தவறு நடந்திருந்தால் மன்னித்து ஆள்வதற்கு ஒரு வாய்ப்பு தாருங்கள்: முஸ்லிம்களுக்கு பா.ஜ.க. வேண்டுகோள்!

தவறு நடந்திருந்தால் மன்னித்து ஆள்வதற்கு ஒரு வாய்ப்பு தாருங்கள்: முஸ்லிம்களுக்கு பா.ஜ.க. வேண்டுகோள்!

புதுடெல்லி, பிப்.26-

பாராளுமன்றத் தேர்தலையொட்டி, நரேந்திரமோடி தலைமையில் ஆட்சி அமைக்க 272-க்கும் அதிகமான இடங்களைக் கைப்பற்ற குறிவைத்து பாரதிய ஜனதா பிரசாரம் செய்து வருகிறது. இதில் முஸ்லிம் மக்களின் பங்கு தொடர்பாக டெல்லியில் பாரதிய ஜனதா சார்பில் நேற்று ஒரு நிகழ்ச்சி நடந்தது. இதில் கட்சித்தலைவர் ராஜ்நாத்சிங் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

“பாரதீய ஜனதா, முஸ்லிம்களுக்கு விரோதமான கட்சி அல்ல. எங்கள் கட்சிக்கு எதிரான பிரசாரத்தை நம்பிப் போகாதீர்கள். இந்த முறை நாட்டு நலனைக் கருத்தில் கொண்டு எங்களுக்கு ஓட்டு போடுங்கள்.

ஒருமுறை எங்களுக்கு வாய்ப்பு தாருங்கள். உங்கள் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப நாங்கள் நடந்துகொள்ளவில்லை என்றால் இனி ஒருபோதும் வாய்ப்பு அளிக்க வேண்டாம்.

எப்போதாவது, எங்காவது, தவறு ஏதாவது நடந்திருந்தால், எங்கள் தரப்பில் ஏதேனும் குறை இருந்திருந்தால், தயவு செய்து குறித்து வைத்துக் கொள்ளுங்கள். நாங்கள் அதற்காகக் கைகளைக் கட்டி நின்றவாறு மன்னிப்பு கேட்போம். தயவு செய்து ஒரு அரசாங்கத்தை தேர்ந்தெடுப்பதற்காக நீங்கள் வாக்களிக்க வேண்டாம். சகோதரத்துவமும், மனிதநேயமும் மிக்க ஒரு வலுவான தேசத்தை உருவாக்க வாக்களியுங்கள்.

மோடியின் நற்பெயரையும், பாரதிய ஜனதா கட்சியின் நற்பெயரையும் கெடுப்பதற்காக காங்கிரஸ் ஓட்டு வங்கி அரசியல் நடத்துகிறது. இதைப் புரிந்து கொள்ளுங்கள். முஸ்லிம்கள், பாரதிய ஜனதா கட்சிக்கு அப்பால் சென்று விட வேண்டும் என்பதுதான் அவர்களின் விருப்பம்.

(குஜராத் இனக்கலவரத்தில்) மோடி குற்றமற்றவர் என்று கோர்ட்டு கூறி விட்டது. அவரைப் பற்றி இன்னும் என்ன இருக்கிறது?

எத்தனையோ முறை காங்கிரசின் ஆட்சியைப் பார்த்து விட்டீர்கள். நாங்கள் ஆள்வதற்கு ஒரு முறை வாய்ப்பு கொடுங்கள்.

மதத்தின் அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க இந்திய அரசியல் சட்டம் வகை செய்யவில்லை. ஏழையாக இருப்பவர், முஸ்லிமாக இருந்தாலும், கிறிஸ்தவராக இருந்தாலும் இடஒதுக்கீடு வழங்க வேண்டும்.

இவ்வாறு ராஜ்நாத்சிங் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் கட்சியின் மூத்த தலைவரும், மேல்-சபை எதிர்க்கட்சி தலைவருமான அருண் ஜெட்லியும் பேசினார். அவர் தனது பேச்சில், மதக்கலவரங்கள் இல்லாத இந்தியாவை, பாதுகாப்பு, சமத்துவம், பொருளாதார வளர்ச்சி கொண்ட இந்தியாவை உருவாக்க சிறுபான்மை சமூகத்தினர் பாரதிய ஜனதாவை ஆதரிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

நன்றி: மாலை மலர் (26-02-2014)