ஐயம்: இஸ்லாமிய வங்கி & இஸ்லாம் அல்லாத வங்கி வீட்டுக் கடன் – அனுமதிக்கப்பட்டதா இல்லையா?
- ‘முராபஹா’, ‘முதாரபா’ போன்ற திட்டங்கள் இஸ்லாமிய வங்கியியலில் வித்தியாசமான பெயர்களில் அறியப்பட்டாலும் வட்டி போன்றே உள்ளது! இவை அனுமதிக்கப்பட்டதா? இது நம் நேசத்திற்குரிய தூதர் முஹம்மது(ஸல்) அவர்களின் வழிமுறையா? தயவு செய்து குர்ஆன் & நபிவழி மூலம் தெளிவு படுத்த வேண்டியது.
– சகோதரி உம்மு ஜைனப்
தெளிவு: கடனில் வட்டி ஏற்படாதவரை எந்த வங்கி கடன்தர முன்வந்தாலும் வாங்குவது மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டதுதான். தவணை முறையில் வீட்டுக் கடன் வாங்கும்போது தவணை கட்டத் தவறினால் அதற்கெனக் கட்டணம் வசூலிப்பது வட்டியாகும். தொடர்ந்து வாசிக்கவும்.
நீங்கள் அல்லாஹ்வுக்கு அழகிய முறையில் கடன் கொடுத்தால், அவன் அதை பன்மடங்காக்குவான். மேலும், உங்களை மன்னிப்பான். அல்லாஹ் நன்றிக்குரியவன், சகிப்புத் தன்மையுடையவன். (அல்குர்ஆன் 064:017)
அல்லாஹ் தேவையற்றவன், ஆயினும் அல்லாஹ்வுக்கு அழகிய முறையில் கடன் கொடுத்தால் அதைப் பன்மடங்காக்குவான் என்பதன் பொருள், சிரமப்படுவோருக்குக் கடன் கொடுத்து உதவுவது மிகச் சிறந்த தர்மமாகும் என மக்களுக்கு கடன் உதவி செய்வதை அல்லாஹ் தனக்குக் கடன் கொடுப்பதாகச் சொல்லி ஆர்வமூட்டுகிறான் என்பதாகும்.
கடனைத் திரும்பத் தர இயலாதோருக்கு அவகாசம் அளியுங்கள், அல்லது அவரது கடனைத் தள்ளுபடி செய்யுங்கள் என குர்ஆனும், சுன்னாவும் வழிகாட்டுகின்றன என்பதற்கான சான்றுகளை உங்களுக்கு இதற்குமுன் அளிக்கப்பட்ட விளக்கத்தில் குறிப்பிட்டிருக்கிறோம். கடனைத் தள்ளுபடி செய்வோருக்கு அல்லாஹ் தனது நிழலைத் தவிர வேறு நிழலே இல்லாத மறுமை நாளில் தனது அரியணையின் கீழே நிழலளிக்கிறான் என ஆதாரப்பூர்வ நபிமொழிகள் அறிவிக்கின்றன. எனவே கடன் கொடுப்பதும், கடன் பட்டவருக்கு அவகாசமளிப்பதும், கடனைத் தள்ளுபடி செய்வதும் மகத்தான நன்மைக்குரிய செயல் என்று அறிந்துகொள்கிறோம்.
இவை அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொண்ட தனி நபருக்காகவும், நற்செயல்கள் புரியும் குழுவிற்காகவும் சொல்லப்பட்டவை என்று எடுத்துக் கொள்ளலாம். நன்மையை நாடி அல்லாஹ்வின் அறவுரைகளைப் பின்பற்ற வேண்டுமாயின் கொடுத்த கடனைத் தள்ளுபடி செய்யுமளவிற்கு கடன் கொடுத்தவருக்கு பொருளாதார வலிமை இருக்கவேண்டும். அதாவது, கடனைத் தள்ளுபடி செய்யுமளவுக்கு கடன் கொடுத்தவரின் பொருளாதாரம் உயர்ந்திருக்க வேண்டும். அப்போதுதான் கடனைத் தள்ளுபடி செய்தாலும் அவர் பாதிக்கப்பட மாட்டார்.
இன்று விளம்பரப்படுத்தி வீட்டுக் கடன், வாகனக் கடன், மாட்டுக் கடன், ஆட்டுக் கடன் என அழைப்பதுபோல் நபி (ஸல்) அவர்களின் காலத்தில் கடனுக்காக விளம்பரப்படுத்தி அழைத்ததில்லை. அன்றைய மக்கள் கடன் வாங்கியதெல்லாம் அன்றாட வாழ்வாதாரத் தேவைக்கென வாங்கினார்கள். அதில் உணவுப் பொருட்களும் உடுத்தும் ஆடைகளும் முக்கியக் கடனாக இருந்தன. இந்தக் கடனுக்கு அவகாசம் அளிப்பதும் கடனைத் தள்ளுபடி செய்வதும் செல்வ நிலையில் சற்று உயர்ந்தவருக்கு பெரிய பாதிப்பாக இருந்ததில்லை. கடனைத் திரும்பச் செலுத்த இயலாதவருக்குப் பொருள்வளம் மிக்க செல்வந்தர்கள் பொறுப்பேற்று அந்தக் கடனை அடைக்கட்டும் எனவும் இஸ்லாம் கூறியுள்ளது.
வீட்டுக் கடனை பலதவணை முறையில் செலுத்துவது.
நான், ஸஅத் இப்னு அபீ வக்காஸ்(ரலி) அவர்களிடம் தங்கியிருந்தேன். அப்போது மிஸ்வர் இப்னு மக்ரமா(ரலி) வந்து, தம் கையை என்னுடைய தோள் புஜங்களில் ஒன்றில் வைத்தார்கள். அப்போது (அடிமையாயிருந்து) நபி(ஸல்) அவர்களால் விடுதலை செய்யப்பட்ட அபூ ராஃபிஉ(ரலி) வந்து, ‘ஸஅதே! உம்முடைய வீட்டிலுள்ள எனக்குச் சொந்தமான இரண்டு அறைகளை என்னிடமிருந்து வாங்கிக் கொள்வீராக!’ எனக் கூறினார்கள். அதற்கு ஸஅத் (ரலி) ‘அல்லாஹ்வின் மீது ஆணையாக! அவற்றை நான் வாங்க மாட்டேன்!” என்றார்கள். அருகிலிருந்த மிஸ்வர்(ரலி) அவர்கள், ஸஅத் (ரலி) அவர்களிடம் ‘அல்லாஹ்வின் மீது ஆணையாக! நீர் வாங்கிக் கொள்ளத்தான் வேண்டும்!” என்றார்கள். அப்போது ஸஅத் (ரலி), ‘அல்லாஹ்வீன் மீது ஆணையாக! தவணை அடிப்படையில் நாலாயிரம் வெள்ளிக் காசைத் தவிர உமக்கு அதிகமாகத் தரமாட்டேன்!” என்று கூறினார்கள். அதற்கு அபூ ராஃபிவு(ரலி), ‘ஐநூறு தங்கக் காசுகளுக்கு அது கேட்கப்பட்டுள்ளது; அண்டை வீட்டில் இருப்பவர் அண்மையில் இருப்பதால் அவரே அதிகம் உரிமை படைத்தவர் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதை நான் செவியுற்றிராவிட்டால் ஐநூறு தங்கக் காசுக்கு கேட்கப்பட்டதை நாலாயிரம் வெள்ளிக்காசுக்கு உமக்கு விற்க மாட்டேன்’ என்று கூறிவிட்டு ஸஅதுக்கே விற்றார். (அறிவிப்பாளர்: அம்ரிப்னு ஷரீத் (ரஹ்) நூல்: புகாரீ 2258).
அடிமைப் பெண் பரீரா (ரலி) அவர்கள் தமது விடுதலைக்காக எஜமானருக்கு …ஐந்து ஊக்கியாக்களை- ஐந்து ஆண்டுகளில் ஆண்டுக்கு ஓர் ஊக்கியாவாக தவணை முறையில் செலுத்த வேண்டியிருந்தது… (புகாரீ 2560).
தவணை முறை வியாபாரம் செய்வதும் சிறுகச் சிறுக பலதவணைகளில் கடனைத் திரும்பச் செலுத்துவதும் ஆகுமானது என்பதை மேற்கண்ட நபிவழிச் சான்றுகளிலிருந்து விளங்குகிறோம். அன்றைய தவணை கடனுக்கும், இன்றைய தவணை கடனுக்கும் விலையை நிர்ணயம் செய்வதில் வித்தியாசம் ஏற்படுகிறது. அன்று விலையை நிர்ணயித்து விட்டால் அந்தக் கடன் எத்தனை தவணைகளாக நீண்டு செலுத்தினாலும் முதலில் நிர்ணயித்த விலை செலுத்தினால் போதும். தவணைக் கடனை இப்படித்தான் இஸ்லாம் அங்கீகரித்துள்ளது.
முறையாகப் பல தவணைகள் கட்டியிருந்து, ஒரு தவணை கட்டத் தவறினால், அவருக்கு அவகாசம் வழங்க வேண்டும் என்பதே இஸ்லாத்தின் நிலைப்பாடு (அல்குர்ஆன் 002:280).
கடன் வணிகமாகிவிட்ட இன்றைய சூழ்நிலையில், வணிகமய கன்வென்ஷனல் வங்கிகள், கடன் பெற்றவர் கட்டத் தவறும் தவணைக்கு அவகாசம் தருவதில்லை. மாறாக கட்டத் தவறிய நாட்களைக் கணக்கிட்டு அதற்கும் குறிப்பிட்டத் தொகையை வசூல் செய்துவிடுகின்றன. இஸ்லாமியப் பார்வையில் இது கடனில் வட்டி.
எடுத்துக் காட்டாக:
உஸ்மான் என்பவரிடமிருந்து உமர் என்பவர் ஒரு கோடி ரூபாய்க்கு ஒரு வீடு வாங்க விரும்புகிறார். அதற்கான முழுத்தொகை உஸ்மானிடம் இல்லையென்பதால் அவர் கடன் வாங்க வேண்டிய தேவை ஏற்படுகிறது.
வணிகமய வங்கி
காட்சி 1: வட்டிக் கடன்: உமர் ஏபிசி வங்கியில் ஒரு கோடி ரூபாய் கடனாகப் பெற்று அந்தப் பணத்தைக் கொண்டு வீட்டை வாங்குகிறார். உமர் வீட்டின் உரிமையாளர் ஆகிறார். கடனுக்கு ஈடாக அவருடைய வீட்டுப் பத்திரம் வங்கியிடம் இருக்கிறது. கடனுக்குக் குறிப்பிட்ட சதவீதம் வட்டியை உமர் செலுத்த வேண்டியுள்ளது. ஒரு கோடி கடன் + தவணைகளில் செலுத்த வேண்டிய வட்டி = மொத்தத் தொகை ரூ 1.3 கோடி. உமர் ஒரு தவணையைக் குறிப்பிட்ட தேதியில் கட்டத் தவறினாலும் தாமதாகும் ஒவ்வொரு நாளுக்கும் அவர் கூடுதல் வட்டி செலுத்த வேண்டும். இதுதான் கன்வென்ஷனல் வங்கிகள் தவணைக் கடனுக்கு வட்டி வாங்கும் விதிமுறை.
இஸ்லாமிய வங்கி
காட்சி 2: வட்டிக் கடன் வேண்டாம் என்பதால் அபதா வங்கியை நாடுகிறார் உமர். அபதா வங்கி உஸ்மானிடம் விலைபேசி ஒரு கோடி ரூபாய் கொடுத்து அந்த வீட்டை அவரிடமிருந்து வாங்கிக் கொள்கிறது. இப்போது வீட்டின் உரிமையாளரான அபதா வங்கி அந்த வீட்டை உமருக்கு ரூ 1.3 கோடிக்கு விற்கிறது. வீட்டின் விலையை உமர் தவணைகளில் செலுத்தலாம். ஏதேனும் ஒரு தவணையை உமர் கட்டத் தவறினால் தாமதமாகும் நாட்களுக்கு அபதா வங்கி கூடுதல் தொகை கேட்க முடியாது. அப்படிக் கேட்டால் அது வட்டியாகி விடும். இது ‘முராபாஹா’ எனப்படும்.
ஆனால் வாடிக்கையாளர்கள் இதை ஒரு ‘சலுகை’யாகப் பயன்படுத்தி தவணைகளை வேண்டுமென்றே கட்டத்தவறினால் என்ன செய்வது? இதைச் சமாளிக்க பலவித நடவடிக்கைகளை இஸ்லாமிய வங்கிகள் மேற்கொள்கின்றன. அவற்றில் ஒன்று ஒரு குறிப்பிட்ட தொகையை ‘அபராதமாக’ விதிப்பது. இத்தொகை நாள்களின் அடிப்படையில் கணக்கிடப்படுவதில்லை. சதவீதமாகவும் கணக்கிடப்படுவதில்லை. உதாரணத்திற்கு ஒரு தவணை கட்டத்தவறினால் ரூ. 500 அபராதம் (fixed amount).
கடன் பட்ட ஒருவர் சலுகையைப் பயன்படுத்தி தவணைகளை வேண்டுமென்றே கட்டத்தவறினால் அதற்கான அபராதத் தொகை 500 ரூபாய் என்று சொன்னாலும் இதுவும் வட்டியே! தவணை கட்டத் தவறினால் மற்ற வங்கிகள் கூடுதல் வட்டி வசூலிக்கின்றன. இஸ்லாமிய வங்கிகள் நிலையான ஒரு தொகையைக் குறிப்பிட்டு குறைந்த அளவில் அபராதம் என்ற பெயரில் வசூலிக்கின்றன. இதுதான் வித்தியாசம். இந்த இடத்தில் கடனுக்கு அவகாசம் வழங்காமல் இஸ்லாத்திலிருந்து விலகி நிற்பதால் அபதா வங்கியை முழுக்க இஸ்லாமிய வங்கி என்று சொல்வதற்கில்லை.
கூடுதலாக நீங்கள் கேட்டிருக்கும் கேள்விகளுக்கான விளக்கம்.
‘முதாரபா’, ‘முஷாரகா’ ஆகியவை பெரும்பாலும் தொழில் பங்குதாரர்களிடையே ஏற்படுத்தப்படும் உடன்படிக்கைகள்.
‘முஷாரகா’ என்பது பார்ட்னர்ஷிப் (பங்காளிகள்). அனைத்து பங்குதாரர்களும் ஏற்கனவே ஒப்புக் கொண்ட விகிதாச்சார அடிப்படையில் தொழிலில் முதலீடு செய்திருப்பர்.
‘முதாரபா’ எனும் உடன்படிக்கையில் இருவகை பங்குதாரர்கள் இருப்பார்கள்: முதலீடு செய்யும் பங்குதாரர்கள் மற்றும் நிர்வாகப் பங்குதாரர்கள். (Investing partners and Working partners).
இவ்வகை உடன்படிக்கைகளில் தொழிலில் கிடைக்கும் இலாபம் ஏற்கனவே ஒப்புக் கொண்ட விகிதாச்சார அடிப்படையில் பங்குதாரர்களிடையே பங்கிடப்படுகிறது. இலாபமாயினும் செலவினங்களாயினும் நட்டமேயானாலும் ஒப்புக்கொண்ட விகிதாச்சார அடிப்படையில் பிரித்தளிக்கப்படுவதால் இவற்றில் வட்டி கலப்பதில்லை.
(இறைவன் மிக்க அறிந்தவன்)