ஐயம்: அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்…
அன்புச் சகோதரர்களே,
நான் சீனாவில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில் வேலை செய்கிறேன். இந்த இடத்தில் முஸ்லிமாக நான் மட்டுமே உள்ளேன். தொடர்ந்து மூன்று ஜுமுஆத் தொழுகைகளை விட்டால், அவர் முஸ்லிமாகத் தொடர இயலாது என்று சமீபத்தில் நான் அறிந்தேன். ஆனால், நான் இங்கு வெள்ளிக்கிழமை அன்று தனியாக லுஹர் தொழுகிறேன். எனக்கு இதற்கான பதிலைத் தயவுசெய்து அனுப்பி வையுங்கள். வஸ்ஸலாம்.
மின்னஞ்சல் வழியாக சகோதரர்: mohideen s.fareed
தெளிவு: வ அலைக்குமுஸ்ஸலாம் வரஹ்…
"நம்பிக்கை கொண்டோரே! வெள்ளிக்கிழமையில் தொழுகைக்காக அழைப்பு விடுக்கப் பட்டால், வியாபாரத்தை விடுத்து, அல்லாஹ்வை நினைவுகூர விரைந்து செல்லுங்கள். நீங்கள் அறிந்து கொள்பவர்களாயின் அதுவே உங்களுக்கு நன்மை பயப்பதாகும்" (அல்குர்ஆன் 62:9)
அன்புச் சகோதரர் ஃப்ரீத்,
அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக! இறைவணக்கத்தின் மீதான உங்கள் பற்றுதலையும் அல்லாஹ் அதிகமாக்கட்டும்!
''மக்கள் ஜுமுஆக்களைக் கைவிடுவதிலிருந்து விலகியிருக்கட்டும்! அல்லது அவர்களின் இதயங்கள் மீது அல்லாஹ் முத்திரை பதித்துவிடுவான்! அவர்கள் அலட்சியவாதிகளில் சேர்ந்துவிடுவர்!'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொற்பொழிவு மேடையில் நின்றபடி கூறியதை நாங்கள் கேட்டோம்.
அறிவிப்பவர்கள்: அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அபூஹுரைரைரா (ரலி) (நூல்: முஸ்லிம், 1570)
வெள்ளிக்கிழமை சிறப்புத் தொழுகையைத் தவறவிடக்கூடாது என்று கண்டிக்கும் அறிவிப்புகளில் இதுவே கடுமையான அறிவிப்பாக உள்ளது. ஓர் ஊரில் பள்ளிவாசல் இருந்து அங்குத் தொழுகைக்கான அழைப்பை ஏற்படுத்தி, சிறப்பு ஜுமுஆத் தொழுகைக்காக அழைப்பு விடுத்தால் அங்குச் சென்று தொழுவதற்கான வசதியைப் பெற்றவர் பள்ளிவாசலுக்குச் சென்று ஜுமுஆத் தொழுகையில் கலந்து கொள்ளாமல் – நோய், முதுமை, இயலாமை போன்ற – தக்க காரணமின்றி அலட்சியப்படுத்துபவரையே மேற்கண்ட நபிவழி அறிவிப்பு எச்சரிக்கை விடுக்கின்றது.
''அலட்சியமாக மூன்று ஜும்ஆக்களை யார் விட்டுவிட்டாரோ அவரது உள்ளத்தில் அல்லாஹ் முத்திரையிட்டு விடுகிறான்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( நூல்: திர்மிதீ 460. அபூதாவூத் 888)
மூன்று ஜும்ஆக்களை விட்டவரின் நிலையைப்பற்றி திர்மிதீ, அபூதாவூத் ஆகிய நூல்களில் இடம்பெறும் மேற்கண்ட அறிவிப்புக் குறித்து இருவித சர்ச்சைகள் உள்ளன. ஒரு வாதத்துக்காக இந்த ஹதீஸை ஆதாரமாகக் கொண்டாலும், அது உங்களுக்குப் பொருந்தாது!
ஏனெனில், சிறிய கிராமத்தில் ஒற்றை முஸ்லிமாகத் தனித்து வாழ்ந்துவரும் உங்கள்மீது கூட்டுத் தொழுகை மற்றும் ஜுமுஆத் தொழுகையை மார்க்கம் கடமையாக்கவில்லை. ''வெள்ளிக்கிழமையில் தொழுகைக்காக அழைக்கப்பட்டால்'' என்ற (62:9) இறைவாக்கு, தொழுகைக்கான அழைப்பே இல்லாத இடத்தில் இருக்கும் உங்கள் மீது ஜுமுஆத் தொழுகையைச் சுமத்திடவில்லை.
ஜுமுஆத் தொழுகையை எவ்விதத்திலும் அடைய முடியாமல் தனி முஸ்லிமாக வாழும் உங்கள் மீது கூட்டுத் தொழுகை மற்றும் ஜும்ஆத் தொழுகை எதுவும் கடமையில்லை. நீங்கள் ஐவேளைத் தொழுகைகளையும் தனித்துத் தொழுது கொள்வதே போதுமானது. இதனால் உங்கள் மீது எவ்வித குற்றமுமில்லை!
ஆனால் அதே நேரம், முஸ்லிம்களே இல்லாத ஒரு பகுதியில் தனி முஸ்லிமாக வாழும் உங்கள் மீது உங்களைச் சுற்றி இருப்பவர்களிடம் இஸ்லாத்தின் போதனைகளை அழகிய முறையில் எடுத்துச்சொல்லி அவர்களை இஸ்லாத்தின் பால் அழைக்கும் பாரிய பொறுப்பு உள்ளதை நினைவில் கொள்ளுங்கள்.
"… எந்த ஓர் ஆத்மாவின் மீதும் அது தாங்கிக் கொள்ள முடியாத சுமையை அல்லாஹ் சுமத்துவதில்லை …" (அல்குர்ஆன் 2:286).
(இறைவன் மிக்க அறிந்தவன்)