மனித உடல் – இறைவனின் அற்புதம்!

சத்தியமார்க்கம்.காம் நடத்திய சர்வதேச அளவிலான கட்டுரைப் போட்டியில் பங்கு பெற்ற கட்டுரை. – சத்தியமார்க்கம்.காம் நடுவர் குழு

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ

அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன், அல்லாஹ்வின் திருப்பெயரால் (துவங்குகிறேன்).

இறைவனின் படைப்புகள் ஒவ்வொன்றும் தனக்கெனத் தனித்தனிச் சிறப்புக் கூறுகளைக் கொண்டுள்ளன. ஊர்ந்து செல்லும் எறும்பு, தனது உடல் எடையைவிடச் சுமார் எட்டு மடங்கு சுமையைச் சுமக்கும். ஒட்டகம், முற்செடியையும் வலியின்றி உட்கொண்டு ஜீரணிப்பதோடு ஓரிரு வாரம் நீரின்றி உயிர் வாழும்.

ஆந்தை, கும்மிருட்டிலும் தடுமாற்றமின்றிப் பறக்கும். மனிதன் பெற்றிராத உடற்கூறுகளைக் கொண்டுள்ள கோடிக் கணக்கான ஜீவராசிகளை விடவும், “மனிதனை மிகச்சிறந்த படைப்பாகப் படைத்திருக்கிறோம்என்று அல்லாஹ் திருமறையில் கூறுகிறான். இறைவனைப் புரிந்துகொள்ள நம் உடலின் அற்புத அமைப்புகளை உணர்ந்தாலே போதும்.

மருந்துகளும் மருத்துவச் சோதனைகளுமின்றி நோய் எதிர்ப்புச் சக்தியைத் தானாகவே உருவாக்கிக் கொள்ளும் வல்லமை நம் உடலுக்கு உண்டு. இயற்கையாகவே பெற்றிருக்கும் நோய் எதிர்ப்புச்சக்தி மனித உடலுக்கு இல்லை என்றால் சாதாரண எறும்பு கடித்தால்கூட மிகுந்த வேதனைப்பட நேரிடலாம்! கண்டதற்கெல்லாம் கடையடைப்பு, போராட்டங்கள் நடத்தும் மனிதர்கள், தம் உடல் உறுப்புக்களிடமிருந்து கடமையுணர்வைக் கற்றுக் கொள்ள வேண்டும். ஐம்புலண்களும் உறங்கினாலும் ஜீரண,சுத்திகரிப்பு உறுப்புகள் ஓய்வதில்லை. கண்களுக்கு இணையாகத் தங்களுக்கும் ஓய்வு வேண்டும் என்று குடல் சுரப்பிகளும் போராட்டம் நடத்தினால் வாழ்நாளின் பாதியைக் கழிவறையிலேயே நாம் கழிக்க நேரிடும்!

சமீபத்தில்டாக்டர் சன்நியூஸ்தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தமிழகத்தின் பிரபலமான துறைசார் (Specialist) மருத்துவர்கள் நேயர்களின் கேள்விகளுக்குப் பதில் சொன்னார்கள். அழகு மற்றும் உறுப்புமாற்றுச் சிகிச்சைப் பற்றி ஒரு நேயர், சாலை விபத்தில் அவரது சகோதரரின் உயிர் உறுப்பில் அடிபட்டு ஒருபக்க விறை (Tactical) சேதமடைந்து தற்போது ஒற்றை விறையுடன் உயிர் வாழ்வதாகச் சொன்னார். அதற்குப் பதிலளித்த உடற்கூறு சிறப்பு மருத்துவர், “மனிதன் உயிர்வாழ அவசியமான இரட்டை எண்ணிக்கையில் படைக்கப்பட்ட உறுப்புகளில் ஏதேனும் ஒன்று மட்டும் ஒழுங்காக இயங்கினாலே போதும்என்றார்.

இறைவன் தன் திருமறையில்,

 إِنَّا كُلَّ شَيْءٍ خَلَقْنَاهُ بِقَدَرٍ

நாம் ஒவ்வொரு பொருளையும் நிச்சயமாக (குறிப்பான) அளவின்படியே படைத்திருக்கிறோம்(54:49) என்று கூறுகிறான்.

மனிதன் உயிர்வாழ அவசியமான உறுப்புகள் ஒன்று மட்டும் போதும் என்றாலும், உபரி உள்ளுறுப்புகளுடன் படைத்திருக்கும் இறைவனின் அன்பு அளவற்றதுதானே! மேற்கண்ட பதிலைக் கேட்டதும் அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன்என அல்லாஹ்வை புகழ்வதிலுள்ள நியாயத்தை உள்மனம் உணர்ந்தது. இருசிறுநீரகங்களும் பழுது அடைந்ததால் மாற்றுச் சிகிச்சைக்கு முன்/பின் எத்தனை வகையான சோதனைகள் மற்றும் சிரமங்கள்! சிறுநீரகங்களில் ஒன்றை உயிர்காக்கும் உபரியாகப் படைத்து உடலை இயங்க வைத்துக் கொண்டிருக்கும் படைப்பாளர்களிளெல்லாம் மேலான படைப்பாளன் அல்லாஹ்வின் எல்லையில்லா அன்பை உணரலாம்.

மேலும் இறைவன் தன் திருமறையில்,

 وَصَوَّرَكُمْ فَأَحْسَنَ صُوَرَكُمْ وَإِلَيْهِ الْمَصِيرُ

“… அன்றியும் உங்களை உருவாக்கி, உங்கள் உருவங்களையும் அழகாக்கினான்; அவனிடம்தாம் (யாவருக்கும்) மீளுதல் இருக்கிறது (064:003) என்கிறான்.

எல்லா மனிதர்களையுமே அழகாகப் படைத்திருப்பதாக படைத்தவனே வாக்குமூலம் கொடுத்திருக்கும்போது, மனிதர்களாகிய நாம்தான் சிலரை அழகானவர்கள் என்றும், வேறு சிலரை அழகற்றவர்கள் என்றும் பிரித்துக் கொண்டுள்ளோம். இந்த மனப்பான்மையால் தேகம் கருத்தவர், என்னை கருப்பாகப் படைத்த இறைவன் எப்படி எல்லோருக்கும் அன்புடையவனாக இருக்க முடியும்? என்று கேட்கக் கூடும் . இன்றைய உலகில் செயற்கை மேக்அப் மற்றும் ஆடைகளே மனிதர்களின் புறஅழகை நிர்ணயிக்கின்றன. வெளிர்நிற தேகத்தை அழகின் அளவு கோளாகக் கருதும் மாயபிம்பம் நம்மில் பலரிடம் பதிக்கப்பட்டு விட்டது. குறிப்பாக ஆசிய நாட்டவரில் இந்தியர்களிடம் இந்த மனப்பான்மை மிகுந்துள்ளது.

மருத்துவ ரீதியில் ஆரோக்கியமான உடலே அழகான உடலாகும். இரத்தத்தில் Melanin எண்ணிக்கையே தேகநிற வேறுபாட்டிற்குக் காரணம். பொதுவாகச் சூரிய ஒளி மிகுந்துள்ளப் பிரதேசங்களில் தான் கருந் தேகத்தவர்கள் அதிகம் இருப்பர். சூரியனிலிருந்து வெளிப்படும் புற ஊதாக் கதிர்களிலிருந்து (UV Rays) உடம்பைக் காப்பதோடு தோல் புற்று (Skin Cancer) ஏற்படாமல் Melanin காக்கிறது! நியாயமாகப் பார்த்தால் இந்தியா போன்ற சூரிய வெப்பமுள்ள நாடுகளில் வாழும் கருந்தேகத்தவர்கள் சந்தோஷப்பட வேண்டும்!

 لَقَدْ خَلَقْنَا الإنْسَانَ فِي أَحْسَنِ تَقْوِيمٍ

“(திடமாக), நாம் மனிதனை மிகவும் அழகிய அமைப்பில் படைத்தோம்” என்ற (095:004) திருக்குர்ஆன் வசனங்கள் எத்தனை உண்மை!

இயற்கையாகவே மனித உடல் பெற்றிருக்கும் சில சிறப்புக் கூறுகளை அறிந்தால் மகத்தான இறைவனின் மறைந்திருக்கும் வல்லமைகளை உணரலாம். கட்டுரையின் நீளம் கருதி, சுருக்கமாகச் சில உடலியல் அற்புதங்களை மட்டும் பார்ப்போம்:

உடலமைப்பு:

மனித உடல் பலகோடி உயிரணுக்களின் தொகுப்பால் ஆனது. ஒரு சதுர அங்குல மனிதத்தோலில்  19,000,000 உயிரணுக்கள் உள்ளன. ஒவ்வொரு மணிநேரமும் சுமார் ஒரு பில்லியன் உயிரணுக்கள் தோன்றி மறைகின்றன.ஒவ்வொரு மனித உடலும் சராசரியாக ஒரு நாயைக் கொல்லும் அளவுக்கு சல்ஃபர், 900 பென்சில்களை உருவாக்கப் போதுமான கார்பன்,பொம்பைத் துப்பாக்கியை எரிக்கும் அளவுக்கு பொட்டாசியம், ஏழு பார் சோப்பு செய்யும் அளவுக்கு கொழுப்பு, 2,200 தீக்குச்சிகள் செய்யப் போதுமான பாஸ்பரஸ், பத்து குடங்களை (Gallons) நிரப்பும் அளவுக்குத் தண்ணீர் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. நமது உடலிலுள்ள கனிமங்களைக் கொண்டு நமக்குத் தேவையான அனைத்து வகை மருந்துகளையும் உற்பத்தி செய்து கொள்ளமுடியும்.

இரத்த ஓட்டம்:

மனித உடலில் ஒவ்வொரு விநாடியும் சுமார் பத்து இலட்சம் சிவப்பணுக்குள் செத்து மடிகின்றன. உடம்பு முழுவதும் இரத்த ஓட்டத்தை எடுத்துச் செல்லும் நரம்புகளின் நீளம் ஏறத்தாழ ஒரு இலட்சம் மைல்கள்! ஒவ்வொரு நாளும் சிறுநீரகங்கள் வழியாக சுமார் 400 காலன் அளவுக்கு இரத்தம் சுத்தம் செய்யப்படுகிறது!

எலும்புகள்:

பிறகும்போது சுமார் 300 எலும்புகளுடன் பிறக்கும் மனிதன் முழுவளார்ச்சியடைந்த மனிதனாகும்போது 206 எலும்புகளே இருக்கும்! நாளடைவில் ஒன்றோடொன்று இணைவதால் சுமார்  94 எலும்புகள் குறைகின்றன!

மூளை:

வாலிப வயதை அடைந்ததும் சுமார் 35 வயது முதல் நாளொன்றுக்கு ஏழாயிரம் உயிரணுக்கள் மூளையில் சாகின்றன. அவற்றிக்குப் பதிலாக வேறு உயிரணுக்கள் தோன்றுவதில்லை. (வயதாக வயதாக மனிதனின் ஞாபக சக்தி குறைவதற்கு இதுவும் காரணமோ?). மனிதன் சுவாசிக்கும் ஆக்ஸிஜனில் ஐந்தில் ஒருபங்கு மூளைக்குச் செல்கிறது!

குடல்:

இரு வாரங்களுக்கு ஒருமுறை குடற்சுவர் தானகவே புதுப்பிக்கப்படுகின்றது. இல்லாவிட்டால் குடல் தன்னைத்தானே ஜீரணித்துக் கொள்ளும்!

ரேகைகள்:

மனிதனை வேறுபடுத்தி அறிய, அவனது கைரேகை உதவுகிறது. அதேபோல் சருமம், நாக்கு ஆகியவையும் தனித்தனி ரேகைகளைக் கொண்டுள்ளன. இவை ஒவ்வொரு மனிதனுக்கும் தனித்தனியான அமைப்பைக் கொண்டுள்ளது!

இத்தனை அற்புதங்களுடன் மனித உடலைப் படைத்திருக்கும் அல்லாஹ் நிச்சயமாக படைப்பாளார்களிலெல்லாம் மிக அழகியப் படைப்பாளன். அவனை அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் என்றால் மிகையில்லை!

ஆக்கம்:N. ஜமாலுத்தீன்(http://www.satyamargam.com/author/jamaluddin/)

சத்தியமார்க்கம்.காம் நடத்திய கட்டுரைப் போட்டியில் பங்கு கொண்டு கட்டுரையை அளித்த சகோதரர் N. ஜமாலுத்தீன் அவர்களுக்கு நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்வதோடு எதிர்காலத்தில் பரிசுகள் வெல்ல வாழ்த்துகிறோம்! – சத்தியமார்க்கம்.காம்