கல்வியில் வெற்றி பெற ஹிஜாப் ஒரு தடைக்கல்லன்று!

அலீகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் 58-ஆம் பட்டமளிப்பு விழா

அலீகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் சில தினங்களுக்கு முன் நடைபெற்ற 58-ஆவது பட்டமளிப்பு விழாவின் போது அனைவரையும் வியப்பிலாழ்த்திய  நிகழ்வு எதுவெனில் அங்கு மருத்துவப் பட்டம் பெற வந்த மாணாக்கர்களுள் ஒருவரான சுமையா அவர்களின் உடையலங்காரமே. டாக்டர் சுமையா அவர்கள் இஸ்லாம் வரையறுத்த ஹிஜாப் உடையணிந்து வந்திருந்து பட்டம் பெற்றார். இவர் மருத்துவப் பட்டப்படிப்பில் 12 பதக்கங்களை வென்றெடுத்தது குறிப்பிடத் தக்கதாகும்.

 

 

இவ்விழாவில் முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே. கலாமும், விப்ரோ நிறுவனத்தின் தலைவர் அசீம் பிரேம்ஜியும் கலந்து கொண்டு கௌரவ முனைவர் பட்டம் பெற்றனர்.

 

சகோதரி சுமையா அவர்களின் வெற்றிப் பதக்கக் குவிப்பு, முஸ்லிம் பெண்கள் பீடுநடைபோட்டுக் கல்வியில் முதலிடம் பெற அவர்களுக்கு இஸ்லாம் வரையறுத்துள்ள ஹிஜாப் உடை எவ்விதத்திலும் தடையானதில்லை என்பதை அறுதிபட நிரூபிக்கிறது.

 

சகோதரி சுமையா அவர்களின் கணவரும் ஒரு மருத்துவரே. ஒரு குழந்தைக்குத் தாயான சகோதரி சுமையா, தன் குடும்பப் பொறுப்புகளைக் குறைவின்றி நிறைவேற்றிவந்த போதிலும் ஹிஜாப் உடையுடனேயே தனது கல்விப் பருவத்தைக் கழித்துள்ளார். ஹிஜாப் அணிவது தனது கல்வி மேம்பாட்டுக்கு எப்போதும் தடையாக இருந்ததில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளது குறிப்பிடத் தக்கதாகும்.

 

கல்வி வேலைவாய்ப்புகளில் மிகவும் பின்தங்கியுள்ள இந்திய முஸ்லிம் சமூகம், ஒரு பெண்ணாக இருந்தபோதும் இஸ்லாமிய வரம்புக்குள் இருந்து கொண்டே கல்வியில் வென்று காட்டிய சகோதரி சுமையா அவர்களைப் போல் கல்வியில் முன்னேறினால் தான் சமுதாயத்தின் எதிர்காலம் வளம் பெறும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

 

சகோதரி சுமையா அவர்களுக்கு சத்தியமார்க்கம்.காம் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதோடு அவர் இது போன்ற பல வெற்றிகள் அடையவும் இந்திய முஸ்லிம் சமுதாயம் விழிப்புணர்வு பெற்றுத் தம் எதிர்காலத்தை வளமாக்கிக் கொள்ளவும் இறைவனிடம் இறைஞ்சுகிறது.