தோழர்கள் 66 – ஸுஹைல் இபுனு அம்ரு (பகுதி-1)

Share this:

ஸுஹைல் இபுனு அம்ரு
سهيل بن عمرو

குரைஷிகளிடம் திரும்பி வந்தார் உர்வா இப்னு மஸ்ஊத். அவர் சொல்லப்போகும் செய்திக்காக ஆவலுடன் காத்திருந்தனர் அவர்கள். உர்வாவும் செய்தியைச் சொன்னார். ஆனால் அது அவர்களுக்குப் பெரும் ஏமாற்றம் அளித்த செய்தி.

உர்வா இப்னு மஸ்ஊத் மிகவும் புத்திக் கூர்மையுள்ளவர். பல நாடுகளில் பயணித்து, பழகி அவருக்கு ஏகப்பட்ட அனுபவம். அப்படிப்பட்ட அவர் நிலைமையை வெகு துல்லியமாக அனுமானித்து வந்திருந்தார். அவருடைய நீளமான பேச்சின் சுருக்கம், ‘முஹம்மதின் தோழர்கள் அவரிடம் கொண்டுள்ள மதிப்பு, மரியாதை, பாசம் போல் உலகத்தில் எங்குமே நான் பார்த்ததில்லை. அவருக்காக அவர்கள் எதை வேண்டுமானாலும் இழக்கத் தயாராக உள்ளனர். அவரைத் தவிர அவர்களுக்கு இந்த உலகமும் அதிலுள்ள அத்தனையும் துச்சம். நீங்கள் அவர்களை வாள் கொண்டு வெல்ல முடியாது. அவர்கள் இறை வழிபாடு புரிய பலிப்பிராணிகளுடன் கஅபாவிற்கு வந்துள்ளனர். தடுக்காதீர்கள். அனுமதியுங்கள். சமாதான உடன்படிக்கை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.

அதைக் கேட்டுக் குரைஷிகளுக்கு மனம் ஆறவே இல்லை. மாறாகப் பெரும் ஏமாற்றம்.

எப்படியாவது ஏதாவது பேசி அவர்களைத் திருப்பி அனுப்பிவிடுங்கள்என்று முதலில் அனுப்பி வைத்த புதைல் இப்னு வரக்கா தலைமையில் சென்று வந்த குழுவும் முஹம்மதுக்குச் சாதகமான அறிவுரை வழங்கியது. இரண்டாவதாகச் சென்று வந்த இவரும் இப்படிச் சொல்கிறாரே என்று கவலைப்பட்டவர்கள் அடுத்து அல்-ஹுலைஸ் இப்னு அல்ஃகமா என்பவரை அனுப்பினார்கள். அதற்கு அடுத்து மிக்ராஸ் இப்னு ஹஃப்ஸ்.

ஆள் மாற்றி ஆள் சென்றார்களே தவிர, முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைச் சந்தித்து, பேசி, குரைஷிகளிடம் திரும்பிய அந்த அனைத்துக் குரைஷித் தூதுவர்களும் குரைஷிகளுக்குச் சாதகமான பதிலைச் சொல்லவே இல்லை. சளைக்காத குரைஷியர்கள் அடுத்ததாக ஒருவரை அனுப்பினார்கள். அவர் ஸுஹைல் இப்னு அம்ரு.

oOo

ஹிஜ்ரீ 6ஆம் ஆண்டு நிகழ்ந்த ஹுதைபிய்யா உடன்படிக்கை’, இஸ்லாமிய வரலாற்றில் மிக முக்கியமான ஓர் அத்தியாயம். அதை ஆங்காங்கே எட்டிப் பார்த்துக் கடந்து வந்துவிட்டோம். குறுநாவல் அளவிற்கு நீளும் அந்நிகழ்வைச் சற்று விரிவாகப் பார்த்துவிடுவோம்.

மக்கத்து முஸ்லிம்கள் புலம்பெயர்ந்து மதீனா வந்துவிட்டார்கள். மதீனாவில் இஸ்லாமிய மீளெழுச்சி ஆழப்பதிந்து, பரவி இஸ்லாமிய ஆட்சியும் நிலைப்படுத்தப்பட்டுவிட்டது. ஆனால் மக்கத்துக் குரைஷிகள் அளித்துவந்த தொந்தரவும் அவர்களுடன் நிலவி வந்த பகையும் முற்றுப்பெறவில்லை. அந்த வேதனை ஒருபுறமென்றால் மக்காவில் அமைந்திருந்த கஅபாவுக்குச்சென்று புனிதக் கடமைகளை நிறைவேற்ற முடியாத சோகம் முஸ்லிம்களுக்குப் பெரும் வேதனையாக இருந்து வந்தது. குரைஷிகளுக்கோ தாங்கள் தொடர்ந்து போரில் தோற்ற அவமானமும் அதனால் ஏற்பட்டுப் போயிருந்த இழப்பும் பொருளாதார நெருக்கடிகளும் என்று முஸ்லிம்கள் மீது சொல்லி மாளாத வெறுப்பு.

இந்நிலையில் ஒருநாள் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் 1,400 முஸ்லிம்களுடன் புனித யாத்திரைக்கான இஹ்ராம் உடை அணிந்துகொண்டு, பலிப் பிராணிகளையும் நடத்திக்கொண்டு உம்ராக் கடமையை நிறைவேற்ற அமைதிப் பயணம் கிளம்பினார்கள். அவர்கள் அனைவருக்கும் உள்ளர்த்தம் எதுவும் இல்லாத ஒரே நோக்கம் அமைதியான முறையில் மக்காவுக்குச் சென்று கஅபாவில் உம்ரா நிறைவேற்றித் திரும்புவது. அவ்வளவுதான். வெகு எளிய நோக்கம்.

மக்காவுக்கு இந்தச் செய்தி வந்து சேர்ந்ததும் வெகுண்டெழுந்தார்கள் குரைஷிகள். உம்ராவோ, உறவுகளைக் காணும் பயணமோ. அதெல்லாம் முடியாது. மக்காவுக்குள் நுழைய அவர்களுக்கு அனுமதி கிடையாதுஎன்று சொல்லிவிட்டனர்.

எப்படி நுழைகிறார்கள் எனப் பார்ப்போம் என்று காலித் பின் வலீத் தலைமையில் படைக்குழுவொன்று புறப்பட்டுச் சென்று பயணிகள் வரும் பாதையில் காத்திருக்க ஆரம்பித்தது. அந்தச் செய்தி நபியவர்களுக்குத் தெரிய வந்தது. சண்டையோ, போரோ நோக்கமல்ல, காரியம் முக்கியம் அதுவும் இது உம்ரா எனும் இறைவழிபாடு என்பதால் மற்றொரு பாதையில் படு கமுக்கமாகச் சுற்றி வளைத்துப் பயணித்து மக்காவுக்கு வெளியே ஹுதைபிய்யா என்ற இடத்திற்கு முஸ்லிம்கள் வந்து சேர்ந்தனர். அதைக்கண்டு குரைஷிகளுக்கு ஆச்சரியம். நமது படை அந்தப் பக்கம் சென்று காத்துக் கொண்டிருக்கிறது. இவர்கள் இந்தப் பக்கம் வந்து இறங்கிவிட்டார்கள். ஆஹா போர்தான் போலிருக்கிறது என்று அதிர்ச்சி!.

ஆனால் நபியவர்களோ, ‘நாங்கள் போரிட வரவில்லை. கஅபாவைத் தரிசித்து உம்ராவை நிறைவேற்ற வேண்டும். அதுதான், அதுமட்டும்தான் எங்களது நோக்கம். யார் ஒருவரும் சுதந்திரமாக கஅபாவுக்கு வர முடியும்; வழிபாடுகள் செய்ய முடியும்; அதற்கு எவ்விதத் தடையுமில்லை. அவர்களுக்கெல்லாம் கஅபாவின் மீது இருக்கும் உரிமை எனக்கும் தோழர்களுக்கும் மட்டும் இல்லையா என்னஎன்று தங்களது நிலையை விளக்கி குரைஷிகளிடம் தூது அனுப்பினார்கள்.

முஸ்லிம்கள் மோதலுக்கோ ஆயுதமேந்தவோ வரவில்லை என்பது தெளிவானதும் அப்பாடா என்று நிம்மதி மூச்சு வந்தது குரைஷியர்களுக்கு. சரி! சரி! வந்த வேலையை முடித்துக்கொண்டு போய்ச் சேருங்கள் என்று வீண் அலட்டலாகவேனும் அனுமதி அளித்திருக்கலாம் இல்லையா? முரண்டு பிடித்தது குரைஷிகளின் தலைமை. அப்படியெல்லாம் அவர்களை எளிதாக ஊருக்குள் விட்டுவிடக்கூடாது எப்படியாவது பேசி அவர்களை மதீனாவிற்குத் திருப்பி அனுப்பி விடுங்கள் என்று அவர்கள் ஒருவர் மாற்றி ஒருவர் என்று அனுப்பி வைத்த தூதுவர்களின் வரிசைதான் புதைல் இப்னு வரக்கா, உர்வா இப்னு மஸ்ஊத், அல்-ஹுலைஸ் இப்னு அல்ஃகமா, மிக்ராஸ் இப்னு ஹஃப்ஸ்.

சென்று வந்த ஒவ்வொருவரும் முஹம்மது நபியவர்களுக்குச் சாதகமாகவே பரிந்து பேசியதைக் கேட்டும் குரைஷிகளின் மனம் மாறவில்லை. கடைசியாக அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஸுஹைல் இப்னு அம்ரு.

இதற்கிடையே மற்றொரு முக்கியத் திருப்பம் ஒன்றும் ஏற்பட்டிருந்தது. முஸ்லிம்கள் தரப்பில் மக்காவுக்குள் தூதுவராக அனுப்பப்பட்ட உதுமான் இப்னு அஃப்பான் ரலியல்லாஹு அன்ஹு கொல்லப்பட்டுவிட்டார்என்றொரு செய்தி கிளம்பி, பரவியது. அது முஸ்லிம்களின் நிலைப்பாட்டை அப்படியே மாற்றி அமைத்தது. குரைஷிகளுடன் போர் புரியாமல் நாம் இவ்விடத்தை விட்டு நகர மாட்டோம்என்று நபியவர்கள் அறிவித்து விட்டார்கள். அதைக்கேட்டுத் தோழர்கள் ஒவ்வொருவரும் நபியவர்களின் கரத்தைப் பற்றி, தங்களது உயிர் துச்சம் என்று நபியவர்களின் முடிவிற்கு முழுக்க முழுக்கக் கட்டுப்பட்டு ஒப்புதல் அளித்துவிட்டனர். ஒரு மரத்தின் அடியில் நிகழ்வுற்ற இந்தப் புகழ் மிக்க ஒப்பந்தம் பைஅத்துர் ரிழ்வான்’ (அங்கீகரிக்கப்பட்ட இறை பொருத்தத்திற்குரிய உடன்படிக்கை) என்று வரலாற்றில் நிலைபெற்றுவிட்டது.

இந்த பைஅத் பற்றிய செய்தியை அறிந்த குரைஷிகள், இதென்ன புது வம்பு என்று களேபரமானவர்கள், மக்காவினுள் தடுத்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த உதுமான் ரலியல்லாஹு அன்ஹுவை விடுவித்துவிட்டார்கள். அவர் நலமே நபியவர்களிடம் திரும்பி வந்து சேர்ந்த பிறகுதான் போர் மேகம் விலகி, விட்ட இடத்திலிருந்து மீண்டும் பேச்சுவார்த்தை துவங்கியது.

குரைஷிகள் ஸுஹைல் இப்னு அம்ருவை அழைத்து, “இதோ பார் ஸுஹைல். அவர்களை எப்படியாவது திருப்பி அனுப்பிவிடு. இது நமது தன்மானப் பிரச்சினை. இல்லையென்றால் முஹம்மது நம்மைப் பலவந்தப்படுத்தி வென்று மக்காவுக்குள் நுழைந்துவிட்டார் என்று நாளை மொத்த அரபியரும் குரைஷியரை ஏளனமாகப் பேச ஆரம்பித்துவிடுவார்கள். எனவே ஏதாவது சமாதான ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொள். சென்று வா! வென்று வாஎன்று நெற்றியில் திலகமிடாத குறையாக அனுப்பி வைத்தார்கள்.

கிளம்பி வந்தார் ஸுஹைல். அவரைப் பார்த்ததுமே நபியவர்களுக்கு குரைஷிகளின் மனோநிலை புரிந்துவிட்டது. தம் தோழர்களிடம், “உங்களது காரியம் இலேசாகிவிட்டது. இவரை அனுப்பி வைத்ததிலிருந்தே அவர்கள் சமாதானத்தை நாடிவிட்டனர் என்பதைத் தெரிந்து கொள்ளலாம்என்று தெரிவித்தார்கள்.

ஸுஹைல் இப்னு அம்ரு குரைஷித் தலைவர்களுள் மதிப்புமிக்க ஒருவர். ராஜ தந்திரம், அசாத்திய நாவன்மை, அறிவுக் கூர்மை மிக்கவர். ஆனால் இஸ்லாமிய விரோதப் போக்கு மட்டும் அவரிடம் பெருமளவில் நிறைந்திருந்தது. நபியவர்கள் ஏகத்துவப் பிரச்சாரத்தைத் துவங்கிய காலத்தில் அவர்களுக்கு எதிராகத் தமது நாவன்மையைப் பயன்படுத்திய முக்கியமான ஒருவர் ஸுஹைல்.

சுஹைலின் சகோதரர் ஸக்ரான் இப்னு அம்ரு, நபியவர்களின் மனைவி ஸவ்தா பின்த் ஸம்ஆ ரலியல்லாஹு அன்ஹாவின் முன்னாள் கணவர். இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட அந்தத் தம்பதியர் அபிஸீனியாவிற்குப் புலம்பெயர்ந்து, பிறகு மக்கா திரும்பி வந்ததும் ஸக்ரான் மரணமடைந்துவிட்டார். விதவையாகிப்போன ஸவ்தாவை மறுமணம் செய்து கொண்டார்கள் நபியவர்கள். சுஹைலின் அண்ணி மூஃமின்களின் அன்னையானார். சுஹைலின் மைந்தர்களுள் ஒருவரான அப்துல்லாஹ் இப்னு சுஹைலும் ஆரம்பக்காலத்திலேயே இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டு, சித்திரவதைகளிலிருந்து தப்பிக்க முஸ்லிம்களுடன் அபிஸீனியாவிற்குப் புலம்பெயர்ந்து திரும்பி வந்தவர்தாம். அப்படித் திரும்பி வந்தவரைத் தடுத்து, அவர் அடுத்தாக மதீனாவிற்குப் புலம்பெயர்ந்து தப்பி விடாமல் பாதுகாவலுடன் வைத்துக்கொண்டார் ஸுஹைல். புழுங்கித் தவித்துக் கிடந்த அப்துல்லாஹ்வுக்கு நல்லதொரு வாய்ப்பு வந்தது யுத்த வடிவில்.

பத்ரு யுத்தத்திற்காக குரைஷிகளின் பெரும் படையொன்று கிளம்பியபோது தம் தந்தை சுஹைலுடன் தாமும் சேர்ந்து கொண்டார் அப்துல்லாஹ். சபாஷ்! மனம் திருந்திவிட்டான் மகன்என்று உற்சாகமாக அவரை அழைத்துச் சென்றார் ஸுஹைல். யுத்த களத்தில் படை அணிகள் எதிரும் புதிருமாகச் சந்திக்கும்வரை காத்திருந்த அப்துல்லாஹ், அப்படியே தாவிக்குதித்து முஸ்லிம் படைகளுடன் சேர்ந்துகொண்டு குரைஷிகளுக்கு எதிராகப் போரிட ஆரம்பித்துவிட்டார். அது சுஹைலுக்குப் பெரும் அதிர்ச்சி!. அது ஒருபுறம் என்றால், கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாதபடி குரைஷிகளின் படை முஸ்லிம்களிடம் தோல்வியடைந்து, சிறைபிடிக்கப்பட்ட கைதிகளுள் சுஹைலும் ஒருவர். அவருக்கு விலங்கிட்டு மதீனாவிற்கு இழுத்துச் சென்றார்கள் முஸ்லிம்கள்.

பத்ரு யுத்தத்தில் தம் மகன்கள் மூவரை இழந்திருந்த அஃப்ரா பின்த் உபைதைச் சந்தித்து ஆறுதல் கூறிவிட்டுத் திரும்பி வந்து கொண்டிருந்தார் அன்னை ஸவ்தா பின்த் ஸம்ஆ (ரலியல்லாஹு அன்ஹுமா). வரும் வழியில் போர்க் கைதியாக விலங்கிடப்பட்டிருந்த ஸுஹைல் இப்னு அம்ரு. சுஹைலின் கைகள் அவரது கழுத்துடன் விலங்கிடப்பட்டிருந்தன. அவரை நெருங்கி, “அபூயஸீத்! உம்மால் முடியாமல்போய் அகப்பட்டுக் கொண்டீரா? கைசேதம்! போர்க் களத்தில் வீர மரணம் அடையாமல் போனது கைசேதம்என்றார்.

அதைக்கண்ட நபியவர்கள் தம் மனைவியிடம், “நீ அவரை அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எதிராகத் தூண்டுகிறாயா?” என்று கேட்டார்கள்.

அல்லாஹ்வின் தூதரே! சத்தியம் உரைக்கும் நபியாகத் தங்களை அனுப்பியவன்மீது ஆணையாக!. அபூயஸீதின் கைகள் அவ்விதம் அவரது கழுத்துடன் கட்டப்பட்டுள்ள நிலையைக் கண்டவுடன் என்னால் என்னைக் கட்டுப்படுத்த முடியவில்லை. நான் என்ன உரைத்தேனோ அதை உரைக்கத் தூண்டப்பட்டேன்என்றார். குரைஷிக் குலத்துத் தலைவர்களுள் ஒருவரான சுஹைலுக்கு மக்க நகர மக்களிடம் அந்தளவு மதிப்பும் மரியாதையும் அமைந்திருந்தன.

சுஹைலின் இஸ்லாமிய விரோதப் போக்கையும் நபியவர்களுக்கு எதிரான அவரது பேச்சையும் பிரச்சாரத்தையும் நன்கு அறிந்திருந்தவர் உமர். அதனால் அவருக்குள் சுஹைலின்மீது நீண்ட நாளாய் அடக்க மாட்டாத ஓர் ஆத்திரம் கனன்று கொண்டே இருந்தது. இப்பொழுது அவர் வசமாக முஸ்லிம்களிடம் சிக்கியதும், உமர் நபியவர்களிடம் சென்று, “அல்லாஹ்வின் தூதரே! சுஹைலின் முன் பற்களை நான் உடைத்து எடுத்து விடுகிறேன். அதன்பிறகு அவரது நாக்குத் துறுத்தி, எங்கும் எவர் முன்னிலையிலும் தங்களுக்கு எதிராகப் பேச இயலாதவராக ஆகிவிடுவார்என்று அனுமதி கேட்டார்.

அதற்கு முஹம்மது நபி, “நான் எவருடைய அங்கத்தையும் சிதைக்க மாட்டேன். ஏனெனில் நான் அல்லாஹ்வின் தூதராகவே இருந்தபோதிலும் அல்லாஹ் என் அங்கத்தைச் சிதைக்கக்கூடும். ஒரு காலம் வரலாம். அப்பொழுது இவர் எழுந்து நின்று பேசப்போகும் பேச்சு நீங்கள் குறை காணமுடியாத ஒன்றாக அமையக்கூடும்என்று பதில் அளித்து விட்டார்கள். ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்.

அனுமதி மறுக்கப்பட்டது போக, அந்த பதிலில் அடங்கியிருந்த முன்னறிவிப்பும் பிற்காலத்தில் நிகழ்ந்தது. அதைக் கடைசியில் பார்ப்போம். போர்க் கைதியாக அகப்பட்டிருந்த சுஹைலை, மிக்ராஸ் இப்னு ஹஃப்ஸ்தாம் வந்து மீட்டுச் சென்றார். அதுவுமேகூடச் சிறு சிக்கலுடன்தான் முடிந்தது. அவரைச் சிறைப்பிடித்திருந்த அன்ஸாரியிடம் பேரம்பேசி முடித்துவிட்டுப் பார்த்தால் மீட்புத்தொகைக்கான முழுப் பணமும் மிக்ராஸிடம் இல்லை. மக்காவிலிருந்து கிளம்பி வந்திருந்தார். பகையாளிகளிடம் சிறைப்பட்டுள்ள நண்பனை மீட்க இங்கு மதீனாவில் மற்றப் பகையாளியிடமா போய்க் கடன் கேட்க முடியும்? எனவே, ‘சுஹைலுக்குப் பகரமாய் நான் இருந்து கொள்கிறேன். அவர் ஊருக்குப்போய்ப் போதிய பணம் ஏற்பாடு செய்து கொண்டுவருவார்என்று சுஹைலுக்குப் பகரமாய் அவர் சிறைபட்டு, ஸுஹைல் சென்று மீதப் பணத்தை ஏற்பாடு செய்து கொண்டுவந்து மிக்ராஸை மீட்டுச் சென்றார்.

பழைய பிணை நிகழ்வை இத்துடன் முடித்துக்கொண்டு நாம் ஹுதைபிய்யாவுக்குத் திரும்புவோம்.

இன்னும் வருவார், இன்ஷா அல்லாஹ்!

 


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.