உ.பியில் துவங்கவிருக்கும் போர்!

Share this:

தர்ம சேனா தயார் – பயங்கர ஆயுதங்களுடன்! 

2020இல் உத்தரப் பிரதேசத்தில் என்ன நடக்கும்?

“போர் நடக்கும்” என்கிறது ‘ஹிந்து ஸ்வபிமான்’!  

இந்தியத் தலைநகரின் புறநகர்ப் பகுதியில், உத்தர்கண்ட் எல்லையை ஒட்டிய சுற்று வட்டாரத்தில் ‘ஹிந்து ஸ்வபிமான்’ எனும் குழு ஒன்று உருவாகி, ‘தர்ம சேனா’ என்ற பெயரில் ஆயுதப் பயிற்சியில் வெளிப்படையாக ஈடுபட்டு வருகிறது. ‘இஸ்லாமிக் ஸ்டேட் இராக் & சிரியா’ என்று சொல்லிக்கொள்ளும் ISIS உடன் போர் தொடுக்க இந்தக் குழு துவக்கப்பட்டுள்ளதாகவும் அது 2020க்குள் உ.பி மாநிலத்தின் மேற்குப் பகுதியைக் கைப்பற்றிவிடும் என்றும் அது நம்புகிறது. “தங்களுடைய மதத்தைப் பாதுகாக்க தங்கள் உயிரையும் தரத் தயாராக உள்ள 15,000 போர் வீரர்கள் ஏற்கெனவே தங்களிடம் உள்ளனர்” என்று இந்தக் குழுவின் தலைவர்கள் தெரிவிக்கின்றார்கள். 

மேற்கு உ.பி. பகுதிகளைச் சுற்றி அமைந்துள்ள அவர்களின் நான்கு முகாம்களை டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் ஓர் அணி, ஒரு வார காலமாகப் பார்வையிட்டது. வகுப்புவாதக் கலவரங்களுக்கு இலக்காகக்கூடிய பகுதிகள் அவை. சிறுவர்களைக்கூடப் போர் வீரர்களாக ஆள்சேர்த்து வைத்துள்ளது இந்த அமைப்பு. அதில் சிலர் எட்டு வயதே நிரம்பிய பாலகர்கள். துப்பாக்கி, வாள்கள் ஆகியவற்றைப் பயன்படுத்த அவர்கள் அனைவருக்கும் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. காஸியாபாத் மாவட்டத்திலுள்ள தஸ்னா எனும் கோயிலை இந்தக் குழுவின் தலைவர்கள் தலைமையகமாகக் கொண்டுள்ளனர். ஒவ்வொரு வாரமும் தங்களது படையணி பெருகி வருவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். இதுவரை வெளியே தெரியவந்த 50 பயிற்சி முகாம்களுள் சில மறைமுகமாக இருந்தாலும் பம்ஹெடா, ரோரி போன்ற இடங்களில் உள்ள பலவும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் சிறுவர்களுக்கும் சிறுமிகளுக்குமாக எதிரி தாக்கினால் பதிலடி கொடுக்கத் தயாராக இருப்பதற்கு பகிரங்கமாக பயிற்சி அளிக்கின்றன.  மீரட் நகரில் மூன்று முகாம்களும் முஸஃபர்நகர் மாவட்டத்தில் மட்டுமே ஐந்து முகாம்களும் உள்ளன என்று தெரிய வந்துள்ளது. 

http://timesofindia.indiatimes.com/photo/50648082.cmsஹிந்து ஸ்வபிமான் தலைவர்களுள் ஒருவரான செட்னா ஷர்மா, விஹெச்பியின் துர்கா வாஹினியின் உறுப்பினரும்கூட. அவர் திங்களன்று டைம்ஸ் ஆஃப் இந்தியாவிடம் கூறியதாவது : “எங்களது குறிக்கோள் எளிமையானது – இள வயதினராக இருக்கும்போதே அவர்களைப் பிடிப்பது. மேற்கு உபி முழுவதும் எங்களுக்கு 50 பயிற்சிப் பாசறைகள் உள்ளன. எங்களுடைய மாணவர்கள் 8 வயதிலிருந்து 30 வயதிற்கு உட்பட்டவர்கள். சேர்ந்ததுமே துப்பாக்கிகளையும் வாள்களையும் நாங்கள் அவர்களுக்கு அளிப்பதில்லை. முதல் ஆறு மாதங்களுக்கு அவர்களது மனத்தை மாற்றப் பயிற்சி அளிக்கின்றோம். கீதையிலிருந்து வசனங்களை அவர்களுக்குப் போதிக்கின்றோம். ஹிந்துக்கள் மரணத்தை நினைத்து அஞ்சக்கூடாது; ஏனெனில் நாம் மறுபிறவி எடுக்கின்றோம். என்பதைப் பதிய வைக்கின்றோம். இங்குள்ள குழந்தைகள் அச்சமற்றவர்கள்.” 

சீமா குமாரி (பெயர் மாற்றப்பட்டுள்ளது), எனும் 8 வயது சிறுமி, “நான் சண்டையிடக் கற்றுக்கொள்கிறேன், ஏனெனில் எங்களுடைய தாயார்களும் சகோதரிகளும் அச்சுறுத்தப்படுகிறார்கள். நான் அவர்களையும் என்னையும் பாதுகாக்க வேண்டும்,” என்கின்றாள்,   ஒன்பது வயது சிறுவன் ஒருவனும் அதே கருத்தை எதிரொலிக்கின்றான். 

இந்தியாவின்மீது பயங்கரவாதிகள் நிகழ்த்திய தாக்குதல்கள், பிஞ்சு உள்ளங்களை மூளைச் சலவை செய்வதற்கு, ஹிந்து ஸ்வபிமானின் கருத்தியல்களுக்கு ஒரு வாய்ப்பை வழங்கியுள்ளது. பர்மிந்தர் ஆர்யா என்பவர் முன்னாள் இராணுவ வீரர். மோதிநகருக்கு அண்மையில் உள்ள ரோரி கிராமத்தில் அமைந்துள்ள ஹிந்து ஸ்வபிமானின் முகாமொன்றில் சிறுவர்களுக்கு இவர் பயிற்சி வழங்குகிறார். அவர், “எங்களது பயிற்சி எளிமையானது. நாட்டில் நிகழும் தீவிரவாத நடவடிக்கைகளைப் பற்றி சிறார்களுக்கு விளக்குகின்றோம்” என்கிறார். 

“ISIS போல் ஹிந்துக்களுக்கும் ஒரு தீவிரவாதக் குழு இருக்க வேண்டும்” – சுவாமி நர்சிங்ஹானந்த் சரஸ்வதி

எடுத்துக்காட்டாக பதான்கோட் நிகழ்வு ஒரு பெரும் பிரச்சினையாக இந்தச் சிறுவர்களுடன் விவாதிக்கப்பட்டது என்றார் அவர். “ஹிந்துக்களாகிய நமக்கு அச்சுறுத்தலாகப் பெருகி வரும் இஸ்லாமிய அடிப்படைவாதத்தின் கோர முகம் இப்படியாகத்தான் அவர்களுக்குப் புரியவைக்கப்படுகிறது. நான் இராணுவத்தில் பணியாற்றும்போது கஷ்மீரில் எனக்குப் பணி அமைந்தது. இந்தியப் படையில் பாதியளவு பள்ளத்தாக்கில் பணியில் இருந்தது. இருப்பினும் கஷ்மீரி பண்டிட்களின் வெளியேற்றத்தை அவர்களால் தடுக்க முடியவில்லை. இது நாமே சுயமாக முடிவெடுத்துச் செய்ய வேண்டிய காரியம்” 

இவை யாவும் அரசு நிர்வாகத்தின் கண் பார்வை எல்லைக்குள்தான் நிகழ்கின்றன. ஆனால் மீரட் மண்டலத்தின் ஐஜி அலோக் ஷர்மாவோ இந்த நடவடிக்கைகளைப்பற்றித் தமக்கு எதுவுமே தெரியாது என்று கூறுகிறார். “இப்படியான நடவடிக்கைகள் நடைபெறுவதாக எங்களுக்கு எந்தத் தகவலும் வரவில்லை. நிச்சயமாக நான் இவ்விஷயத்தைக் கவனிக்கிறேன்” என்று திங்களன்று டைம்ஸ் ஆஃப் இந்தியாவிடம் அவர் கூறினார். 

கஸியாபாதின் பாம்ஹெடா கிராமத்தில் அக்ஹாரா எனப்படும் விடுதி வசதியுடன் கூடிய பயிற்சிக் கூடம் நடத்தும் அனில் யாதவ் முன்னாள் மல்யுத்த வீரர், கராத்தே கலைஞர். என்ன வந்தாலும் சரி, இந்த “வேலை” இப்பொழுது நிற்காது என்கிறார் அவர். 

“இத்தகைய பயிற்சி முகாம்களை நாங்கள் அக்ஹாராக்களாக நடத்துகிறோம். அக்ஹாராக்கள் நடத்துவது என்பது சட்டவிரோதமன்று. ஆயினும் சில முகாம்களை ரகசியமாக நடத்த விரும்புகிறோம். ஏனெனில் காவல் துறையினர் அவற்றை மூடிவிடுவதை நாங்கள் விரும்பவில்லை. என்னுடைய மாணவர்கள் கண்டிப்பான விதிமுறைகளைப் பின்பற்றுகிறார்கள். அவர்கள் கராத்தே கலையில் பயிற்சி பெற்றுள்ளார்கள். துப்பாக்கிச் சுடுவதிலும் அவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டிருக்கிறது. துப்பாக்கியைப் பயன்படுத்துவதற்குக் குழந்தையொன்று விரும்பினாலும்கூட நாங்கள் பயிற்றுவிப்போம். ஆறே மாதங்களில் ஒரு மாணவன் தானே சுயமாகப் பயிற்சி முகாம் தொடங்கி கிளை பரப்ப முடியும். இரண்டு ஆண்டுகளில் நாங்கள் 15,000 சிறுவர்களுக்குப் பயிற்சி அளித்திருக்கின்றோம் எனும்போது ஐந்து ஆண்டுகளில் நாங்கள் எவ்வளவு சாதிக்க முடியும் என்பதைக் கற்பனை செய்து பாருங்கள்.” 

ஹிந்து சந்நியாசி சுவாமி நர்சிங்ஹானந்த் சரஸ்வதியின் கருத்தியல் இந்தக் குழுவின் பணிகளுக்கு நெய் ஊற்றுகிறது. அவர் தங்கியிருக்கும் கோயிலில் பலகையொன்று அறிவிக்கிறது, “இந்தக் கோயில் ஹிந்துக்களின் புனித இடம். முஸ்லிம்கள் நுழைவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. தலைமைப் பூசாரி பாபா நர்சிங்ஹானந்த் சரஸ்வதியின் ஆணை.” தீபக் தியாகி என்று முன்னர் அறியப்பட்ட இந்த சரஸ்வதி 1995 வரை சமாஜ்வாதிக் கட்சியின் உறுப்பினர். முலாயம் சிங் யாதவின் பரம விசிறியாக இருந்தவர். இருபது ஆண்டுகளுக்கு முன், இவரது சமூகத்தைச் சேர்ந்த ஒரு பெண் பாலியல் பிரச்சினையின் காரணமாகத் தற்கொலை செய்துகொள்ள, இவரது விசவாசம் மாறிப்போய் சந்நியாசி ஆகிவிட்டார். 

1923-இல் ஹிந்துத்வா என்ற வார்த்தையை உருவாக்கிய வீர் சாவர்கர் இன்று இவரது ஆதர்ச நாயகன். மேற்கு வங்கம் மால்டாவில் சர்ச்சைக்குரிய கருத்தால் கலவரத்தைத் தூண்டிய அகில் பாரத் ஹிந்து மகாசபையின் தலைவரான கமலேஷ் திவாரி, சரஸ்வதியின் மாணவர். “உ.பி.யின் தேவ்பந்தில் உள்ள தாருல் உலூம் ISISஇன் கருத்தியில் தலைமையூற்று; போர் தொடங்கிவிட்டது” என்று சரஸ்வதி நம்புகிறார்.  

சரஸ்வதிக்கு ISISஇன் மீது அளவுகடந்த வெறுப்பு உள்ளது. அவர் எவ்விதத் தயக்கமுமின்றி, “ISIS போல் ஹிந்துக்களுக்கும் ஒரு தீவிரவாதக் குழு இருக்க வேண்டும். ISISக்கு ஒரு HS (ஹிந்து ஸ்டேட்) தான் சரியான பதில். அவர்களது தீவிரவாதத்திற்கு இணையான தீவிரவாதத்துடன் நாம் ஈடுகொடுக்க வேண்டும். தீயுடன் தீயைக் கொண்டே மோத வேண்டும். அந்தளவுக்கு பிரம்மாண்டமான அமைப்பை உருவாக்க எனக்கு வசதியில்லை. ஆனால் என்னுடைய நோக்கத்தின்மீது நம்பிக்கை வைக்கும் ஹிந்துக்களின் உதவியைக் கொண்டு நான் அதை விரைவில் அடைவேன். எங்களிடம் கைத் துப்பாக்கிகள் உள்ளன. எங்களது படை, பயிற்சிபெற எங்களுக்கு சிறப்பான ஆயுதங்கள் வேண்டும். அவர்களிடம் ஏவுகணைகள் உள்ளன. அதனால்தான் ISIS இவ்வளவு பெரிதாக வளர்ந்துள்ளது.

“ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பைப் பொருத்தவரை அவர்களைப் பற்றி நாங்கள் அறிந்துள்ள தகவல்களெல்லாம் ஊடகம் வாயிலாக கிடைத்த விபரங்களே அன்றி வேறில்லை”- தாருல் உலூமின் துணை வேந்தர் மௌலானா அபுல் காஸிம் நுஃமானி

உள்நாட்டு வர்த்தகத் தலைவர்கள் அவர்களுக்கு உதவியிருக்கிறார்கள். நாடு முழுவதும் உள்ள ஹிந்துக்கள் எங்களுக்கும் உதவுவார்கள்,” என்று கூறுகிறார். 

பெருவாரியான மக்கள் தொடர்பு நிகழ்ச்சிகளைத் தாங்கள் தொடங்கியுள்ளதாக சரஸ்வதி தெரிவிக்கிறார். “சராசரியாக ஒவ்வொரு மாதமும் இரண்டு பஞ்சாயத்துகளிடம் உரை நிகழ்த்துகின்றோம். அந்தப் பஞ்சாயத்துகளில், எனது ஹிந்து சிங்கங்களைத் துணிவுடன் இருக்கும்படியும் தங்களது ஆயுதங்களைத் தங்களுடன் எப்பொழுதும் வைத்திருக்கும்படியும் கேட்டுக் கொள்கின்றேன். முஸஃபர்நகர் கலவரத்தின்போது நாங்கள் களத்திற்குச் சென்று மக்களை ஆயுதம் தரிக்கச் சொன்னோம். ஹிந்துக்களைக் காப்பாற்றியதாகப் பெருமைப்பட்டுக் கொள்ளும் அனைத்து அரசியல்வாதிகளும் பொய் சொல்கின்றனர். 

சுவரில் எழுதப்பட்டுள்ள ஒரு வாசகத்தை அவர் சுட்டிக்காட்டிப் படிக்கிறார், “ஹிந்துச் சிங்கங்களே, நீங்கள் பெருமையுடன் வாழ வேண்டுமென்றால் பெருமையுடன் இறப்பதற்குக் கற்க வேண்டும். நான் என் மக்களை உள் நாட்டுப் போருக்கு ஆயத்தம் செய்கின்றேன். வரப்போகும் உள்நாட்டுப் போரை மாநில அரசாங்கமோ, நரேந்திர மோடியோ நிறுத்த முடியாது. எங்களது அன்பிற்கு உரியவர்களைப் பாதுகாப்பதற்காக சண்டையில் மரணமடைவது எங்களுக்கு சிறப்பே.” 

தேவ்பந்த் பற்றிய ஹிந்து ஸ்வபிமானின் எதிர்வினையைத் தெரிவித்தபோது, தாருல் உலூமின் துணை வேந்தர் மௌலானா அபுல் காஸிம் நுஃமானி, “நாள் முழுக்க எங்களது கதவுகள் திறந்திருக்கின்றன. இங்கு வர விரும்பும் யாரும் வந்து செல்லலாம். ஒவ்வொரு பாடத்திட்டமும் பட்டப்படிப்பும் திறந்த புத்தகம். உளவு அமைப்பைச் சேர்ந்த அதிகாரிகள், உள்ளூர் உளவுப் பிரிவு, காவல் துறை உயரதிகாரி, அரசாங்க அதிகாரிகள் என்று அனைவரும் வந்து எங்களது நிறுவனத்தைப் பார்வையிட்டுச் செல்கின்றார்கள். இந்தப் பல்கலைக் கழகத்தின் 150 ஆண்டுகால வரலாற்றில் இதன் பயிற்சி முறை ஒருமுறைகூட குற்றச்சாட்டுக்கு உள்ளானதில்லை. தனி நபர், அமைப்பு என்று யாராக இருந்தாலும் அவர்கள் எப்படி விரும்புகிறார்களோ அப்படியே விசாரிக்கட்டும். எங்களிடம் மறைப்பதற்கு ஒன்றும் இல்லை. இது அவர்களுக்கு ஒரு திறந்த சவால், ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பைப் பொருத்தவரை அவர்களைப் பற்றி நாங்கள் அறிந்துள்ள தகவல்களெல்லாம் ஊடகம் வாயிலாக கிடைத்த விபரங்களே அன்றி வேறில்லை” என்று கூறினார்.

[டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் ஜனவரி 20, 2016 செய்தித் தொகுப்பைத் தழுவிய செய்தித்தொகுப்பு]

மொழியாக்கம்: நூருத்தீன்

துணை:


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.