இந்தியாவின் அதிநவீன ஏவுகணைக் குடும்பத்தின் மற்றொரு மிக முக்கிய உறுப்பினரான அக்னி-3 ஏவுகணை ஜூலை 9 இந்திய நேரம் முற்பகல் 11:05 மணியளவில் வெற்றிகரமாகப் பரிசோதிக்கப்பட்டது. முழுக்க இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட 3500 கி.மீ தூரம் வரை பாய்ந்து சென்று தரைப்பரப்பிலிருந்து இன்னொரு தரைப்பரப்பைத் (surface-to-surface) துல்லியமாகத் தாக்கவல்ல இந்த ஏவுகணை ஒரிஸ்ஸாவிலுள்ள வீலர் தீவிலிருந்து ஏவப்பட்டது.
இந்தச் சோதனையின்போது பாதுகாப்பு அமைச்சர் திரு.பிரணாப் முகர்ஜி மற்றும் உயரதிகாரிகள் உடனிருந்தனர்.
16 மீட்டர் நீளமும் 1.8 மீ குறுக்களவும் உள்ள அக்னி-3 இரண்டடுக்கு கொண்டது. திண்ம எரிபொருளைப் பயன்படுத்தப்படும் இந்த அக்னி-3 ஏவுகணையானது, அணுகுண்டு தவிர சாதாரண குண்டுகளையும் தாங்கிச் செல்ல வல்லது என்பது குறிப்பிடத்தக்கது
திருத்தம்:
நேற்று (09-07-2006) யாஹூ தளம் ஐபிஎன் லைவ் செய்தி நிறுவனத்திடமிருந்து பெறப்பட்ட செய்தியை அடிப்படையாகக் கொண்டு "அக்னி-3 சோதனை வெற்றி" என வெளியிட்ட செய்தியையே நாம் தமிழில் முந்தித் தந்தோம். ஆனால் இன்று யாஹூ தளம் அஸ்ஸோசியேட்டட் பிரஸ் செய்தியின்படி அக்னி -3 ஏவுகணை சோதனை இலக்கை மிகச் சரியாக அடையாமல் சற்றுத் தள்ளி விழுந்ததாக செய்தி வெளியிட்டுள்ளது. இரண்டு அடுக்கு ராக்கெட் கட்டமைப்பில் இரண்டாவது அடுக்கு சரியாகப் பிரியாததால் கடைசி நேரத்தில் இந்தத் தொழில் நுட்பக் கோளாறு ஏற்பட்டதாக பெயர் குறிப்பிட விரும்பாத பாதுகாப்புத் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்ததாக அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இருப்பினும் இந்திய அரசின் அதிகாரப் பூர்வச் செய்தி தளம் இந்தச் செய்தியைக் குறித்து தெளிவான அறிக்கை எதையும் வெளியிடவில்லை. அக்னி-3 வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது என்று மட்டுமே இந்தச் செய்தி தெரிவிக்கிறது. அத்துடன் Gulf-times போன்ற பல வளைகுடா நாட்டு இன்றைய (10-07-2006) செய்தித்தாள்களில் இன்றும் சோதனை வெற்றிகரமாக அமைந்தது என்ற செய்தியே வெளியாகியுள்ளது.
நம்பகமான நிறுவனங்களிலிருந்து செய்தியினை நாம் வாசகர்களுக்கு அளித்தாலும் நம் தளத்தின் மூலம் பிழையான செய்தி சொல்லப்பட்டதற்கு வருந்துகிறோம்.
சுட்டிக்காட்டிய சகோதரர் அபூஉமர் அவர்களுக்கு எங்கள் நன்றிகள்.
-நிர்வாகி (சத்தியமார்க்கம்.காம்)