பதில்:
இஸ்லாமியர்களின் மீது அக்கிரமங்களும் அட்டூழியங்களும் கட்டவிழ்த்து விடப்படும் பொழுது இஸ்லாத்தை முழுமையாக விளங்கிக் கொள்ளாத சிலர் தற்காப்பு என்ற பெயரில் செய்யும் அத்துமீறல்களை இஸ்லாத்துடன் தொடர்பு படுத்திக் கொண்டு, இஸ்லாம் வன்முறையை தூண்டக் கூடிய மார்க்கம் என்னும் கட்டுக் கதையை நிலைநிறுத்துவதற்காக – திருக்குர்ஆனில் வரும் ஒருசில வசனங்களைத் தங்கள் வாதத்தை நிறுவுவதற்காக தவறுதலாக பொருள் கற்பித்து இஸ்லாத்திற்கு எதிராக சிலர் செய்யும் அவதூறு பிரச்சாரங்களில் ஒன்று தான் இந்த – “இஸ்லாமியர்களுக்கு முஸ்லிம் அல்லாதவர்களைக் கொல்லச்சொல்லி குர்ஆன் கட்டளையிடுவதாக“ கூறப்படும் வாதம்.
இக்குற்றச்சாட்டை முன் வைப்பவர்கள் திருக்குர்ஆனின் 9 ஆவது அத்தியாயத்திலுள்ள 5 ஆவது வசனத்தின் ஒரு பாகமான “‘முஷ்ரிக்குகளை (இறைவனுக்கு இணைவைப்பவர்களையும், இறை மறுப்பாளர்களையும்) கண்ட இடங்களில் வெட்டுங்கள்” என்பதனை இதற்கு ஆதாரமாக முன் வைக்கின்றனர். இத்தவறான குற்றச்சாட்டின் நம்பகத்தன்மையினை ஆராய்வதற்கு முன் இக்குற்றச்சாட்டை முன் வைப்பவர்கள் எடுத்து வைக்கும் அவ்வசனத்தை முழுமையாக காண்போம்.
அருள்மறை குர்ஆனின் வசனம்:
“போர் விலக்கப்பட்ட சங்கைமிக்க மாதங்கள் (நான்கு மாதங்கள்) கழிந்து விட்டால் முஷ்ரிக்குகளை கண்ட இடங்களில் வெட்டுங்கள். அவர்களை பிடியுங்கள். அவர்களை முற்றுகையிடுங்கள். ஒவ்வொரு பதுங்குமிடத்திலும் அவர்களை குறிவைத்து உட்கார்ந்திருங்கள். ஆனால் அவர்கள் (மனந்திருந்தி, தம் பாவங்களிலிருந்து) தவ்பா செய்து மீண்டு, தொழுகையையும் கடைபிடித்து, (ஏழை வரியாகிய) ஜகாத்தும் (முறைப்படிக்) கொடுத்து வருவார்களானால் (அவர்களை) அவர்கள் வழியில் விட்டு விடுங்கள். நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்போனாகவும், கிருபையுடையவனாகவும் இருக்கின்றான்.” (அல் குர்ஆன் 9:5)
மேற்படி வசனத்தை திறந்த மனதுடன் அணுகும் எவருக்கும் இவ்வசனம் ஏதோ ஓர் போர் சூழலில் சொல்லப்பட்ட அறிவுரை என்பது தெளிவாக விளங்கும். ஆனால் இஸ்லாத்தின் மீது இந்த அபாண்டமான குற்றச்சாட்டை கூற வருவோர் இவ்வசனத்தில் வரும் ஒரு வரியை மட்டும் எடுத்துக் கொண்டு மேற்படி வசனம் எந்தச் சூழலில் எதற்காக சொல்லப்பட்டது என்பதை வசதியாக மறந்து விட்டு அல்லது மறைத்து விட்டு விமர்சனம் செய்கிறார்கள்.
மேற்படி வசனம் எதனால், எந்தச் சூழ்நிலையில் சொல்லப்பட்டது என்பதைத் தெளிவாக அறிந்து கொள்ள வேண்டுமெனில் மேற்படி அத்தியாயத்தின் முதலாம் வசனத்திலிருந்து படிக்க வேண்டும். மேற்கண்ட வசனத்தின் முந்தைய வசனங்கள் மக்காவில் உள்ள இஸ்லாமியர்களுக்கும், இறைவனுக்கு இணைவைப்பவர்களுக்கும் இடையில் ஏற்பட்ட சமாதான ஒப்பந்தம் பற்றித் தெரிவிக்கின்றது. இவ்வொப்பந்தம் மக்காவில் உள்ள இணை வைப்பவர்களால் மீறப்பட்டது. எனவே மீறப்பட்ட ஒப்பந்தத்தை சரி செய்ய வேண்டி இணைவைப்பவர்களுக்கு நான்கு மாத காலம் அவகாசம் அளித்து குறிப்பிட்ட கால அவகாசத்தில் ஒப்பந்தப்படி நடக்கவில்லையெனில் அவர்கள் மீது போர் தொடுக்கப்படும் என்றும் அறிவிக்கிறது மேற்படி வசனத்தின் முந்தைய வசனங்கள். கொடுக்கப்பட்ட கால அவகாசம் முடிந்த பின்னும் ஒப்பந்தப்படி நடக்கவில்லை எனில் போர் நிகழும் எனவும் அவ்வாறு ஒப்பந்தத்தை நிறைவேற்றாதவர்களுடன் போர் நடந்தால் அதில் எவ்வாறு செயல்பட வேண்டும் எனவும் அறிவுரை பகர்வதே மேற்படி வசனம்.
இவ்வாறு ஒப்பந்தத்தை மீறியவர்களுடன் நடக்கும் ஒரு போரில் இஸ்லாமியர்கள் கடைபிடிக்க வேண்டிய விஷயங்களாக கூறப்படுபவை எல்லா முஸ்லிமல்லாதவர்களுக்கும் பொருந்தும் எனக் கூறுவது எவ்விதத்தில் நியாயம். இந்த வசனம் ஒப்பந்தங்கள் மீறப்படுவதால் நடைபெறும் போர் சூழலுக்கு மட்டுமே பொருத்தமானதாகும்.
இரு நாட்டினருக்கு இடையே போர் நடைபெறும் பொழுது ஒரு நாட்டின் அதிபர் தன் நாட்டு படைவீரருக்கு “எதிரி நாட்டினரை காணும் இடத்தில் சுட்டு வீழ்த்துங்கள்” எனக் கூறுவதாக கருதுவோம். இப்பொழுது அப்போர் முடிந்து பல காலங்களுக்குப் பிறகு மற்ற நாட்டினர் இன்ன நாட்டு அதிபர், “எதிரி நாட்டினரை காணும் இடத்தில் சுட்டு வீழ்த்துங்கள்” எனக் கூறுவதாக கூறி அந்நாட்டுக்கு எதிராக மற்ற நாடுகளை ஒன்று திரட்ட பிரச்சாரம் செய்தால் எப்படி இருக்கும்.
அது தான் அருள்மறை குர்ஆனின் மேற்படி வசனம் குறித்த விஷயத்திலும் நடக்கிறது. இஸ்லாமிய போர் வீரர்களுக்கு தைரிய மூட்டுவதற்காகவும், போரில் எதிர்க்காதவர்களை பாதுகாப்பதற்காகவும் அறிவுரையாக சொல்லப்பட்ட மேற்படி வசனத்தில் ஒரு பகுதியை மட்டும் எடுத்து இஸ்லாத்திற்கு எதிராக இஸ்லாமியர்கள் அல்லாதவர்களை ஒருங்கிணைக்க சிலர் செய்யும் விஷமப் பிரச்சாரமே இது.
மேலும் மேற்கண்ட 5 ஆவது வசனத்தை தொடர்ந்து வரும் 6 ஆவது வசனத்தைக் குறித்து இவ்விமர்சனம் வைப்போர் ஏனோ கண்டு கொள்வதே இல்லை.
ஒரு உதாரணத்தைக் காணலாம். இஸ்லாத்தைக் குறித்து விமர்சிப்பதையே வழக்கமாகக் கொண்டவர் இந்தியாவின் பிரபல பத்திரிக்கையாளர் அருண் சோரி. அவர் எழுதியுள்ள ‘ஃபத்வாக்களின் உலகம்‘ என்கிற புத்தகத்தின் 572 வது பக்கத்தில் திருக்குர்ஆனின் மேற்படி வசனத்தைச் சுட்டிக் காட்டி விமர்சித்துள்ளார். ஐந்தாவது வசனத்தை சுட்டிக்காட்டி விமர்சித்த அவர் உடனடியாக ஏழாவது வசனத்திற்கு தாவி விடுகிறார். இதன் மூலம் அருண் சோரி ஐந்துக்கும் ஏழுக்கும் இடையில் உள்ள 6வது வசனத்தை விட்டுவிட்டார் என்பது அறிவுள்ள எந்த மனிதரும் புரிந்து கொள்ளலாம். ஒருவேளை 5 க்கு அடுத்த எண் 7 தான் என்று நினைத்தாரோ என்னவோ?
அருள்மறை குர்ஆனின் ஒன்பதாவது அத்தியாயம் ஸூரத்துத் தவ்பாவின் 6வது வசனம் இக்குற்றச்சாட்டு ஓர் கட்டுக்கதை எனபதையும் இஸ்லாம் சமாதானத்தின் மார்க்கம் தான் என்பதையும் தெளிவாக உணர்த்தி நிற்கிறது. எனவே தான் இஸ்லாத்தை விமர்சிக்க 5 ஆவது வசனத்தையும் 7 ஆவது வசனத்தையும் எடுத்துக் கொண்ட அருண்சோரி அவர்கள் 6 ஆவது வசனத்தை வசதியாக மறைத்து விட்டார். 6 ஆவது வசனத்தை அவர் அப்புத்தகத்தில் காட்டியிருந்தால் அப்புத்தகம் எழுதியதற்கே அர்த்தமில்லாமல் போயிருக்கும். யாராவது சேம் சைட் கோல் போட நினைப்பார்களா என்ன? அதைத் தான் அவரும் செய்திருக்கிறார்.
அருள்மறை குர்ஆனின் ஒன்பதாவது அத்தியாயம் ஸூரத்துத் தவ்பாவின் ஆறாவது வசனம் இஸ்லாம் வன்முறையையும், இரத்தம் சிந்துவதையும், மூர்க்கத்தனத்தையும் தூண்டக் கூடிய மார்க்கம் இல்லை என்பதையும், சமாதானத்தையும் இரக்கத்தையும் வலியுறுத்தும் மார்க்கம் என்பதையும் தெளிவாக உணர்த்தி நிற்கிறது. திருக்குர்ஆனின் 9 ஆவது அத்தியாயம் 6 ஆவது வசனம் கீழ்க்கண்டவாறு கூறுகிறது.
‘(நபியே!) முஷ்ரிக்குகளில் யாரேனும் உம்மிடம் புகலிடம் தேடி வந்தால், அல்லாஹ்வுடைய வசனங்களை அவர் செவியேற்கும் வரையில் அவருக்கு அபயமளிப்பீராக!. அதன்பின் அவரை பாதுகாப்பு கிடைக்கும் வேறு இடத்திற்கு (பத்திரமாக) அனுப்புவீராக. ஏனென்றால் அவர்கள் நிச்சயமாக அறியாத சமூகத்தினராக இருக்கிறார்கள்.”(அல் குர்ஆன் 9:6)
அருள்மறை குர்ஆன் போர் நடந்து கொண்டிருக்கும் பொழுது எதிரிகள் உங்களிடம் புகலிடம் தேடுவார்கள் எனில், அவர்களுக்கு அபயமளியுங்கள் என்று சொல்வதோடு நின்று விடாமல், அவர்கள் ஒரு பாதுகாப்பான இடத்திற்கு சென்றடையும் வரை அவருக்கு பாதுகாப்பளியுங்கள் என்றும் வலியுறுத்துகிறது.
இன்றைய நவநாகரீக உலகத்தில் அமைதியை விரும்பும் ஒரு ராணுவத் தளபதி ஒருவர் இருந்தால் போர் நடந்து கொண்டிருக்கும் பொழுது, எதிரி ராணுவ வீரர்களை அதிகபட்சம் மன்னித்து விட்டுவிடலாம். ஆனால் எந்த ராணுவ தளபதி எதிரி ராணுவ வீரர்களை, அவர்கள் ஒரு பாதுகாப்பான இடத்தைச் சென்றடையும்வரை அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கச் சொல்லி உத்தரவிட்டிருக்கிறார்?
ஜெனீவா ஒப்பந்தம் போன்ற வழிமுறைகள் தெளிவாக இருக்கும்போதே இந்த நவீன காலத்தில் கூட போர்வீரர்கள் பிடிபட்ட எதிரி நாட்டு வீரர்களிடம் எப்படி மனிதத் தன்மையற்று நடந்து கொள்கிறார்கள் என்பதனை குவாண்டனமோக்களும் அபூகுரைப்களும் இன்று உலகுக்கு உணர்த்தி நிற்கின்றன.
எனவே இஸ்லாமிய மார்க்கம் வன்முறையையும், இரத்தம் சிந்துவதையும், மூர்க்கத்தனத்தையும் தூண்டக் கூடிய மார்க்கம் இல்லை. அமைதியையும் சமாதானத்தையும் விரும்பக்கூடிய மார்க்கம் தான் இஸ்லாம். இதனை இக்குற்றச்சாட்டுக்கு ஆதாரமாக எடுத்து வைக்கும் வசனத்தின் சூழ்நிலையை புரிந்துக் கொள்வதன் மூலம் தெளிவாக விளங்கிக் கொள்ளலாம்.
அல்லாஹ் மிக அறிந்தவன்.