தொடர்ந்து நொறுங்கும் மோடியின் பிம்பம் (வீடியோ)

இயக்குனர் ராகேஷ் ஷர்மா!

யார் இவர் என்று நினைவுள்ளதா?

கடந்த 2002 ம் ஆண்டு, குஜராத்தில் ஹிந்துத்துவவாதிகளால் திட்டமிட்டு நடத்தப்பட்ட இனப் படுகொலை தொடர்பான உண்மைகளை உரித்து காயப் போட்ட, Final Solution என்ற ஆவணப்படத்தை இயக்கினாரே அவர் தான். (காண்க: அதிர வைத்த ஒரு ஆவணப்படம்) Final Solution இல் இடம்பெறாத, இரண்டரை மணிநேரம் ஓடக்கூடிய ஒரு டஜன் வீடியோ கிளிப்புகளை தற்போது அவர் ஆன்லைனில் வெளியிட்டுள்ளார்.

இந்த வீடியோக்கள் அனைத்தும், பாரதீய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளரான நரேந்திர மோடியை கடுமையாகச் சாடுகின்றன. 2002 ஆம் ஆண்டு மோடி தலைமையிலான பாஜக அரசு முன்னின்று நடத்திய இனப் படுகொலைகள், மோடி தனது யாத்திரை (Gaurav Yatra) யின் போது நிகழ்த்திய மதவெறி தூண்டும் உரைகள், மாநிலத் தேர்தல் பிரச்சாரத்தின்போது நிகழ்த்திய பேச்சுக்கள் ஆகியவை இந்த வீடியோக்களில் அடங்கியுள்ளன.

இயக்குனர் ராகேஷ் சர்மா வெளியிட்டுள்ள வீடியோ க்ளிப்-களையும் குறும்படத்தின் சில பகுதிகளையும் கீழே காணலாம்.

{youtube}1IZ7kULoeOU|640|480|1{/youtube}

இந்த வீடியோ க்ளிப்-களைத் தற்போது வெளியிட்டதற்கான காரணத்தையும், தனது புதிய படம் மற்றும் நரேந்திர மோடி தலைமையிலான குஜராத்தைப் பற்றியும் Scroll.in இணையதளத்துக்கு அளித்துள்ள பேட்டியில் விவரித்துள்ளார் இயக்குனர் ராகேஷ் ஷர்மா.

பொது தேர்தல் நெருங்குகிறது என்பதற்காக நீங்கள் இப்போது இந்த வீடியோக்களை வெளியிட்டுள்ளீர்களா?

ஒரு வகையில் சொல்ல வேண்டும் என்றால், ஆம். உண்மையில் மோடியின் மதவெறிப் பேச்சுக்கள் அனைத்தும் இணையத்திலிருந்து முற்றிலும் நீக்கப்பட்டு விட்டன. உண்மைகளை மூடிமறைத்து, இல்லாத அவரது பிம்பத்தை வலுவாக்கும் மோசடி வேலைகள் தீவிரமாக நடைபெற்றுள்ளன. மோடி தமது கெளரவ யாத்திரையின் போது தாம் நிகழ்த்திய படுகொலைகளை நியாயப்படுத்தி அளித்த ஒப்புதல் வாக்குமூலங்களை – நான் 2002 லேயே ஆவணப்படுத்தி இருந்தேன். அவை இணையத்தில் இருந்து இருட்டடிப்பு செய்யப்பட்டு விட்டதால் அவற்றை இந்நேரத்தில் பொது மக்கள் பார்வைக்குக் கொண்டு வருவது முக்கியம் எனக் கருதினேன்.

கடந்த சில மாதங்களாக, மோடி தமது பேச்சின் தொனியினைக் கீழிறக்கியுள்ளதாகத் தெரிகிறது. இது பிற கட்சிகளின் ஆதரவைப் பெறுவதற்கா அல்லது ஓர் உண்மையான மாற்றம் வேண்டும் என்பதற்கான குறிப்பா?

அவரது அடிப்படை நம்பிக்கைகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளது என்று நான் நம்பவில்லை. ‘குஜராத்தின் கசாப்புக்காரன்’ என்ற அவரது பிம்பத்தை ‘அபிவிருத்தி மேசியா’ என்று மாற்றுவதற்கான ஒரு கண்துடைப்பு வேண்டும். இந்தப் பிம்ப மாற்றத்திற்கு நிறைய பணம் செலவு செய்யப் பட்டுள்ளது.

ஏதோ குஜராத் ஒரு சிறந்த மாநிலம் போன்றும், முழு இந்தியாவும் அதனைப் பின்பற்றியாக வேண்டும் என்பது போலவும் மாயை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. எப்படியிருப்பினும் குஜராத்தில் நடந்த இனப் படுகொலைகளுக்காக இதுவரை மோடி வருத்தம் தெரிவிக்கவே இல்லை. அவருடைய அமைச்சர்கள் இன்னும் தீவிரக் கண்காணிப்பில் உள்ளனர். இது பற்றி எல்லாம் அவருக்கு எந்த ஒரு உறுத்தலும் இல்லை. ஒருவேளை மோடி இந்தியப் பிரதமர் ஆகிவிட்டால், நாம் குஜராத்தில் பார்த்த அதே அடிப்படைவாதக் கொள்கைகள் இந்தியாவின் பிற மாநிலங்களிலும் அரங்கேற்றப்படும். முசாஃபர்நகர் கூட அப்படிப்பட்ட ஓர் அரசியல் – தேர்தல் இலாபங்களுக்கான டிரையல் தான். மோடியின் போலியான பிம்பங்கள் பற்றி அவரது பிரச்சார இயந்திரங்கள் வேலை செய்யும் போதே, இந்திய மக்களின் நினைவுகளைப் புதுப்பித்து குஜராத்தின் அடிப்படை உண்மைகளைப் பற்றி நான் பேச விரும்புகிறேன்.

இதற்குரிய அடிப்படை உண்மைகள் என்னென்ன?

நான் 2002 ஆம் ஆண்டு முதல் குஜராத்தை ஆவணப்படுத்தி படம் பிடித்து வருகிறேன். குஜராத்திற்குச் சென்றால், இன்றும்கூட பிளவுக் கோடுகள் ஆழமாக இருப்பதை நீங்கள் உணர முடியும். உதாரணமாக, அஹமதாபாத்தில் உள்ள நரோடா பாட்டியா மற்றும் குல்பர்க் சொசைட்டி போன்ற இடங்கள் கலவரப்பகுதிகள் என்று அறிவிக்கப்பட்டு, அதிகாரப்பூர்வமான பட்டியலில் இருக்கின்றன. எங்கும் அமைதி, எல்லாம் சரியாக உள்ளது என்றால், அவை ஏன் கலவரப் பகுதிகளின் பட்டியலில் இருக்க வேண்டும்?

பாரதீய ஜனதா கட்சியும் அதன் உதிரிகளும் இணைந்து இதை வெற்றிகரமாகக் கையாண்டிருக்கின்றனர்... ஃபேஸ்புக் மூலம் தேர்தல்கள் நடத்தலாம் என்ற நிலை இருந்தால், மோடிதான் எதிர்ப்பற்ற பிரதமர் – இயக்குனர் ராகேஷ் ஷர்மா

குஜராத் அரசு நிவாரணம் மற்றும் மறுவாழ்வு மூலம் என்ன செய்தது? மிகச் சொற்பம். இனப் படுகொலைகளில் பாதிக்கப்பட்டவர்கள், இருமுறை மும்முறை என்று பாதிக்கப்பட்டுள்ளனர். முதலில் அவர்கள் படுகொலைகள் நடக்கும்போது எல்லாவற்றையும் இழந்தனர். பின்னர் அவர்கள் இடம்பெயர்ந்த போது. அதற்கடுத்து தற்போது இன்னும் படு மோசமான நிலையில் வாழ்ந்து வருகின்றனர். உதாரணமாக, அகமதாபாத் குடியுரிமை நகர் மிகப்பெரிய குப்பைமேட்டினை ஒட்டியுள்ளது எத்தனை பேருக்குத் தெரியும்? பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் சொந்த இடங்களுக்குத் திரும்பிச் சென்று தங்களது வாழ்க்கையைச் சாதாரண வழியில் தொடர முடியாத அளவிற்கு வேரோடு பிடுங்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு அரசு ஆதரவு என்பது அறவே இல்லை. ஆகவே அடிப்படையில் மாற்றம் ஏற்பட்டதற்கான எந்த ஆதாரமும் இல்லை.

பிரச்சாரம் வேலை செய்கிறதா?

ஆம். பிரச்சாரம் சிறப்பாக வேலை செய்து கொண்டேயிருக்கிறது. அதற்காகத்தான் பணம் அதற்குள் கொட்டப்படுகிறது, அச்சு, தொலைக்காட்சி போன்ற வழக்கமான ஊடகங்களைப் பற்றி மட்டும் நான் பேசவில்லை, எளிதாக ஊடுருவி கையாளக்கூடிய சமூக வலைத் தளங்களையும் சேர்த்துத் தான் கூறுகிறேன். பாரதீய ஜனதா கட்சியும் அதன் உதிரிகளும் இணைந்து இதை வெற்றிகரமாகக் கையாண்டிருக்கின்றனர். ஃபேஸ்புக் மூலம் தேர்தல்கள் நடத்தலாம் என்ற நிலை இருந்தால், மோடிதான் எதிர்ப்பற்ற பிரதமர்.

எந்த மதவெறியை ஊட்டி மோடி தனது பிம்பத்தை முதன் முதலில் உருவாக்கினாரோ அந்த உரைகள் அனைத்தும் ஆன்லைனிலிருந்து நீக்கப்பட்டுள்ளன. மோடி முந்தையத் தேர்தல்களில் பிரச்சாரங்களின் போது பேசிய பேச்சுக்கள் எவையும் தற்போது ஆன்லைனில் கிடைக்கவில்லை.

முற்போக்கு நாயகன் என்பது இப்போது மோடியைப் பற்றிய புனைந்துரை. நடுத்தர வர்க்கத்தின் ஒரு குறிப்பிட்ட பகுதியினர் அதை நம்பியும் விட்டனர்! ஆனால் அவர்கள் ஒரு சிறிய பிரிவினர் மட்டுமே. குஜராத்தில் நடுத்தர வர்க்கத்தின் பெரும் பகுதியினரிடத்தில் மோடிக்கு இன்னும் வலுவான எதிர்ப்பு உள்ளது. இப்பொழுது செல்வாக்கு இழந்த சிறந்த கருத்து கணிப்புக்கள் கூட 9000 மாதிரி எடுத்துள்ளதில் ஒரு தொகுதிக்கு 20க்கும் குறைவான மக்களை மட்டுமே கணிப்புக்கு உட்கொண்டுள்ளது. அத்தகைய சிறிய மக்கள்குழுவின் அடிப்படையில் ஊதப்பட்டுள்ள வெளிக்கணிப்புகள் கடுமையான கேள்விகளுக்கு உட்பட்டவை. இதே போன்று கடந்த 2002 மற்றும் 2009ல் கூட பாஜகவிற்கு ஆதரவாக இத்தகைய மிகையான மதிப்பீடுகள் இடம்பெற்றது குறிப்பிடத் தக்கது.

குஜராத்திலேயே மோடியின் மீதுள்ள இந்த எதிர்ப்பின் அடிப்படை காரணம் என்ன?

பொதுமக்களின் அன்றாட வாழ்வில் கடந்த 10 ஆண்டுகளில் சிறப்பான மாற்றம் ஏதும் ஏற்படவில்லை. உண்மையில் குஜராத் மாநிலத்தின் தனிநபர் கடன் ரூ 26,000 ஆகும். சனந்த் நகரில் டாடா குழுமத்தின் நானோ திட்டத்தை எடுத்துக் கொள்ளுங்கள். டாடா மோட்டார்ஸ் 2008 ல் மேற்கு வங்கத்தில் இருந்து குஜராத்திற்குள் ஆலையை நகர்த்தியபோது அதற்குப் பல சலுகைகள் அளிக்கப்பட்டன.

மோடியின் பிம்பத்தை வடிவமைக்க, குஜராத் மாநில நிதியும் பயன்படுத்தப்படும்படி முழு கொள்கையும் வளைக்கப்பட்டுள்ளது. அந்தச் செலவீனங்கள் மாநிலத்தின் வளர்ச்சியைப் பற்றி அல்ல. மோடி பிம்பத்தின் வளர்ச்சியைப் பற்றி…

அது மட்டுமன்றி உள்ளூர் தொழிலாளர்களை மட்டுமே வேலைக்கு அமர்த்த வேண்டும் என்ற நிபந்தனையும் தளர்த்தப்பட்டது. “மோடியின் பிரச்சாரத்தில்” நானோ திட்டம் வென்றிருந்த போதிலும் 2009 பொது தேர்தலில் சனந்த் நகர் தொகுதியில் பிஜேபி தோல்வியடைந்தது.

எதனால் அந்தத் திட்டம் அவ்வளவு முக்கியம்? ஏனெனில் நானோ திட்டம், ரத்தன் டாடா ஒப்புதல் அடிப்படையில் மோடியின் பிம்பம் தயாராகத் தொடங்கும் என்பதால்.

தகவல் அறியும் உரிமைச்சட்டம், நேர்முகப் பேட்டிகள் மூலமாக சில மாவட்டங்களில் நான் நிலைமையைப் பின் தொடர்கிறேன். சோராஸ்டிரா மற்றும் பிற பகுதிகளில் விவசாயிகள் தங்களது கடன்களைத் திருப்பிச் செலுத்த முடியாமல் தற்கொலை புரிவது எனக்குத் தெரியும்.

மோடியின் பிம்பத்தை வடிவமைக்க, குஜராத் மாநில நிதியும் பயன்படுத்தப்படும்படி முழு கொள்கையும் வளைக்கப்பட்டுள்ளது. அந்தச் செலவீனங்கள் மாநிலத்தின் வளர்ச்சியைப் பற்றி அல்ல. மோடி பிம்பத்தின் வளர்ச்சியைப் பற்றி.

முக்கியமான பொருளாதார வல்லுநர்களான ஜகதீஷ் பகவதி மற்றும் அரவிந்த் பணகரியா போன்றோர் மோடியின் ஆட்சியில் குஜராத் சிறப்பாக வளர்ந்திருக்கிறது என்கின்றனரே?

புள்ளிவிபரங்கள் சூழ்நிலைக்கு ஏற்ப மாற்றி அமைக்கத் தக்கது. மேலும், நாம் அவர்கள் காணும் மேக்ரோ குறிகாட்டிகளிலிருந்து விலகி தரை மட்டத்தில் மக்களின் நிலையையும் அவர்களது வாழ்க்கை மாறிவிட்டதா என்பதையும் பார்க்க வேண்டும். ஆம். நெடுஞ்சாலைகள் உள்கட்டமைப்பு அபிவிருத்தி அடைந்துள்ளன. ஆனால் அது குஜராத்தில் எப்பொழுதிலிருந்தோ உள்ளவை. உதாரணமாக, குஜராத்திலிருந்து மும்பைக்கு நெடுஞ்சாலைகள் அமைக்க வேண்டும் என்பது மாநில வணிக பண்பாட்டின் அடிப்படையில் அரசு கொள்கைகளின் ஒரு பகுதியாக இருந்தே வந்தது.

ஆனால் மோடி மூன்று முறை தொடர்ந்து முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளாரே?

கடந்த 20 ஆண்டுகளாக, எந்த உண்மையான எதிர்க்கட்சியும் இல்லை. குஜராத் ஒரு கட்சி மாநிலமாக மாறிவிட்டது. பால் மற்றும் விவசாயிகளின் கூட்டுறவுகளைக் காங்கிரஸிடமிருந்து வெளிப்பட்ட சிறு எதிர்ப்பைத் தாண்டி பிஜேபி கைப்பற்றிவிட்டது. அதிலுள்ள காந்திய ஆர்வலர்களும் எதிர்க்கவில்லை.

ஒரு நம்பகமான எதிர்ப்பும் தரை மட்டத்தில் பிரச்சினைகளை எதிர்ப்பதும் நிகழ்ந்தால் விஷயங்கள் மாறும் என்பதில் எனக்குச் சந்தேகமில்லை.

உங்கள் புதிய படம் பற்றி இன்னும் சொல்லுங்களேன்?

குஜராத்தைப் பற்றிய துடிப்பானதொரு விமர்சனமே என் புதிய படம். அது, 2002 படுகொலைகளின் பின் குஜராத்தின் மீதான அரசியல் மற்றும் சமூகம் ஏற்படுத்திய தாக்கத்தினைப் பிரதிபலிக்கும். கடந்த எட்டு ஆண்டுகளாக அங்குள்ள நிலைமைகளைத் தொடர்ச்சியாக ஆவணப்படுத்தியுள்ளேன். நான் 2002ல் படமாக்கிய ஒவ்வொருவரிடமும் சென்றேன். தற்போதைய ஆன்லைன் கிளிப்புகளில்கூட, தேர்தல் காரணங்களுக்கு இழிந்த முறையில் பயன்படுத்தப்பட்ட பல கரசேவை குடும்பங்களின் இரண்டு க்ளிப்புகள் உள்ளன. [ கோத்ரா ரயில் தீயில் ] நிகழ்ந்தவை மோடியின் கெளரவ யாத்திரையில் தொடர்ந்து தூண்டப்பட்டுள்ளன. அதுதான் அவரைப் பற்றி முதலில் பேசப்படுகிறது.

ஒரு அரை டஜன் குடும்பங்களைச் சந்தித்து வீடியோ படமாக்கியுள்ளேன். அவர்கள் தங்கள் பெயரில் நிகழ்த்தப்படுவதைப் பற்றி கடுமையான கண்டனத்தை வெளிப்படையாகத் தெரிவிக்கின்றனர். அவர்களுள் பலர் பி.ஜே.பியின் மீது மிகவும் கடுமையான விமர்சனம் கொண்டுள்ளனர். சிலர் தாங்கள் எப்போதுமே பா.ஜ.க விற்கு வாக்களிக்க மாட்டோம் என்கின்றனர்.

நீங்கள் உங்கள் படங்களுக்கான நிதியை எப்படி சமாளிக்கிறீர்கள்?

படத் தயாரிப்பிற்கு என்று எவரிடமும் நான் எந்த நிதியும் பெறவில்லை என்பது தான் உண்மை. என்றாலும்கூட நான் மில்லியன் கணக்கில் பணம் பெற்றதாக என் மீது வசையும் குற்றச்சாட்டும் ஆன்லைனில் பரப்பப்பட்டன. ஒருவரிடம் இருந்து பணத்தைப் பெறும்போது படத்தின் மீதான நம்பகத்தன்மை பாதிக்கப்படும் வாய்ப்பு இருக்கிறது. அத்துடன், என் படங்களை விநியோகிப்பதில் எனக்கு முழு கட்டுப்பாடும் வேண்டும் என்பதாலும் நான் யாரிடமும் நிதி பெற விரும்பவில்லை.

எந்த ஒரு தொலைக்காட்சி சேனலும் Final Solution படத்தை வெளியிட விரும்பவில்லை. படத்தின் கரு அவர்களுக்குக் கடினமாக இருந்தது. ஆனால் ஏற்கனவே நான் இந்தியாவுக்கு வெளியே நிறைய பணம் சம்பாதித்திருக்கிறேன். அதை இந்தியாவில் படம் தயாரிக்க, மானியமாக பயன்படுத்தி, சில பார்வையாளர்களுக்கு ரூ.20 ரூ.50 என்று விற்றேன். நான் பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக எப்போதும் படம் எடுத்தது இல்லை.

மேற்கண்ட அவருடைய பேட்டியின் ஆங்கில வடிவத்தைக் கீழ்கண்ட சுட்டியில் வாசிக்கலாம்.

http://www.scroll.in/article/658119/Film-maker-releases-a-dozen-clips-of-controversial-Modi-speeches-made-just-after-Gujarat-riots

குஜராத்தின் உண்மை நிலை இவ்வாறு இருக்க, வளர்ச்சியின் நாயகன் என கார்ப்பரேட் பெரு பண முதலைகளால் இயக்கப்படும், பணத்துக்காக என்ன வேண்டுமானாலும் செய்யத் தயங்காத நேர்மையற்ற சில ஊடகங்களின் மூலம் ஹிந்துத்துவம் முன் நிறுத்தும் மோடி, “எந்த மாதிரியினை” இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் கொண்டு வர விரும்புகிறார் என்பதும் எதற்காக ஹிந்துத்துவம் அவரை முன் நிறுத்தி, இந்திய அரசியல் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு நேரடி அரசியலில் ஆர்.எஸ்.எஸ் இறங்கியுள்ளது என்பதும் ராகேஷ் ஷர்மாவின் பேட்டியிலிருந்து நிதர்சனமாக புரிந்து கொள்ள முடிகிறது!

ஆம்! கோல்வார்க்கர் மற்றும் சாவர்க்கரின் திட்ட முன்மொழிதல்படி முதலில் “முஸ்லிம், கிறிஸ்தவர், கம்யூனிஸ்ட் ஆகியோரை ஒழிப்பது; அல்லது அவர்களை அச்சப்படுத்தி இந்து மயப்படுத்துவது” என்பதை நேரடியாக குஜராத் மாதிரியில் நாடு முழுவதும் செயல்படுத்துவதற்கான ஹிந்துத்துவ நாயகனாக மோடி ஆர்.எஸ்.எஸ்ஸுக்குத் தெரிகிறார் என்பதே உண்மை! அதற்கு அரசு இயந்திரத்தை எப்படி பயன்படுத்துவது என்பதைச் சோதனைச் சாலையாக குஜராத்தில் நடத்திக் காண்பித்துவிட்ட மோடி, உண்மையில் “ஹிந்துத்துவ வளர்ச்சியின் நாயகன்”தான் என்பதில் என்ன சந்தேகம்தான் இருக்க முடியும்?!

“வளர்ச்சி நாயகன் மோடி”யின் பின்னணியிலுள்ள ஆர்.எஸ்.எஸ் தலைமையிலான சங்பரிவாரத்தின் உண்மையான நோக்கத்தினை மக்கள் தெளிவாக புரிந்து கொள்வதிலேயே இந்தியாவின் எதிர்காலம் உள்ளது!

– சத்தியமார்க்கம்.காம்