ரணில் விக்ரமசிங்காவை கண்டிக்கும் அகில இலங்கை முஸ்லிம் உலமாக்கட்சி!

மத்திய ஆசியாவில் இஸ்லாம் மதம் இராணுவ ரீதியாக பரப்பப்பட்டது என்றும் மத்திய ஆசியாவில் புத்தமதம் அழிக்கப்பட அதுவே காரணம் என்றும் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசியுள்ள இலங்கை ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்காவை அகில இலங்கை முஸ்லிம் உலமாக் கட்சி வன்மையாகக் கண்டித்துள்ளது.

அகில இலங்கை முஸ்லிம் உலமாக் கட்சி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

“இஸ்லாம் இராணுவ ரீதியாக பரப்பப்பட்டதாலேயே மத்திய ஆசியாவில் பௌத்த மதம் அழிந்தது” என பொறுப்பற்ற முறையில் உண்மையை திரித்து ஐ.தே.க. தலைவர் ரணில் விக்ரமசிங்கா பேசியுள்ளதன் மூலம் முஸ்லிம்களை மட்டுமல்ல, பௌத்த மக்களையும் அவமதித்துள்ளார். வெறுமனே இராணுத்திற்குப் பயந்து தமது மதத்தை விட்டுக்கொடுத்தவர்களாக பண்டைய ஆசிய, பௌத்த மக்களை இவர் சித்தரித்துள்ளதன் மூலம் அவர்களை அவமதித்துள்ளார்.

இஸ்லாம் எந்தவொரு காலத்திலும் இராணுவ ரீதியாகப் பரப்பப்படவில்லை என்பதை வரலாறு மிகத் தெளிவாகச் சொல்கிறது. அந்நிய சக்திகள் முஸ்லிம் நாடுகள் மீது போர்முரசு கொட்டியதன் காரணமாகவே முஸ்லிம் ஆட்சியாளர்களும் சில நாடுகள் மீது படையெடுக்க நிர்ப்பந்திக்கப் பட்டார்கள். தமது நாட்டையும் தமது மக்களையும் பாதுகாக்க நாட்டின் தலைவர்கள் படையெடுப்பதென்பது அதர்மமாகாது. ஆனாலும் சமர்கந்த் முதல் சீனா வரை எந்தவொரு இஸ்லாமிய இராணுவமும் இஸ்லாத்தை பரப்புவதற்காக அனுப்பப்பட்டதாக வரலாறு இல்லை.

முஸ்லிம்கள் இந்திய உபகண்டத்தை சுமார் 800 வருடங்கள் ஆட்சி செய்துள்ளனர். அவர்கள் இராணுவத்தைக் கொண்டு இஸ்லாத்தைப் பரப்ப நினைத்திருந்தால் முழு இந்தியாவை மட்டமல்ல சின்னஞ்சிறிய தீவான இலங்கையிலும் இஸ்லாத்தை இராணுவ ரீதியாக பரப்பியிருக்க முடியும். ஆனாலும் எந்த ஓர் இஸ்லாமிய போர் வீரனும் இங்கு வராமலேயே இஸ்லாம் இங்கு பரவியதன் காரணம் அதன் கொள்கை கோட்பாடும் அன்றைய முஸ்லிம்களின் நல்ல பண்புகளுமாகும்.

அதே போல் மாலத்தீவு, மலேசியா, இந்தோனேசியா, தாய்லாந்து பொன்ற நாடுகளின் வரலாற்றை ஆராயும்போது அந்நாடுகளுக்கு முஸ்லிம்கள் இராணுவ ரீதியில் படையெடுத்ததாக வரலாறு இல்லை. மாறாக மகான் அப்துல் காதர் ஜீலானி போன்ற பெரியார்களின் நல்வழிகாட்டல்கள் மூலமே அந்நாடுகளின் மன்னர்கள் கூட இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டதை வரலாற்றில் நாம் காண முடிவதோடு இன்றும் அம்மக்கள் இதனை பெருமையாகச் சொல்லிக் கொள்வதையும் காணலாம்.

ஆயுதத்திற்கு பயந்து தமது சமயத்தை விடக்கூடியவர்களாக அம்மக்கள் இருப்பார்களாயின் வெள்ளையர்கள் மற்றும் ஜப்பானியர்களின் காலனித்துவத்தின் கீழ் இருந்தபொழுது தமது இஸ்லாமிய மதத்திலிருந்து வெளியேறியிருப்பார்கள். ஆகவே அம்மக்கள் ஆயுதத்துக்குப் பணிந்து சமயத்தை விட்டுக்கொடுக்கும் அளவுக்கு கோழைகள் அல்லர். மாறாக கொள்கையை சரிவர உணர்ந்து ஏற்றுக்கொண்டவர்கள் ஆவர்.

வரலாற்று உண்மைகள் இவ்வாறு இருக்க, வெறுமனே தான்தோன்றித்தனமாக, கற்பனையாக சில மேற்கத்திய யூத, கிறிஸ்தவ எழுத்தாளர்களின் பொய்யான குறிப்புக்களை படித்து விட்டு சிறிதும் சிந்திக்காமல் எதிர்க்கட்சித் தலைவர் பொறுப்பற்ற முறையில் இவ்வாறு கூறியிருப்பது முஸ்லிம்களை புண்படுத்துவதாகும்.

சரிந்துவரும் தமது அரசியல் செல்வாக்கை தூக்கி நிறுத்துவதற்காக ரணில் விக்ரமசிங்கா இவ்வாறு இனவாதத்தைப் பேசுவது கண்டிக்கப்பட வேண்டியதாகும்.

அகில இலங்கை முஸ்லிம் உலமாக் கட்சி வெளியிட்ட அறிக்கையில் இவ்வாறு வெளியிடப்பட்டுள்ளது.