ஷியா பெண்ணை மணக்க அனுமதியுண்டா?

Share this:

ஐயம்:  நான் வளைகுடாவில் பணிபுரிகிறேன். ஓர் ஏழைப்பெண்ணை மணக்க விரும்புகிறேன். ஆனால் அவள் ஷியாவாக உள்ளதால் ஷியாக்களைப் பற்றி குர்ஆன் என்ன கூறுகிறது என்று அறிய விரும்புகிறேன். என்னுடைய கருத்துப்படி அல்லாஹ்வையும் ரஸூலையும் ஏற்றுக்கொண்ட அனைவரும் முஸ்லிம்களே. தயவு செய்து உடன் பதிலளிக்கவும். – முஹம்மத் (மின்னஞ்சல் மூலம் பெறப்பட்ட வாசகர் ஒருவரின் கேள்வி)

தெளிவு:

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்…

 

இஸ்லாத்தைத் தெளிவாக விளங்கி பின்பற்றவேண்டும் என்ற நல்லெண்ணத்தோடு மேற்கண்ட கேள்வியைக் கேட்ட சகோதரர் முஹம்மத் அவர்களுக்கு இறைவனின் அருள் உண்டாகட்டுமாக. அத்துடன் ஏழைப்பெண்ணை மணக்க முடிவெடுத்திருக்கும் இவரின் நல்லெண்ணத்திற்கு தக்க நற்கூலியையும் ஏக இறைவன் அல்லாஹ் வழங்குவானாக.

 

திருமணத்தைக் குறித்து நபி(ஸல்) அவர்கள் கூறுகையில்,

 

تنكح المرأة لأربع لمالها ولحسبها وجمالها ولدينها فاظفر بذات الدين تربت يداك

 

அதாவது "ஒரு பெண் நான்கு விஷயங்களுக்காக மணம் முடிக்கப்படுகின்றாள். 1. அவளின் செல்வத்திற்காக,  2. அவளின் குடும்பப் பாரம்பரியத்திற்காக, 3. அவளின் புற அழகிற்காக, 4. அவளின் மார்க்க அறிவிற்காக. இவற்றில் மார்க்க அறிவை நீ தேர்ந்தெடுத்து ஈடேற்றம் அடைந்து கொள்" என்று அறிவுறுத்தியுள்ளார்கள்.

 

அந்த அடிப்படையில் சகோதரர் முஹம்மத், தான் மணமுடிக்க தேர்வு செய்துள்ள பெண்ணின் மார்க்க விஷயத்தைக் குறித்து ஆராய முற்பட்ட இச்செயல் வரவேற்கத்தக்கதாகும்.

 

சகோதரரின் கேள்வி ஷியாக்களைக் குறித்து திருக்குர்ஆனில் என்ன கூறப்படுகிறது என்பதாகும். இதற்கு நேரடியான பதில், ஷியாக்களைக் குறித்து திருக்குர்ஆனில் எதுவுமே கூறப்படவில்லை என்பது தான். எனினும் இஸ்லாத்தில் பல்வேறு பிரிவுகள் தோன்றும் என்றும் அவ்வாறு பிரிந்து விடாமல் அனைவரும் ஒன்றுபட்டு இருக்க வேண்டும் எனவும் பல்வேறு திருக்குர்ஆன் வசனங்கள் மற்றும் நபிமொழிகள் அறிவுறுத்துகின்றன.

 

இன்று உலகில் இஸ்லாமியர்கள் பெருவாரியாக "ஷியா" மற்றும் "சுன்னத் வல் ஜமாஅத்" என்ற இரு பெரும் பிரிவுகளின் மூலம் அடையாளப்படுத்தப்படுகின்றனர். இவர்களின் கொள்கை மற்றும் செயல்பாடுகளைக் குறித்து ஆராயமுற்படின் அவற்றை பக்கங்களுக்குள் அடக்கவியலாது. ஏனெனில் இவ்விரு பெரும் பிரிவுகளில் ஒன்றுமில்லா சிறு விஷயங்களிலிருந்து பெரிய விஷயங்கள் வரை பலவற்றின் பெயரைக் கூறி பிரிந்து காணப்படுகின்றன. இவற்றில் எது சரி என அடையாளம் காணப்படுவதற்கான ஒரே அளவுகோல், "நானும் எனது சஹாபாக்களும் இன்று எவ்வாறு வாழ்கின்றோமோ அவ்வாறு வாழ்கின்றவர்களே சுவர்க்கம் செல்வர்" என்ற நபி(ஸல்) அவர்களின் அமுதமொழி மட்டுமேயாகும்.

 

இங்கு சகோதரர் முஹம்மத் அவர்கள் எழுப்பியுள்ள கேள்வியின் நோக்கம், ஷியா பிரிவில் உள்ள பெண்ணை திருமணம் முடிப்பது கூடுமா? என்பதாகும்.

 

"ஷியாக்களைத் திருமணம் செய்வதற்கு" நாமறிந்தவரை மார்க்கத்தில் எவ்வித தடையும் இருப்பதாக தெரியவில்லை. "ஷியாக்களை திருமணம் செய்வது கூடாது" என்று கூறுபவர்கள், "ஷியாக்கள் கொள்கை அடிப்படையில் இஸ்லாத்தைவிட்டு வெளியேறியவர்கள்; பல நபிமொழிகளை மீறுபவர்கள்; மறுப்பவர்கள்; ஆகையால் காஃபிர்கள், இணைவைப்பவர்கள்" என்று கூறி வருகின்றனர். இன்னும் சிலர், "ஷியாக்கள் குர்ஆனை மாற்றியுள்ளார்கள்" என்றும் "அவர்களாகச் சேர்த்துக் கொண்ட வேறு ஒரு குர்ஆன் அவர்களுக்கென்றே உள்ளது" என்றும்கூட கூறுகின்றனர்.

 

ஒருவேளை இவை அனைத்துமே உண்மையாக இருந்தால் கூட ஒரு பெண்ணை திருமணம் புரிவதற்கு மார்க்கத்தில் இவை எதுவும் தடையாக இல்லை.

 

வேதம் கொடுக்கப்பட்டவர்களான யூத மற்றும் கிறிஸ்தவ பெண்களை மணக்க மார்க்கத்தில் நேரடியாக ஆதாரம் உள்ளது. இவர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட வேதங்களில் தங்களுக்கு தேவையானதை அதிகமாக சேர்த்தும், தேவையில்லை எனக் கருதியவற்றை வேதங்களில் இருந்து எடுத்து மாற்றியும் கையாடல் செய்து வேதங்களை மாற்றியவர்கள் என திருக்குர்ஆன் உறுதிப்பட எடுத்துரைக்கின்றது. எனினும் அவர்களிலுள்ள பெண்களை மணக்க இஸ்லாம் அனுமதிக்கவே செய்கின்றது எனும் பொழுது திருக்குர்ஆனில் கையாடல் செய்தவர்கள் என்ற குற்றச்சாட்டு ஷியாக்களின் மீது ஒட்டு மொத்தமாக சுமத்தினால் கூட அவர்களிலுள்ள பெண்களை மணக்க தடையாக இக்காரணத்தை கூற இயலாது.

 

எனவே இஸ்லாமிய அடிப்படையில் ஷியா பெண்களை  திருமணம் புரிவதற்குத் தடையிருப்பதாகக் கூற நாமறிந்தவரை ஆதாரங்கள் இல்லை.

 

அல்லாஹ் மிக அறிந்தவன்!


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.