குர்ஆனில் முரண்பாடுகளா? (பகுதி-1) இன் தொடர்ச்சி…
ஐயம்:-
மனிதன் படைக்கப்பட்டது எதிலிருந்து?
– ரத்தக்கட்டியிலிருந்து (குர்ஆன் 96:1-2)
– நீரிலிருந்து (21:30)
– சுட்டக் களிமண்ணிலிருந்து (15:26)
– புழுதியிலிருந்து (3:59)
– வெறுமை (19:67)
– பூமியிலிருந்து (11:61)
– கெட்டியான ஒரு துளியிலிருந்து (16:4, 75:37)
தெளிவு:-
நான் மரணித்து விட்டால் உயிருடன் வெளியாக்கப்படுவேனா? என மனிதன் கேட்கிறான்.
அவன் எப்பொருளாகவும் இல்லாத நிலையில் நிச்சயமாக நாமே இதற்கு முன்னர் அவனைப் படைத்தோம் என்பதை மனிதன் நினைத்துப் பார்க்க வேண்டாமா? (அல்குர்ஆன் 19:66, 67)
19:67வது வசனத்தைச் சுட்டிக்காட்டி ”மனிதன் வெறுமையிலிருந்து படைக்கப் பட்டானா?” என்று கேள்வியில் தவறாக குறிப்பிடப்பட்டுள்ளது. வசனத்தின் பொருள், மனித இனம் படைக்கப்படுவதற்கு முன் மனிதன் ஓர் உயிர் அணுவாகவோ, துரும்பாகவோ, தூசியாகவோ எப்பொருளாகவும் இல்லை. எதுவாகவும் இல்லாமலிருந்த மனிதனை ”நான் பூமியில் வாழையடி வாழையாக வரும் ஓர் இனத்தைப் படைக்கப் போகிறேன்” (2:30. 15:28) என்று பூமியிலிருந்து மண்ணெடுத்து, முதல் மனிதரை நேரடியாக மண்ணிலிருந்து படைத்து மனித இனத்தைத் துவக்கினான் இறைவன்.
…அவரை (ஆதமை) மண்ணிலிருந்து அவன் படைத்தான். (அல்குர்ஆன் 3:59)
அதே போன்று 3:59வது வசனத்தைச் சுட்டிக்காட்டி, ”மனிதன் புழுதியிலிருந்து படைக்கப்பட்டானா?” என்று கேள்வியில் குறிப்பிடப்பட்டுள்ளது. 3:59, 18:37, 22:5, 30:20, 35:11, 40:67 ஆகிய வசனங்களில் ”துராப்” என்ற சொல் இடம்பெற்றுள்ளது. மண்ணைக் குறிப்பிடுவதற்கே துராப் எனப்படும். மண்ணிலிருந்து பொடி (powder) போன்ற புழுதிகள் காற்றில் பறந்தாலும் அதுவும் மண்ணிலிருந்தே கிளம்புவதால் புழுதியையும் மண் என்று குறிப்பிடலாம். (இதற்கான ஹதீஸ் விளக்கம் புகாரி 441.) களிமண்ணை உதிர்த்தால் முழுக்க பொடி (powder) புழுதி போன்றதாகும்.
…அவன்தான் பூமியிலிருந்து உங்களை உருவாக்கி, அதில் உங்களை வசிக்கவும் செய்தான்… (அல்குர்ஆன் 11:61)
தொடர்ந்து 11:61வது வசனத்தைச் சுட்டிக்காட்டி, ”மனிதன் பூமியிலிருந்து படைக்கப் பட்டானா?” என்று கேள்வியில் குறிப்பிடப்பட்டுள்ளது. பூமியிலிருந்து உங்களைப் படைத்தான் என்பது பூமியிலிருந்து மண்ணெடுத்து மனிதனைப் படைத்தான் என்று பொருளாகும். (இதற்கு வரும் நபிமொழிகளில் விளக்கம் உள்ளன)
குர்ஆன் வசனங்களில் முரண்பாடு உள்ளன எனக் கேள்வியில் எழுதியுள்ள 3:59, 11,61 இருவசனங்களில் விளங்கிய புழுதி என்றாலும், பூமி என்றாலும் மனிதன் மண்ணிலிருந்து படைப்பட்டான் என்கிற கருத்தையே கூறுவதால் அதற்கென தனி விளக்கம் தேவை இல்லை! கேள்வியில் எழுதியுள்ள 19:67வது வசனம், மனிதன் படைக்கப்படுவதற்கு முன் எப்பொருளாகவும் இல்லாமலிருந்தான் எனக் கூறி, மனிதன் ஒன்றுமாக இல்லாமலிருந்து பின்னர் உருவாக்கப்பட்டான் என்பதால் 19:67வது வசனத்திற்கும் தனி விளக்கம் தேவை இல்லை!
மனிதன் களிமண்ணிலிருந்து படைக்கப்பட்டான்
(தட்டினால்) ஓசை வரக் கூடிய காய்ந்த கருப்புக் களிமண்ணால் நிச்சயமாக நாம் மனிதனைப் படைத்தோம். அல்குர்ஆன் 15:26, 28, 55:14)
நிச்சயமாக நாம் (முதல்) மனிதரைக் களிமண் எனும் மூலத்திலிருந்து படைத்தோம் (அல்குர்ஆன் 23:12)
…நான் அவரை (ஆதமை) விடச் சிறந்தவன். நீ என்னை நெருப்பினால் படைத்தாய், அவரை களிமண்ணிலிருந்து படைத்தாய் என்று (இப்லீஸ்) கூறினான். (அல்குர்ஆன் 7:12 மேலும் பார்க்க, 15:33, 38:76 வசனங்கள்)
முதல் மனிதர், முதல் நபியுமான ஆதம் (அலை) அவர்களை, இறைவன் மண்பாண்டம் செய்யும் களிமண்ணினால் வடிவமைத்தான் என்பதை 7:12, 15:26, 33, 23:12, 38:76, 55:14 ஆகிய வசனங்களிலிருந்து விளங்கலாம். மனித வடிவத்தின் மூலப் பொருள் களிமண். (23:12)
நபிமொழி
அல்லாஹ், ஆதமை ஒரு பிடி மண்ணிலிருந்து படைத்தான். பூமியின் எல்லாப் பகுதியிலிருந்தும் அதை எடுத்தான். பூமியின் தரத்திற்கேற்ப ஆதமுடைய மக்கள் உருவானார்கள். இதனால் தான் சிகப்பு நிறமுடையோர், வெண்மை நிறமுடையோர், கருப்பு நிறமுடையோர், இவற்றுக்கு இடைப்பட்ட நிறமுடையோர் எனவும், நளினமானவர், திடமானவர், தீயவர் மற்றும் நல்லவர் உருவாயினர் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் அபூமூஸா அல்அஷ்அரி (ரலி) (நூல்கள் – திர்மிதி 2879, அபூதாவூத், அஹ்மத்)
வானவர்கள் ஒளியால் படைக்கப்பட்டனர். “ஜின்’கள் தீப்பிழம்பால் படைக்கப்பட்டனர். (ஆதி மனிதர்) ஆதம், உங்களுக்கு (குர்ஆனில்) கூறப்பட்டுள்ளதைப் போன்று (களிமண்ணால்) படைக்கப்பட்டார். என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் ஆயிஷா (ரலி) (நூல்கள் – முஸ்லிம் 5722, அஹ்மத்)
முதல் மனிதர் ஆதம் (அலை) அவர்கள் மண்ணினால் வடிவமைத்துப் படைக்கப்பட்டார். மனித இனத்தில் தோன்றிய முதல் மனிதரின் படைப்பிற்கு எது மூலப் பொருளாக இருந்ததோ அதுவே அவரது வம்சாவழிக்கும் மூலப் பொருளாக இருக்கும். இதேக் கருத்தையே வரும் வசனங்களும் கூறுகின்றன.
அவனே உங்களைக் களிமண்ணிலிருந்து படைத்தான்… (அல்குர்ஆன் 6:2)
…அவன்தான் பூமியிலிருந்து உங்களை உருவாக்கி, அதில் உங்களை வசிக்கவும் செய்தான்… (அல்குர்ஆன் 11:61)
மண்ணில் இருந்து உங்களை அவன் படைத்திருப்பதும் பின்னர் நீங்கள் மனிதர்களாகப் பரவியிருப்பதும் அவனது அத்தாட்சிகளில் உள்ளவையாகும். (அல்குர்அன் 30:20)
மனிதர்களே! (மரணித்த பின்) எழுப்பப்படுவதில் நீங்கள் சந்தேகத்தில் இருந்தால் (அறிந்து கொள்ளுங்கள்) நிச்சயமாக நாம்தான் மண்ணிலிருந்தும், பின்னர் இந்திரியத் துளியிலிருந்தும், பின்னர் (கருவறைச் சுவரில்) ஒட்டிக் கொள்ளக் கூடியதிலிருந்தும், பின்னர் சதைப்பிண்டத்திலிருந்தும் உங்களைப் படைத்தோம்… (அல்குர்ஆன் 22:5, மேலும் படிக்க, 40:67)
(நம்பிக்கையாளரான) அவரது தோழர் இவருடன் உரையாடிக் கொண்டிருக்கும் போது, ”உன்னை மண்ணாலும், பின்னர் இந்திரியத் துளியாலும் படைத்து, பின்னர் உன்னை ஒழுங்குற அமைத்தவனையா நீ நிராகரிக்கின்றாய்” என்று இவரிடம் கேட்டார். (அல்குர்ஆன் 18:37)
மனித இனத்தின் முதல் மனிதர் மண்ணால் வடிவமைக்கப்பட்டுப் படைக்கப்பட்டார். ஆனால், முதல் மனிதரைத் தவிர மற்ற மனிதர்கள் எவரும் நேரடியாக மண்ணால் படைக்கப்படவில்லை. அப்படியிருக்க மேற்கண்ட 6:2, 11:61, 30:20, 22:5, 40:67 ஆகிய வசனங்கள் ”உங்களை மண்ணில் இருந்து படைத்தோம்” என்று பன்மையிலும், 18:37வது வசனம் ”உன்னை மண்ணில் இருந்து படைத்தான்” என்று ஒருமையிலும் கூறுவது சரியா? என்ற சந்தேகம் எழலாம். கீழ்காணும் வசனங்களில் இதற்கான விளக்கம் பெறலாம்.
மனிதர்களே! உங்களை ஒரே ஆத்மாவிலிருந்து படைத்த உங்கள் இறைவனை அஞ்சிக் கொள்ளுங்கள். அவரிலிருந்து அவரது துணையைப் படைத்தான். அவ்விருவரிலிருந்து அநேக ஆண்களையும் பெண்களையும் பரவச் செய்தான்… (அல்குர்ஆன் 4:1 மேலும் படிக்க, 7:89, 49:13 வசனங்கள்)
முதல் மனிதரிலிருந்தே மனித இனப் பெருக்கம் துவங்குவதால் முதல் மனிதரின் வழித் தோன்றல்களில் ஒவ்வொரு மனுஷன் மனுஷியிடமும் ஆதி தந்தையின் மூலச்சத்து இருக்கும் என்பதே இதன் பொருளாகும்.
அடுத்த ஐயங்களுக்கான விளக்கங்கள் தொடர்ந்து பதிவாகும், இன்ஷா அல்லாஹ்…
குர் ஆனில் முரண்பாடுகளா? (பகுதி-3) >>
<< குர்ஆனில் முரண்பாடுகளா? (பகுதி-1)