெளிவருவதற்கான அவசியத்தை உணர்த்தி நிற்கின்றது!

நீதி எழுந்து நிற்கட்டும் – உறுதியுடன்!


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.