மும்பையில் பயங்கர குண்டுவெடிப்பு!

மும்பையில் பயங்கர குண்டுவெடிப்பு!

இந்திய வணிகத் தலைநகரான மும்பையில் நேற்று மாலை இந்திய நேரம் சுமார் 6:20 மணியளவில் 11 நிமிட இடைவெளிக்குள் அடுத்தடுத்து 7 இடங்களில் 8 குண்டுகள் வெடித்தன. இத்தாக்குதல்கள் மேற்கு ரயில்வேயின் புறநகர் ரயில்களைக் குறிவைத்து நடத்தப்பட்டன. இறுதியாகக் கிடைத்த தகவல்களின்படி சுமார் 190 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 600க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் மும்பை போலீசார் தெரிவிக்கின்றனர்.

1993 மார்ச் 12 ஆம் தேதி இது போன்ற வெடிகுண்டு தாக்குதல் மும்பை நகரின் மீது நடத்தப்பட்டது. 1992 டிசம்பர் 6 பாபரி மசூதி இடிப்புக்குப் பின் மும்பையில் நடந்த கலவரத்தைத் தொடர்ந்து 13 இடங்களில் குண்டுகள் வெடித்தன. இதில் பொதுமக்களில் 120க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இத்தாக்குதல் தொடர்பாக 130 குற்றவாளிகள் என சந்தேகிக்கப்பட்டோர் மீது வழக்குகள் தொடுக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகின்றன.

ஏற்கெனவே நடந்த குண்டு வெடிப்பு தொடர்பாக கடந்த 13 ஆண்டுகளாக விசாரணை நடைபெற்றுவரும் இச்சூழ்நிலையில் தற்போதைய அசம்பாவிதம் நடைபெற்றுள்ளது கவனிக்கத்தக்கது.

பொதுமக்கள் மீது தொடுக்கப்படும் குண்டுவெடிப்பு போன்ற கொடுமைகளுக்கு அதை செய்தவர்கள் மீது நடைபெறும் விசாரணை காலத்தாழ்வுகளும் இதுபோன்ற செயல்களை மென்மேலும் செய்வதற்கு சமூகவிரோத சக்திகளை ஊக்குவிக்கின்றன என்பதை மறுக்கவியலாது.

விரைவான விசாரிப்புகளும் குற்றம் நிரூபணமானபின் பொதுவில் நிறைவேற்றப்படும் கடும் தண்டனைகளுமே இம்மாதிரி கொடுஞ்செயல் செய்வோரைத் தடுத்து நிறுத்தும்.

இக்கொடூர தாக்குதலில் தம் குடும்பத்தில் ஒருவரையோ இருவரையோ பலரையோ இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எம் ஆழ்ந்த அனுதாபங்கள். இந்த பேரிழப்பைத் தாங்கிக் கொள்ளும் சக்தியை அக்குடும்பத்தினருக்கு வழங்குமாறு இறைவனை இறைஞ்சுகிறோம்.

அப்பாவி மக்களின் மீது இந்தக் கொடுமையைக் கட்டவிழ்த்து விட்ட  கொடியவர்கள் இரக்கமில்லா அரக்கர்கள் என்பதில் வேறு கருத்து இருக்க முடியாது. இந்த மாபாதகச் செயலை எவர் செய்திருந்தாலும் என்ன காரணத்திற்காகச் செய்திருந்தாலும் அவர காலம் தாழ்த்தப்படாமல் தண்டிக்கப்படவேண்டும்.