கோத்ரா தீ விபத்து – ஆதாரங்களை மோடி அழித்ததாக வாக்குமூலம்!

குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடி கோத்ரா தீ விபத்து நடந்தவுடன், சம்பவ இடத்தைப் பார்வையிட்டு முக்கியமான ஆதாரங்களை அழித்ததாக குஜராத் கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களின் அமைப்பான ஜனசங்கர்ஷ் மஞ்சின் வழக்கறிஞர் முகுள்சின்ஹா நானாவதி கமிஷன் முன்னிலையில் வாக்குமூலம் அளித்துள்ளார். இந்த வாக்குமூலம்  நானாவதி கமிஷன் நடத்தும் விசாரணையில் மோடி அரசுக்கெதிரான முக்கிய வாக்குமூலமாக கருதப்படுகிறது. 

முதல் தகவல் அறிக்கை (FIR) பதியப்படுவதற்கு முன்பாகவே மோடி நூற்றுக்கணக்கான தனது ஆதரவாளர்களுடன் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டிருந்தார். ஒரு மோசமான தீ விபத்து நடந்த இடத்தின்  பகுதியில் பொதுமக்களை தாராளமாக அனுமதித்து,

அவர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் காவல்துறை மிக அலட்சியமாக நடந்து கொண்டதாக சின்ஹா கமிஷன் முன்னிலையில் ஆதாரத்துடன் விளக்கியுள்ளார். மோடியும் அவர் ஆதரவாளர்களும் மிதித்து சேதப்படுத்திய இடத்திலிருந்து சேகரித்த 16 ஆதாரங்களின் நம்பகத்தன்மையில் சந்தேகம் உள்ளதாக அவர் கமிஷனிடம் கூறியுள்ளார்.

 

சம்பவம் நடந்து  காவல்துறை அவ்விடத்தில் ஆதாரங்களைச் சேகரிக்கும் முன்பாகவே மோடி சம்பவ இடத்திற்கு சென்று  பார்வையிட்டதில் அதிக உள்நோக்கங்கள் இருப்பதாகவும் அவர் தனது வாக்குமூலத்தில் குறிப்பிட்டுள்ளார். முதலமைச்சர் மட்டுமல்ல அவரின் நூற்றுக்கணக்கான ஆதரவாளர்களும் தீயில் எரிந்து  போன பகுதிகளை பார்வையிட்டுள்ளனர். சம்பவத்தைக் குறித்து முதல் தகவலறிக்கை தயாரிக்கும் முன்பே காவல்துறை நூற்றுக்கணக்கான நபர்களை சம்பவ இடத்தில் அனுமதித்தது எதற்காக என்று கமிஷன் முன்பாக சின்ஹா கேள்விகளை எழுப்பியுள்ளார்.

மேலும் குஜராத் தீயணைப்புப்படை சாதாரணமாக அது செயல்படும் வேகத்தில் செயல்பட்டிருந்தாலே மரண எண்ணிக்கை 59 ஆக உயர்ந்ததை  தடுத்திருக்க முடியும் என்றும், சம்பவ இடத்திலிருந்து வெறும் ஒன்றரை கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் தீயணைப்புப்படை சம்பவ இடத்திற்கு வந்து சேர 45 நிமிடங்கள் ஆனது. இதனைக் குறித்து விவரமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் கமிஷனிடம் கோரியுள்ளார். தன்னுடைய குற்றச்சாட்டுகளுக்கும், வாதங்களுக்கும் உரிய ஆதாரங்கள் அடங்கிய ஓர் விளக்கப் படத்தையும் அவர் கமிஷன் முன்னிலையில் திரையிட்டுக் காண்பித்துள்ளார்.

ஆதாரங்களை அழிப்பதில் மட்டுமின்றி தொடர்ந்து நடந்த விசாரணையை தவறான வழிக்குத் திசை திருப்பி விடுவதிலும் மோடி வெற்றி பெற்றுள்ளார் என்று சின்ஹா கூறினார். தீவிபத்து ஒரு சாதாரண சம்பவம் அல்ல என்றும், அது ஒரு திட்டமிட்ட செயல் என்று சம்பவ தினத்தில் மோடி கூறியதை  மட்டுமே மாநில அரசுக்காக விசாரணையை மேற்கொண்டவர்கள் கருத்தில் கொண்டு விசாரணை செய்தனர். முதலமைச்சரின் வாதம் சரியானது தான் என்று நிரூபிப்பதற்கே விசாரணை அதிகாரிகள் சிரமப்பட்டு வேலை செய்தனர் என்றும் அவர் கமிஷன் முன்னிலையில் கூறினார்.

கோத்ரா சம்பவமும் அதனைத் தொடர்ந்து சங்க்பரிவார அமைப்பினர் செய்த முஸ்லிம்களுக்கெதிரான கலவரங்கள் குறித்து விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட நானாவதி கமிஷன் தற்போது அதன் இறுதி கட்டத்தில் உள்ளது. ஜனவரி 6 அன்று நடைபெற உள்ள விசாரணையில் காங்கிரஸ் அதன் நிலைபாட்டினை வெளிப்படுத்தும் என்பதும் மேலதிக தகவலாகும்.