பனாத்வாலா அவர்கள் மறைவு!

முஸ்லீம் லீக் மாநாட்டில் பேசும் பனாத்வாலா அவர்கள்
Share this:

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவர் குலாம் மஹ்மூது பனாத்வாலா அவர்கள் நேற்று மாலை 3:30 மணியளவில் மும்பையிலுள்ள அவரது இல்லத்தில் காலமானார்.

அன்னாரது வாழ்க்கைக் குறிப்பு பின்வருமாறு:
 
ஆசிரியர் குலாம் மஹ்மூது பனாத்வாலா ஸாஹிப் 1933ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதி மும்பையில் ஹாஜி நூர் முஹம்மது அவர்களின் மகனாகப் பிறந்தார்.
 
மும்பைப் பல்கலைக் கழகத்தில் வணிகவியல் நிறைஞர் (M.Com), கல்வியியல் இளையர் (B.Ed) பட்டப்படிப்புகளை முடித்தார். 1954 முதல் 1962 வரை அன்-ஜுமனே இஸ்லாம் உயர்நிலைப்பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றினார். இக்காலகட்டத்தில் கண்ணியத்திற்குரிய காயிதேமில்லத் அவர்களைச் சந்தித்து இந்திய யூனியன் முஸ்லிம் லீகில் தன்னை இணைத்துக் கொண்டார்.

 

சட்டமன்ற – நாடாளுமன்றப் பணிகள்:


மும்பை உமர்காடி சட்டமன்றத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு 1967 முதல் 1977 வரை மஹாராஷ்டிர சட்டமன்ற உறுப்பினராக செயல்பட்டார்.

இக்காலகட்டத்தில் மஹாராஷ்டிர அரசு கருத்தடை சட்டம் பசுவதை சட்டம் வந்தேமாதரம் பாடல் கட்டாயம் பாட வேண்டும் என்றெல்லாம் சட்டம் கொண்டு வந்தபோது அவற்றை எதிர்த்து கையெழுத்து இயக்கம் உள்ளிட்ட அறப்போராட்டங்கள் நடத்தி அவற்றில் வெற்றியும் பெற்றார்.

இந்திய நாடாளுமன்றத்திற்கு கேரள மாநிலம் பொன்னானி தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு 1971 முதல் 1991 வரையிலும் 1996 முதல் 2004 வரையிலும் உறுப்பினராக இருந்தார்.

ஷரீஅத் சட்டத்திற்கெதிரான ஷாபானு வழக்கு நடைபெற்றபோது இந்திய நாடாளுமன்றத்தில் தலைவர் ஜி.எம்.பனாத்வாலா அவர்கள் எடுத்து வைத்த வாதங்களும் ஷரீஅத் பற்றிய தெளிவுரையும் நாடாளுமன்ற வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பதிக்கப்பட்டவை. தனிநபர் மசோதா மூலம் ஷரீஅத் சட்டம் பாதுகாக்கப்பட்ட பெருமை அவர் சார்ந்திருந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீகையே சாரும்.

நாடாளுமன்றத்தில் அலிகர் பல்கலைக் கழகத்தில் சிறுபான்மையினர் அந்தஸ்தைப் பாதுகாத்தல், அஸ்ஸாமிய முஸ்லிம்களின் குடியுரிமை அயோத்தி பாபரி மஸ்ஜித் உள்ளிட்ட அனைத்து வழிபாட்டுத் தலங்களும் இந்தியா சுதந்திரம் அடைந்தபோது இருந்த நிலையிலேயே பாதுகாக்கப்பட வேண்டும், முஸ்லிம்கள் மீதான தீவிரவாத முத்திரை அகற்றப்பட வேண்டும், வக்ஃப் சொத்துக்கள் பாதுகாப்பு, மகளிர் இடஒதுக்கீடு மசோதா, தேசிய பாதுகாப்பு சட்டம், ஜாமிஆ மில்லியா இஸ்லாமிய பல்கலைக் கழக மசோதா ராம்புர் ரஜா நூலக மசோதா மவ்லானா ஆஸாத் தேசிய உர்தூ பல்கலைக் கழக மசோதா வாரணாசி பேர்ணாம்பட், ஜாம்ஷெட்புர் முஜப்புர் உள்ளிட்ட நகரங்களில் நிகழ்ந்த இனக்கலவரங்கள் மத்திய – மாநில அரசுப் பணிகளில் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவம் உர்தூ மொழிக்கான குஜ்ரால் குழு கேரள மாநிலம் மலப்புரம் மக்களின் மேம்பாட்டுத் திட்டங்கள் உள்ளிட்ட விவாதங்களில் ஜி.எம்.பனாத்வாலா அவர்கள் எடுத்து வைத்த வாதங்கள் அனைவராலும் பாராட்டப்பட்டவை.

பாராட்டுகள்:


பெருந்தலைவர் ஜி.எம்.பனாத்வாலா ஸாஹிபிற்கு சென்னை முஸ்லிம் அமைப்புகளால் 'சிறந்த சமூக சேவகர் தங்கப்பதக்க விருது தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களால் வழங்கப்பட்டது. பன்னாட்டு நண்பர்கள் சங்கத்தின் சார்பில் 'விஜய் ஸ்ரீ விருது குட்ச் சக்தீ சார்பில் 'சமாஜ்ரத்னா விருது சிறந்த நாடாளுமன்றவாதிக்கான 'மவ்லானா பஜ்ருல் ஹக் கைராபாதி விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்தியா டுடே இதழில் – சிறந்த நாடாளுமன்றவாதிகளில் பத்தில் ஒருவராக தேர்வு செய்யப்பட்டார். 'பயானீர் இதழில் தேர்ந்த நாடாளுமன்றவாதிகளில் 12 நபர்களில் ஒருவராகத் தேர்வு செய்யப்பட்டார். ஷரீஅத் சட்ட மசோதா மீது விவாதம் நடந்தபோது தமிழக முஸ்லிம்களால் 'முஜாஹிதேமில்லத் என்ற பட்டம் வழங்கப்பட்டது.

பொறுப்புகள்:


காயிதெமில்லத் பாபகி தங்கள், இப்றாஹீம் சுலைமான் சேட் ஆகியோருக்குப் பின் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தேசியத் தலைவராக இதுகாலம் வரை பணியாற்றி வந்தார். இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் அரசியல் கூட்டணியான மிலலி ஜம்ஹீரி மஹஜ் மஜ்லிஸே இத்திஹாதே முஸ்லிமீன் முஸ்லிம் மஜ்லிஸ் ஆகியவற்றின் தலைவராகவும் பணியாற்றி இருக்கிறார்.

முஸ்லிம் தனியார் சட்ட வாரியத்தின் நிர்வாகக் குழு உறுப்பினராக இன்று வரை பணியாற்றி வந்தார். அலிகர் பல்கலைக்கழக ஆட்சிக்குழு இந்திய அரசின் பொன்விழாக் குழு மஹாராஷ்டிரா தேசிய ஒருமைப்பாட்டுக் குழு உள்ளிட்ட குழுக்களின் உறுப்பினராகவும் மும்பை அமைதிக்கான நீதித்துறையின் நீதிபதியாகவும் முஸ்லிம் ஆம்புலன்ஸ் சங்கத்தின் துணைத் தலைவராகவும் அன்-ஜுமனே இஸ்லாம் பொருளாதாரப் பள்ளியின் தலைவராகவும் கச்சி மேமன் ஜமாஅத் மாணவர் வட்டத்தின் தலைவராகவும் மற்றும் பல்வேறு அறக்கட்டளைகளின் அறங்காவலராகவும் பணியாற்றி இருக்கிறார் – பணியாற்றியும் வருகிறார்.

வெளியீடுகள்:


'மார்க்கமும்-அரசியலும்', 'சுதந்திரத்திற்குப் பின் முஸ்லிம் லீக்' ஆகிய புத்தகங்களை அவர் எழுதியிருக்கிறார். கட்டுரைகள் பிரசுரங்கள் பல வெளியிட்டிருக்கிறார்.

பயணித்த நாடுகள்:


புனித ஹஜ் கடமையை நிறைவேற்றியிருக்கிறார். இரண்டு முறை உம்றா செய்திருக்கிறார். அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ரோம், ஜெர்மனி, மால்டா, துருக்கி, சைப்ரஸ், ஆஸ்திரேலியா, நார்வே, பாகிஸ்தான், சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் குவைத் ஆகிய நாடுகளுக்கு சமுதாயத்தின் பிரதிநிதியாக அவர் பயணித்திருக்கிறார்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவர் குலாம் மஹ்மூது பனாத்வாலா ஸாஹிப் அவர்கள் மஹாராஷ்டிரா சட்டமன்றத்திலும் இந்திய நாடாளுமன்றத்திலும் ஆற்றிய உரைகள் தொகுக்கப்பட்டு நூலாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நிறுவன தினமான மார்ச் 10ஆம் நாளன்று சென்னையில் வெளியிடப்பட்டது.

கடந்த ஜூன் 20, 21 தேதிகளில் சென்னையில் நடைபெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் 60ஆம் ஆண்டு நிறைவு மணிவிழா மாநாட்டில் கலந்துகொண்டதே அவரது கடைசி நிகழ்ச்சியாயிற்று.

எல்லாம்வல்ல அல்லாஹ் மறைந்த பனாத்வாலா ஸாஹிபின் நற்பணிகளை ஏற்று அவர்களின் பிழைகளைப் பொறுத்து உயர்வான சுவனத்தைத் தந்தருள்வானாக.

 

செய்தி மூலம்: http://muslimleaguetn.com/hqreleases.asp?id=10

 

இறைவனிடமிருந்தே வந்தோம்; இன்னும் அவனிடமே மீளக்கூடியவர்களாக இருக்கிறோம்!


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.