அஹமதாபாத் குண்டுவெடிப்பு: சிபிஐ விசாரணை கோரி ஏ.ஐ.எம்.எம்.எம்!

அஹமதாபாத் குண்டு வெடிப்புகளைக் குறித்து சி.பி.ஐ விசாரணை நடத்த வேண்டும் என அகில இந்திய முஸ்லிம் மஜ்லிஸே முஷவ்வரா (AIMMM) கோரிக்கை விடுத்துள்ளது.

“இவ்வழக்கில் இதுவரை கைது செய்யப் பட்டுள்ளவர்களுடன் பேசுவதற்கு மனித உரிமைக் கழகத்தினருக்கும் முஸ்லிம் அமைப்புகளுக்கும் அனுமதி வழங்க வேண்டும். குண்டு வெடிப்பு வழக்குகளின் விசாரணை நேர்மையாக நடைபெறுகின்றது என்பதை உறுதிபடுத்துவதற்கு, பணிமூப்பு பெற்ற நீதிபதிகள், மனித உரிமைக் கழகத்தினரும் பத்திரிக்கையாளர்களும் அடங்கிய ஓர் உயர்மட்டக் குழுவுக்குப் பொறுப்பளிக்க வேண்டும்” எனவும் மஜ்லிஸே முஷவ்வராத் தலைவர் டாக்டர்.ஸஃபருல் இஸ்லாம் கான் கோரிக்கை விடுத்துள்ளார்.

குஜராத் குண்டு வெடிப்பு மற்றும் அதைத் தொடர்ந்து சூரத்தில் கண்டு, எடுக்கப்பட்ட வெடிகுண்டுகள் வழக்கில் குற்றம் சுமத்தி, முஸ்லிம்களைக் கைது செய்த குஜராத் காவல்துறையின் நாடகம் நம்பிக்கைக்குரியதில்லை. முஸ்லிம் சமுதாயத்திற்கு விசாரணை அமைப்புகளின் மீதான நம்பிக்கை பெருமளவு குறைந்துள்ளது.

மற்ற மாநிலங்களிலிருந்து முஸ்லிம் இளைஞர்களைக் குஜராத் காவல்துறை கடத்திக் கொண்டுவந்து வழக்கமான மூன்றாம் தர வழிமுறைகளைப் பயன்படுத்திக் குற்றத்தை ஒப்புக் கொள்ள வைத்துள்ளனர். முஸ்லிம்களுக்கு விசாரணை அமைப்புகளின் மீதான நம்பிக்கையை மீட்டெடுக்க, குண்டு வெடிப்புகளின் மீதான விசாரணையைக் கண்காணிக்க ஓர் உயர் மட்டக் குழுவை நியமிக்கவேண்டும்.

வெளிநாட்டு உளவு அமைப்புகளான மொஸாத், எஃப்.பி.ஐ முதலானவற்றின் செயல்பாடுகள் இந்திய மண்ணிலும் உண்டு. இவர்கள் எவரும் இந்திய நாட்டின் அமைதியிலும் பாதுகாப்பிலும் விருப்பமுடையோர் அல்லர். முன்னாள் அமெரிக்க சிப்பாய் கென்னத் ஹாய்வுட் என்பவர்தான் நவி மும்பையிலிருந்து ‘இந்தியன் முஜாஹிதீன்’ என்ற போலி பெயரில் பத்திரிக்கைகளுக்கு மின்னஞ்சல் அனுப்பியவர். இது வெளிநாட்டு ஏஜன்ஸிகளுடனான இந்திய ஏஜன்ஸிகளுக்குள்ள தொடர்பையே வெளிப்படுத்துகின்றது எனவும் ஸஃபருல் இஸ்லாம் கூறினார்.

அகமதாபாத் குண்டு வெடிப்புகளில் தொடர்புடையவர்களைக் கண்டறிந்ததாக சில சிமி உறுப்பினர்கள் எனக் கூறப்படுபவர்களைப் பிடித்து வைத்துக் கொண்டு குஜராத் காவல்துறை டி.ஜிபி பாண்டே வெளியிட்ட பத்திரிக்கைச் செய்தி கடந்த தினங்களில் இந்திய ஊடகங்களால்தலைப்புச் செய்திகளாக ஆக்கப்பட்டு கொண்டாடப்பட்டது நினைவிருக்கலாம்.

சிமியின் மீதான தடைக்குக் காரணமாகக் கூறப்பட்ட அனைத்துக் குற்றச்சாட்டுகளும் ஆதாரமற்றவை எனவும் புதிதாக அதன் மீது குற்றம் சுமத்த எவ்வித புதிய ஆதாரங்களும் அரசின் கையில் இல்லை எனவும் கூறி தில்லி உயர்நீதி மன்றம் வெளியிட்ட தடை நீக்கல் உத்தரவுக்குப் பின்னால் அவசர அவசரமாக உச்சநீதி மன்றம் அத்தடை நீக்கத்தை இரு வார காலத்திற்கு நிறுத்தி வைத்ததும் நினைவிருக்கலாம்.

இக்காலகட்டத்தில் தான், 2002-இல் குஜராத் முஸ்லிம்களை கொடூரமாகக் கொன்றொழிக்கத் தலைமையேற்று நடத்தியதாக தெஹல்கா இனம் காட்டிய குஜராத் டி.ஜி.பி பாண்டே, சிமி மீது அஹமதாபாத் குண்டுவெடிப்புக் குற்றச்சாட்டை அனாயாசமான நாடகம் மூலம் சுமத்த முயலுகிறார் என்பதும் அதனையே இந்திய ஊடகங்களும் எவ்வித வெட்கமும் இன்றி ஒத்து ஊதுகின்றன என்பதும் கவனிக்கத் தக்கது.

மஜ்லிஸே முஷவ்வராவின் தலைவர் கூறியதைப் போன்று, இந்திய முஸ்லிம்களுக்கு இந்திய நீதிமற்றும் விசாரணை அமைப்புகள் மீதான நம்பிக்கை முழுவதுமாகத் தகர்ந்துள்ளது. அதனைச் சீர்செய்யவும் நாட்டின் நீதி, அதிகாரத்தின் மீது முஸ்லிம்களுக்கு நம்பிக்கையை அதிகரிக்கும் விதத்தில் அரசு நடவடிக்கைகளை விரைந்து எடுக்க வேண்டியதும் அவசியமாகும். இல்லையேல், அது நாட்டின் நிலையான எதிர்காலத்தையே கடுமையாகப் பாதிக்கும்.