கடந்த 16.10.2008இல் ஜாமிஆ நகரிலுள்ள ஷாஹின்பாஹிலிருந்து இளைஞர்களைக் கடத்திக் கொல்ல முயன்ற சம்பவம் குறித்து உத்தரபிரதேசக் காவல்துறை உடனடியாக அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என டெல்லி காவல்துறை உத்தரவிட்டுள்ளது.
சம்பவம் நடந்த இடம், டெல்லி காவல்துறையின் கட்டுப்பாட்டுப் பகுதியாகும். பொதுவாக, ஒரு காவல் நிலையத்தின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் ஒரு பகுதியில் வெளியிலிருந்து தேடுதல் வேட்டை நடத்துவோர், அப்பகுதிக் காவல் நிலையத்திற்குத் தகவல் தருவது வழக்கம். ஆனால், இப்பகுதியில் தாங்கள் தேடுதல் நடவடிக்கை எடுக்கப் போவதாக உத்தரபிரதேசக் காவல்துறையிடமிருந்து எவ்விதத் தகவலும் முன்கூட்டியே டெல்லி காவல்துறைக்குத் தெரிவிக்கப் படவில்லை என டெல்லி தென்மேற்குக் காவல்துறை இணை ஆணையர் அஜய் சௌத்ரி கூறியுள்ளார்.
கடந்த வியாழன் (16.10.2008) அன்று இரவு ஷாஹின்பாஹ் ஸரிதா விஹார் சாலையில், ஆமிர் என்ற முஸ்லிம் இளைஞரைக் காவல்துறையினர் கடத்திச் செல்ல முயன்றனர். நம்பர் பிளேட் இல்லாத ஹூண்டாய் வெர்ணா வாகனத்தில் வந்த நான்கு பேர், ஆமிரை வலுக்கட்டாயமாக வாகனத்தினுள் இழுத்துப் போட முயன்ற பொழுது, அவர் பயந்து போய் அலறியுள்ளார். இதனைக் கேட்டு அப்பகுதியில் கூடிய பொதுமக்கள், சம்பந்தப்பட்ட வாகனத்தில் நம்பர் பிளேட் இல்லாததைக் கண்டு சந்தேகம் கொண்டு, வாகனத்தில் இருந்தவர்களைச் சுற்றி வளைத்தனர். அப்பொழுது வாகனத்தில் இருந்தவர்களில் ஒருவர், டெல்லி எல்லைப்பகுதியான நோய்டா, செக்டர் 58 காவல் நிலையத்தில் உள்ள சப்-இன்ஸ்பெக்டர் அசோக்பால் என்பது தெரிய வந்தது.
கடந்த மாதம் 19ஆம் தேதி, இதே பகுதியில் டெல்லி காவல்துறை திட்டமிட்டு இரு முஸ்லிம் மாணவர்களைப் போலி என்கவுண்டர் மூலம் கொலை செய்த வடு இன்னும் மாறாத நிலையில், சுதாரித்துக் கொண்ட பொதுமக்கள் தப்பியோட முயன்றவர்களில் ஒருவரையும் அவ்வாகனத்தையும் சுற்றி வளைத்தனர். வாகனத்தினுள் சிம்கார்டுகள், கிரடிட் கார்டுகள், போலி அடையாள அட்டைகள் என சந்தேகத்திற்கிடமான பல பொருட்களும் கண்டெடுக்கப்பட்டன.
இதன் மூலம், “முஸ்லிம் இளைஞரைக் கடத்திச் சென்று, போலி என்கவுண்டர் மூலம் தீர்த்துக் கட்டி விட்டு, தீவிரவாதி பட்டம் சூட்டக் காவல்துறை முயன்றதாக” ஜாமிஆ நகர்வாசிகள் குற்றம் சுமத்தி, காவல்துறைக்கும் ஸ்பெஷல் செல்லிற்கும் எதிராகப் போராட்டத்தில் குதித்தனர்.
இச்சம்பவத்தில் தொடர்புடைய காவல்துறை அதிகாரிகளுக்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி, உத்தரபிரதேச முதலமைச்சர் மாயாவதிக்குப் புகார் அளித்திருப்பதாக ஜாமிஆ நகர் கோ-ஆர்டினேஷன் கமிட்டிச் செயலர் இர்ஃபானுல்லாகான் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார்.
தங்களது வீடுகளில் “கண்டவெனெல்லாம் நுழைந்து யாரை வேண்டுமானாலும் பிடித்துக் கொண்டு போகும் நிலையே ஜாமிஆ நகரில் உள்ளது” என்றும் காவல்துறை இப்பகுதியில் நடத்தும் இத்தகைய அக்கிரமங்களுக்கு எதிராக நீதி கிடைக்கும்வரை போராடுவோம் என்றும் முன்னாள் கவுன்சிலர் ஆஸிஃப் முஹம்மது கான் கூறினார்.
“ | முஸ்லிம் இளைஞர்களைக் கடத்திச் சென்று அவர்களைக் கொலை செய்து விட்டு, “போலீசாரோடு நடந்த துப்பாக்கிச் சண்டையில் தீவிரவாதி ஒருவன் கொல்லப் பட்டான்” என்று முத்திரை குத்துவதற்கான காவல்துறையின் முயற்சி இது! | ” |
– ஜாமிஆ நகர்வாசிகள் |
பொதுமக்களின் போராட்டத்தைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த டெல்லி காவல்துறையின் துணை ஆணையர் குருசரன் தாஸின் தலைமையில், கடத்தலுக்கு முயன்ற ஒருவரையும் கடத்தல் வாகனத்தையும் ஜாமிஆ நகர்க் காவல்துறையின் கஸ்டடியில் வைத்துள்ளனர்.
சம்பவம் குறித்து, சட்டப்படி முதல் தகவலறிக்கை FIR பதிவு செய்யப் படவேண்டும் என்பதில் ஜாமிஆ நகர் பொதுமக்கள் தீவிரமாக இருந்ததை அடுத்து, டெல்லி உயர்நீதிமன்ற வழக்கறிஞர் முஹம்மது ரஹ்மான், ‘ஸஹாரா’ உருது நாளிதழின் ஆசிரியர் அஸீஸ் பர்னீ ஆகியோர் முன்னிலையில், ஆமிர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் FIR பதிவு செய்யப் பட்டபோது அதிகாலை 1 மணி கடந்து விட்டிருந்தது. “நிச்சயம் இந்நிகழ்வைத் தகுந்த முறையில் விசாரிப்போம்” என்று டெல்லித் தென்மேற்குப் பகுதிக் காவல்துறை இணை ஆணையர் அஜய் செளத்ரி வாக்களித்திருக்கிறார்.
முதல் கட்ட விசாரணையில், டெல்லியின் எல்லைப் பகுதியான நோய்டா செக்டர் 58 லிருந்து, “ஒரு தங்கச் சங்கிலியை அறுத்துக் கொண்டு இரு சக்கர வாகனத்தில் தப்பிச் சென்ற இரு நபர்களைப் பின்தொடர்ந்தே ஜாமிஆ நகருக்குள் வந்ததாக” நோய்டா நகர எஸ்.பி காரணம் சொல்லி இருக்கிறார்.
அவர் கூறும் காரணம் உண்மையெனில், “காவல்துறை அதிகாரிகள் சீருடை இன்றி நம்பர் பிளேட் இல்லாத வாகனத்தில் சந்தேகத்துக்கு இடம் தரும் வகையில் வந்தது ஏன்?” என்ற கேள்விக்குப் பதில் இல்லை. மேலும், கடத்தலுக்கு உபயோகித்த கறுப்பு நிற ஹூண்டாயில் காணப்பட்ட, “பல சிம் கார்டுகளும் பல்வேறு பெயர்களையுடைய கிரடிட்/அடையாள அட்டைகளும் யாவை? அவற்றைக் காவல்துறை எதற்கு உபயோகிக்கப் போலியாக உருவாக்கிக் கொண்டு ஜாமிஆ நகருக்கு வந்தது?” போன்ற பல கேள்விகளுக்கும் பதில் இல்லை.
வாகனத்தில் இருந்த அடையாள அட்டைகள், பாரிஸைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கும் Steria என்ற ஒரு ஐ.டி கம்பெனியின் அடையாள அட்டைகளாகும். இவை ஹரீந்தர் சிங் என்ற பெயரில் போலியாகத் தயார் செய்யப் பட்டவையாகும்.
இவ்வட்டைகளில் ஒட்டியுள்ள மூன்று போட்டோக்களுக்கும் 1007015 மற்றும் 1007342 ஆகிய இரு எண்களுக்கும் Steria என்ற ஐ.டி கம்பெனியோடு எவ்விதத் தொடர்புமில்லை என்பது உறுதி செய்யப் பட்டுள்ளது. முஸ்லிம் இளைஞர்களைக் கடத்திச் சென்று அவர்களைக் கொலை செய்து விட்டு, “தீவிரவாதி ஹரீந்தர் சிங், காவல்துறையினரோடு துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டபோது கொல்லப் பட்டதாக”, அல்லது “சீக்கியப் போலிப் பெயரில் முஸ்லிம் தீவிரவாதி! போலீசுக்கு டிமிக்கிக் கொடுத்தவன்! போலீசாரோடு நடந்த துப்பாக்கிச் சண்டையில் கொல்லப் பட்டான்” என்று முத்திரை குத்துவதற்கான காவல்துறையின் முயற்சி இது என்று ஜாமிஆ நகர்வாசிகள் கூறுவதில் உண்மை புதைந்திருப்பதையே காவல்துறை நடத்திய இக்கடத்தல் முயற்சியும் போலி அடையாள அட்டைகளும் தெளிவாகச் சொல்கின்றன.
பலவித ஐயங்களை உருவாக்கியுள்ள தங்களது நிழலான நடவடிக்கைகளுக்கான உரிய விளக்கத்தை உத்தரபிரதேசக் கவல்துறை உடனடியாகச் சமர்ப்பிக்க வேண்டும் என டெல்லி காவல்துறை உத்தரவிட்டுள்ளது.