அல்லாஹ் என்னை மன்னிப்பானா?

Share this:

அஸ்ஸலாமு அலைக்கும்.

கேள்வி:-

நான் ஒரு முஸ்லிமாக இருந்துகொண்டு சாராயம் குடிக்கிறேன்; விபச்சாரம் செய்கிறேன். எனக்கு அதிலிருந்து பாவமன்னிப்பு கிடைக்குமா? தயவுசெய்து சொல்லுங்களேன். அவற்றிலிருந்து விலக எனக்கு என்ன வழியுள்ளது? எல்லாம் வல்ல அல்லாஹ் என்னை மன்னிப்பானா?.

– சகோதரர் முஹம்மது.

வ அலைக்குமுஸ்ஸலாம் வரஹ்,

இந்தப் புனித மாதம் உங்களுடைய வாழ்க்கையில் நல்ல மாற்றங்களை உண்டாக்கட்டும் எனும் உளமார்ந்த பிரார்த்தனையோடு தங்கள் கேள்விக்கான பதில்:

பாவங்களைத் தொடர்ந்து செய்துகொண்டு, “கருணையாளானான அல்லாஹ் என்னை மன்னிப்பான்” என்ற அலட்சியமான போக்கைக் கைவிட்டு,  “அல்லாஹ்வின் உதவியோடு பாவங்களிலிருந்து நான் மீளப்போகிறேன்” எனும் உறுதியான நிய்யத்தை உள்ளத்தின் பதித்துக்கொண்டு அயராது முயல்வீர்களாயின் பாவங்களிலிருந்து நீங்கள் மீள்வது திண்ணம் இன்ஷா அல்லாஹ்!

அல்லாஹ்வின் வசனங்களை முதலில் உங்கள் உள்ளத்தில் உறுதியுடன் பதித்துக் கொள்ளுங்கள்:

“மேலும், விபச்சாரத்தை நீங்கள் நெருங்காதீர். நிச்சயமாக அது மனக்கேடாதாகவும், தீய வழியாகவும் இருக்கிறது” (அல்குர்ஆன் 17:32).

அடுத்து, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறும் எச்சரிக்கையையும் கவனத்தில் கொள்ளுங்கள்:

“போதைப் பொருள் அனைத்தும் ஹராம்” (நபிமொழி).

இஸ்லாத்தின் பார்வையில் நீங்கள் செய்துகொண்டிருந்தவை பாவமான செயல்களாகும். அதோடு அல்லாஹ் விதித்த வரம்புகளை மீறி, நம்மைப் படைத்த இறைவனை அலட்சியப்படுத்துவதோடு, தனக்குத் தானே தீங்கிழைத்துக் கொள்வதுமாகும்!

நீங்கள் திருமணம் ஆகாதவராக இருந்தால் மணமுடித்துக் கொள்ளுங்கள்; விபச்சாரத்திலிருந்து விடுதலை பெறுவீர்கள். போதைப் பழக்கம் உள்ளவராக இருந்தால் போதைப் பொருளை இஸ்லாம் ஹராமாக்கியுள்ளது என்பதை இறையச்சத்துடன் நெஞ்சாரா ஏற்றுக்கொண்டால் குடிப்பழக்கத்திலிருந்தும் முற்றாக விலகிக்கொள்ளலாம்.

உங்களுடைய பிரச்சினைகளுக்கு ஒரே தீர்வு, கறந்த பால் மீண்டும் மடிபுகாத தவ்பாவாக இருக்கவேண்டும். அதாவது “நான் இதுவரை செய்துவந்த பாவங்களை மீண்டும் செய்யமாட்டேன்” எனும் அசையாத நம்பிக்கையுடன் கூடிய தவ்பா. அடுத்து, “நான் இதுவரை செய்த பாவங்களை, கருணையாளன் அல்லாஹ் மன்னிப்பான்” எனும் அல்லாஹ்வின் அருளின் மீது உறுதியான நம்பிக்கை. ஏனெனில், எல்லாம் வல்ல அல்லாஹ் தனக்கு இணைவைக்கும் பாவத்தைத் தவிர – (பிறருக்கு அநீதி இழைத்தப் பாவத்தையும் தவிர) அனைத்துப் பாவங்களையும் மன்னிக்கிறேன் என்று வாக்களித்திருக்கின்றான்.

நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணை கற்பிக்கப்படுவதை மன்னிக்கவே மாட்டான். அது அல்லாதவற்றைத் தான் நாடியவர்களுக்கு அவன் மன்னிப்பான். அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பவர் மிகப் பெரும் பாவத்தையே கற்பனை செய்துவிட்டார் (அல்குர்ஆன் 4:48, 116).

…அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கை இழப்பவர்கள் நிராகரிக்கும் கூட்டத்தினர்தாம் (அல்குர்ஆன் 12:87).

அல்லாஹ் அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாவான். அல்லாஹ்வின் கருணைக்கு நிகராக எதையும் ஒப்பிட்டுச் சொல்ல முடியாத அளவுக்கு அவனின் கருணை எவராலும் அளவிட முடியாதது. அல்லாஹ் தன் அடியார்கள் மீது வைத்திருக்கும் அன்பு – கருணை இவை குறித்து மனிதர்களுக்குப் புரிகின்ற உதாரணமாக தாய்மையின் அன்பைவிட மேலானது என்ற நபி (ஸல்) அவர்கள் குறிப்பிடுகிறார்கள்:

(ஹவாஸின் குலத்தைச் சேர்ந்த) கைதிகள் சிலர் நபி(ஸல்) அவர்களிடம் வந்தார்கள். அவர்களிடையே இருந்த ஒரு பெண்ணின் மார்பில் பால் சுரந்தது. அவள் பாலூட்டுவதற்கு(த் தன் குழந்தையைத் தேடினாள்) குழந்தை கிடைக்கவில்லை. (எனவே), கைதிகளில் எந்தக் குழந்தையைக் கண்டாலும், அதை (வாரி) எடுத்து(ப் பாலூட்டினாள். தன் குழந்தை கிடைத்தவுடன் அதை எடுத்து)த் தன் வயிற்றோடு அணைத்துப் பாலூட்டலானாள். அப்போது எங்களிடம் நபி(ஸல்) அவர்கள், “இந்தப் பெண் தன் குழந்தையை தீயில் எறிவாளா? சொல்லுங்கள்!” என்றார்கள். நாங்கள், “மாட்டாள்; எந்நிலையிலும் அவளால் எறிய முடியாது” என்று சொன்னோம். அப்போது இறைத்தூதர்(ஸல்), “இந்தக் குழந்தையின் மீது இவளுக்குள்ள அன்பைவிட அல்லாஹ் தன் அடியார்களின் மீது மிகவும் அன்பு வைத்துள்ளான்” என்று கூறினார்கள். அறிவிப்பாளர் உமர் இப்னு கத்தாப் (ரலி) (நூல்கள் – புகாரி 5999, முஸ்லிம் 5315).

மேலும், அல்லாஹ்வின் கருணை பற்றி இறைத்தூதர் (ஸல்) அவர்கள் குறிப்பிடும்போது,

“எவருடைய நற்செயலும் அவரை சொர்க்கத்தில் ஒருபோதும் நுழைவிக்காது (மாறாக, அல்லாஹ்வின் தனிபெரும் கருணையாலேயே எவரும் சொர்க்க புகமுடியும்)” என்று கூறினார்கள்.

மக்கள், “தங்களையுமா (தங்களின் நற்செயல் சொர்க்கத்தில் நுழைவிப்பதில்லை), இறைத்தூதர் அவர்களே?” என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள், “(ஆம்) என்னையும்தான், அல்லாஹ் (தன்னுடைய) கருணையாலும் அருளாளலும் என்னை அரவணைத்துக் கொண்டால் தவிர” என்று கூறிவிட்டு, “எனவே, நீங்கள் நேர்மையோடு (நடு நிலையாகச்) செயல்படுங்கள். நிதானமாக நடந்துகொள்ளுங்கள். உங்களில் எவரும் மரணத்தை விரும்பிட வேண்டாம். ஒருவர் (இயல்பில்) நல்லவராக இருப்பார், அவர் (உயிர் வாழ்வதன் மூலம்) நன்மையை அதிகமாக்கிக் கொள்ளக்கூடும். அல்லது (தீயவர்களின் நட்பால் இடையில்) தீயவராகி இருப்பார், அவர் (உயிர் வாழ்வதால்) மனம் திருந்தக்கூடும்” என்று கூறினார்கள். அறிவிப்பாளர் அபூஹுரைரா (ரலி) (நூல்கள் – புகாரி 5673, முஸ்லிம் 5423).

அல்லாஹ்வின் அன்பு – கருணை மற்றும் அடியார்களின் பாவங்களை மன்னிக்கும் இறைத்தன்மை பற்றி இங்கு எழுதியிருப்பது மிக மிகக் குறைவு. பாவம் செய்தபின் அதற்கான மன்னிப்பைக் கோரி, இறையச்சத்தால் அழுது கையேந்தி பிரார்த்திப்பதை இறைவனுக்கும் இறையடியானுக்குமுள்ள நெருக்கமாகும்.

எவ்வளவு பாவங்கள் செய்திருந்தாலும் அவற்றை மன்னித்திட அல்லாஹ் விரும்புகிறான் என்றிருக்க, அல்லாஹ்வின் மன்னிக்கும் தன்மையின் நம்பிக்கை இழப்பது அல்லாஹ்வை முறையாக நம்பியதாகாது. ஆகவே, விபச்சாரம் செய்துவிட்டேன். குடிப்பழக்கதிலிருக்கிறேன் என்னை அல்லாஹ் மன்னிப்பானா? என்கிற நம்பிக்கையற்ற பேச்சுக்கே இடமில்லை.

தமக்குத்தாமே (அநியாயம் செய்து) வரம்பு மீறிய என் அடியார்களே! நீங்கள் அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கையிழந்துவிட வேண்டாம். நிச்சயமாக அல்லாஹ் அனைத்துப் பாவங்களையும் மன்னிப்பான். நிச்சயமாக அவன் மிக்க மன்னிப்பவன், நிகரற்ற அன்புடையவன் என (நபியே) நீர் கூறுவீராக! (அல்குர்ஆன் 39:53).

தவ்பாவைப் பற்றிய நமது பதிவையும் கட்டாயம் படித்துக்கொள்ளுங்கள் (www.satyamargam.com/250). அல்லாஹ்வின் அருளும் மன்னிப்பும் பெருகி வழியும் மாதமாகிய இந்த ரமளானில் உங்களுடைய தவ்பா எனும் பாவமீட்சியை அவனிடம் அழுது கேளுங்கள். நிச்சயம் நீங்கள் பாவங்களிலிருந்து விலகுவதற்கு அவன் அருள் புரிவான், இன்ஷா அல்லாஹ்.

(இறைவன் மிக்க அறிந்தவன்).


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.