பாலஸ்தீனும் மேற்கத்திய ஊடகங்களும் – 8

சிறைப்பிடிக்கப்பட்ட பாலஸ்தீனச் சிறுவன்

த்திய ஆசியாவில் நிரந்தரமாகத் தனக்கென ஓர் இருப்பிடத்தை ஏற்படுத்துவதற்காக இஸ்ரேல் எல்லாவித உலக நடைமுறைகளையும் சட்ட திட்டங்களையும் மீறுவதற்கும், ஐநாவிற்கு கட்டுப்படாமல் செயல்படுவதற்கும் அதற்கு எல்லா விதமான உதவிகளையும் அமெரிக்கா செய்து வருகிறது.   இதன் ஒரு பாகமாகத்தான் ஐநாவில் சமீபத்திய இஸ்ரேலின் லபனானுக்கெதிரான தாக்குதலுக்கு எதிராக கத்தர் கொண்டு வந்த தீர்மானம், ஐநா பாதுகாப்பு கவுன்சில் அங்கத்தினர்களான 15 நாடுகளில் 10 நாடுகளின் ஆதரவுடன் நிறைவேற இருந்ததை தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி அமெரிக்கா முறியடித்தது. ஆனால் அதே நேரம் எந்த நாட்டின் மீதும் அத்துமீறி தாக்குதல் தொடுக்காத தங்கள் நாட்டு பாதுகாப்புத்துறைக்கு பலம் சேர்க்கும் விதமான ஏவுகணை பரிசோதனைகள் செய்யும் வடகொரியாவை, அதன் இராணுவத்துறையின் அபரிதமான வளர்ச்சி எங்கே தனக்கு எதிராக பின்னர் ஆகி விடுமோ என பயந்த அமெரிக்கா, ஜப்பான் அதற்கெதிராக கொண்டு வந்த தீர்மானத்தை வெற்றிபெற ஆதரித்து அத்தீர்மானம் நிறைவேற உதவியது.  

அமெரிக்காவின் இந்நயவஞ்சக செயல்பாடு இன்று நேற்று உருவானதல்ல. இஸ்ரேலின் உருவாக்கத்திற்குப் பிறகு இஸ்ரேல் தனது அண்டை நாடுகளை ஆக்ரமிக்கும் பொழுதெல்லாம் அமெரிக்கா இதைத் தான் செய்து வந்துள்ளது. உதாரணமாக 1967-ல் இஸ்ரேல் பலஸ்தீன பகுதியான மேற்கு ஜெருசலம் பகுதியை அநியாயமாக ஆக்ரமித்த பொழுது நடந்த சம்பவங்களை கூறலாம்.  

1948 -ல் பலஸ்தீனை, பலஸ்தீன் – இஸ்ரேல் என இரு பாகங்களாகப் பிரித்தனர். இதில் அல் அக்ஸா பள்ளிவாசல் (பைத்துல் முகத்தஸ்) நிலைகொள்ளும் ஜெரூசலம் பகுதி இரண்டாக பிரிக்கப்பட்டு மேற்கு ஜெருசலம் இஸ்ரேலின் பாகமாகவும் கிழக்கு ஜெருசலம் புதிய பலஸ்தீனின் பாகமாகவும் பங்கு வைக்கப்பட்டது. புதிய பலஸ்தீன் பகுதிகளாகப் பிரித்து கொடுக்கப்பட்ட கிழக்கு ஜெருசலம் பகுதியை 1967 -ல் அனைத்து உலக சட்டங்களையும், நடைமுறைகளையும், உடன்படிக்கைகளையும் காற்றில் பறக்க விட்டுக் கொண்டு இஸ்ரேல் ஆக்கிரமித்தது.

இப்பகுதி 1948 ல் பிரிக்கப்பட்டு பலஸ்தீன் பாகமாக்கப்பட்டபோது அங்கிருந்து வெளியேறி இஸ்ரேலின் பாகமான மேற்கு ஜெருசலம் பகுதியில் குடியேறிய 2400 யூதர்களை இஸ்ரேல் மீண்டும் இங்கு குடியமர்த்தியது.   ஜெனீவா உடன்படிக்கையின் 49 -ஆம் பிரிவுப்படி இதுவும் சட்ட விரோதமானகும். இந்தச் சட்டம் யுத்தத்தின் மூலமாக ஆக்ரமிக்கப்பட்ட பகுதியில் வெற்றி பெற்ற நாடு தனது குடிமக்களை குடியமர்த்துவதை சட்டவிரோதமாக்குகிறது. இடம் பெயர்ந்த இவர்களல்லாமல் மேலும் 2 இலட்சத்திற்கும் மேற்பட்ட யூதர்களை அதிகபட்சமாக இஸ்ரேல் இங்கு குடியமர்த்தியது.  

ஆனால் அதே நேரம் 1948 -ல் பலஸ்தீன் துண்டாடப்பட்டபோது, இஸ்ரேலின் பாகமாக்கப்பட்ட மேற்கு ஜெருசலமிலிருந்து வெளியேற்றப்பட்ட 30,000 க்கும் அதிகமான பலஸ்தீனியர்களில் ஒருவரைக் கூட பிறந்த நாட்டில் நுழைவதற்கு கூட இஸ்ரேல் அனுமதிக்கவில்லை. அதற்கு மாறாக அங்கு இருந்த பலஸ்தீனியர்களின் வீடுகளும் சொத்துக்களும் யூதர்களுக்கு பங்கு வைத்து கொடுக்கும் சம்பவம் நடந்தேறியது. மேலும் அங்கு பலஸ்தீனியர்களின் எண்ணிக்கையை குறைப்பதற்காக அவர்களுடைய வீடுகள் தரைமட்டமாக்கப்படுவதும் சொத்துக்கள் சூறையாடப்படுவதுமான சம்பவங்கள் நடந்தேறின.

இக்குரூரமான சம்பவம் இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் இருந்த மேற்கு ஜெருசலமின் மேயர்களான டடி கொலக், யஹூத் ஒல்மர்ட் என்பவர்களின் இரண்டு உத்யோகஸ்தர்களும், “ஜெருசலம் போஸ்ட்” என்ற யூதப் பத்திரிக்கையின் ஒரு நிருபரும் சேர்ந்து தயாரித்த மேற்குறிப்பிட்ட “Separate and unequal” என்ற புத்தகத்தில் விரிவாக விவரிக்கப்பட்டுள்ளது.  

1967 -ல் இஸ்ரேல் ஆக்ரமித்த காஸா, கோலான் குன்றுகள் போன்ற அனைத்து இடங்களிலும் யூதர்களை குடியமர்த்த வேண்டும் என்பது தான் தீவிர சியோனிஸ இஸ்ரேலியர்களின் நோக்கமாக இருந்தது என்று ஹோவார்ட் சச்சார் கூறுகிறார் (A History of Israel-Howard Sachar: Knopf:New York 1979 P. 709). இவர் ஒரு தீவிர இஸ்ரேலிய ஆதரவு வரலாற்று எழுத்தாளர் என்பதனை நினைவில் கொள்ள வேண்டும்.

அதாவது யூதர்களில் தீவிர சிந்தனையுடையவர்களின் நோக்கங்களை சியோனிஸ இஸ்ரேல் அரசு நடைமுறைப்படுத்தியது என்று இந்த குடியமர்த்தலுக்கு அர்த்தம் கொள்ளலாம்.   ஆனாலும் அமெரிக்க முக்கிய பத்திரிக்கைகள், தொலைக்காட்சி அலைவரிசைகள் யூத தீவிரவாதத்தை இன்று வரை ஒருமுறை கூட விமர்சித்தோ கண்டித்தோ செய்திகளை கொடுத்ததில்லை. உலகில் இஸ்ரேலின் செய்திகளை கொடுக்கும் மற்ற நாட்டு ஊடகங்கள், இந்த மேற்கத்திய முஸ்லிம் விரோத ஒருதலைபட்ச ஊடகங்களில் வரும் செய்திகளை கண்ணை மூடிக்கொண்டு பிரசுரிக்கும் பொழுது, எப்படி இந்த யூத பயங்கரவாதத்தின் கோர முகம் உலகுக்குத் தெரிய வரும்?  

சர்வதேச போர் விதிமுறைகளை மீறி ஆக்ரமிக்கப்பட்ட பகுதிகளில் தனது நாட்டு மக்களை குடியமர்த்துவது மட்டுமின்றி ஆக்ரமிக்கப்பட்ட பகுதியிலிருந்து வெளியேறாத அந்நாட்டு மக்களை பல்வேறு விதங்களில் அவர்களின் நாட்டை விட்டு வெளியேற்றும் குரூர செயலையும் இஸ்ரேல் செய்து வருகிறது. பயமுறுத்தல், சொத்துக்களை அழித்தல், தொடர்ந்து பிரச்சனைகளை கொடுத்துக் கொண்டிருத்தல் போன்ற மன அழுத்தங்களை கொடுப்பது மட்டுமின்றி அவைகளுக்கெல்லாம் அசைந்து கொடுக்காதவர்களை அரசு இயந்திரத்தை பயன்படுத்தியே இடத்தை காலியாக்க வைக்கின்றனர்.  

இவ்வாறு 1998 -ல் ஜெரூசலமில் 788 பலஸ்தீனியர்களின் குடியிருப்பு உரிமையை இஸ்ரேல் இரத்து செய்தது. அவர்கள் நகரத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர். மந்திரிசபை அலுவலகத்தில் இரகசியமாக பத்திரப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டிருந்த இந்த விவரங்கள் இஸ்ரேலின் முக்கிய பத்திரிக்கையான “அல்ஹாரெட்ஸ்” வெளிப்படுத்தியது (Al Haaretz, 2 March 1999).  

இவ்வளவு தெளிவாக அரபு ராஜ்யங்களின் மீது ஆக்ரமிப்பு நடத்தி இடங்களைத் தன் கைவசப்படுத்தும் இஸ்ரேலின் அட்டூழியங்களை நியாயப்படுத்தவும் அதனை ஓர் பெரிய விஷயமாக மற்றவர்கள் கவனிக்காதிருக்கவும் ஓர் வஞ்சகமான முறையை சியோனிஸ அனுதாபிகள் கை கொள்கின்றனர். அரபு ராஜ்யங்களுக்கும் மற்றவரின் பூமியை ஆக்ரமிக்கும் சுபாவம் உண்டு என்று எழுதி உருவாக்குவது தான் இதற்கான ஒரே வழி.

ஆனால் யதார்த்தத்தில் அவ்வாறு ஒன்றும் நடக்காததால் பச்சைப் பொய் கூறுவதற்கும் அவர்கள் வெட்கப்படவில்லை.   உதாரணத்திற்கு அமெரிக்காவின் பிரபல தொலைக்காட்சியான MSNBC யில் வெளியான ஓர் செய்தியை காணலாம். 1967 -ல் இஸ்ரேல் ஆக்ரமித்த கோலான் குன்றுகள் தொடர்பாக சிரியாவை குறித்து MSNBC சானலில் பிரிஸ்டன் மெண்டன்ஹாலின் முக்கிய தகவல் அறிக்கை ஒன்று வந்தது. இதில் இஸ்ரேலிற்கும் சிரியாவிற்கும் இடையிலுள்ள பிரச்சனைகள் பரிசோதிக்கப்பட்டன. நல்ல விஷய ஞானமும், சிறந்த நடுநிலைவாதியுமாக பலரால் அறியப்படும் மெண்டன்ஹாலின் தகவல் அறிக்கையில் கூட மேலே குறிப்பிட்ட அநியாயம் காணப்பட்டது.

அதில் ஒரு விபரம்(Timeline) இவ்வாறு இருந்தது.   “1944 -ல் கோலான் குன்றுகள் சிரியாவின்(Republic of Syria)பாகமானது. பிரஞ்ச் ஆட்சி முடிவுக்கு வந்ததோடு அங்குள்ள யூதர்களின் நில உரிமையும் இல்லாமல் ஆனது. சுன்னி முஸ்லிம்கள், ஸிர்க்காசியன்கள், துருசுகள், கிறிஸ்தவர்கள் தொடங்கி மற்ற சில வகையினர் அதை தங்களின் வசிப்பிடம் ஆக்கினர்”.  

இதில் முதல் வரி வரலாற்று மோசடியாகும். இரண்டாமாவதோ அதைவிட சுத்த பைத்தியக்காரத்தனமானதாகும். சிரியாவின் வரலாற்றை அறியாத ஒருவர் இவ்வரிகளைப் படித்தால் என்ன நினைப்பார்? 1944 -க்கு முன்னரே சுதந்திர நாடாக இருக்கும் சிரியாவுடன் கோலான் குன்றுகள் பின்னர் சேர்க்கப்பட்டது என்றல்லவா எண்ணுவார்? ஆனால் உண்மை என்ன?

1923 -ல் சிரியாவின் எல்லைகளை நிர்ணயித்த பிரித்தானிய மற்றும் பிரெஞ்சுகாரர்கள் கோலான் குன்றுகளை சிரியாவின் பாகமாக அடையாளப்படுத்தியுள்ளனர். அதாவது 1923 முதலே கோலான் குன்றுகள் சிரியாவின் பாகமாக இருந்தது. இந்த எல்லை நிர்ணயத்திற்கு எத்தனையோ காலங்களுக்கு முன்பிருந்தே அங்கு அரபிகள் வசித்து வந்துள்ளனர். அவர்களின் கலாச்சாரம், வியாபாரத்தொடர்புகள் அனைத்தும் பிற அரபு பிரதேசங்களினூடாக இருந்து வந்தது. முதல் உலகப்போருக்குப்பின்(1914) சிரியா பிரெஞ்சுகாரர்களின் ஆக்ரமிப்பில் ஆனது.

பின்னர் 1944 -ல் சிரியா சுதந்திரம் அடைவது வரை பிரஞ்சு ஆக்ரமிப்பின் கீழ் இருந்தது. 1923 -லேயே சிரியாவின் பாகமாக உள்ள கோலான் குன்றுகள் 1944 -ல் சிரியா சுதந்திரம் அடையும் பொழுது புதிதாக எங்கிருந்து வந்தது? இந்தியாவின் ஒரு பாகமாக இருக்கும் தமிழ்நாடு 1947 -ல் இந்தியாவின் பாகமானது எனக்கூறினால் எப்படியிருக்கும்?   சிரியாவில் 1944 -ல் பிரெஞ்சுகாரர்களின் ஆட்சி முடிவுக்கு வந்ததற்கும், யூதர்களின் உடைமைக்கும் இடையில் யாதொரு தொடர்பும் இல்லை என்பது மற்றொரு உண்மை. சிரியாவில் பண்டைய காலம் தொட்டே அரபி பேசும் ஒரு யூத சமூகம் வாழ்ந்து வருகிறது.

பலஸ்தீனை ஆக்ரமித்து இஸ்ரேல் உருவாக்கப்பட்டபோது, இதில் ஒருபகுதி யூதர்கள் சியோனிஸ்டுகளின் நிர்பந்தங்களாலும் அவர்களின் மீதுள்ள பயத்தினாலும் இஸ்ரேலில் குடியேறினர். மீதியுள்ளவர்கள் இன்றும் டமாஸ்கஸில் வசிக்கின்றனர் – மற்றைய அனைத்து சிரியக்காரர்களைப் போல் தங்களின் சொத்துக்களுக்கு உடைமைகளாகவே.

கோலான்குன்றுகளில் அரபிகள் வந்து சேர்ந்தது பிரிஸ்டன் மெண்டல்ஹால் குறிப்பிட்டது போல் 1944 -ல் அல்ல. பெரும்பாலானவர்களும் அதற்கும் எத்தனையோ தலைமுறைகளுக்கு முன்பே அவ்விடத்தை தங்களின் நிரந்தர வசிப்பிடமாக்கி இருந்தனர்.

— அபூசுமையா