ஒருவரைப் பார்த்து, அழகானவர் அல்லது அழகற்றவர் என்றழைக்கலாமா?

கேள்வி: ஒருவரைப் பார்த்து இவர் அழகாக இருக்கிறார், இவர் அழகற்றவராக இருக்கிறார் என்று மகிழ்ச்சியாகவோ அல்லது கோபமாகவோ கூறுவதற்கு மார்க்கத்தில் அனுமதி உள்ளதா? இப்படித் தரம்பிரிப்பதை எல்லாவற்றையும் அறிந்த அல்லாஹ் ஏற்றுக்கொள்வானா என்பதை விரிவாக விளக்கவும்.

விளக்கம்:
அழகு என்பது அல்லாஹ்வும் விரும்பக்கூடியது. அல்லாஹ்வுக்கு அழகிய பெயர்கள் உள்ளன 007:180, 017:110 என தனது அழகானப் பெயர்களை திருமறை குர்ஆனில் அறிமுகம் செய்கிறான்.

அழகான வரலாறு,

அழகிய முன்மாதிரி,

அழகிய செயலுடையவர்,

அழகிய பொறுமையை,

அழகியக் கடன்,

அழகியத் தங்குமிடம்,

அழகான குடியிருப்புகள்,

அழகாகச் சித்தரிக்கப்பட்டன,

என்று திருமறையில் பல வசனங்களில் இறைவன் அழகைச் சுட்டிக் காட்டிப் பேசுகிறான். அழகிய வீடு, அழகியப் பேச்சு, அழகான பொருள், அழகான குழந்தை, இவர் அழகாக இருக்கிறார் என்று சொல்வதில் எந்தத் தவறும் இல்லை! அப்படிச் சொல்வதை இஸ்லாம் தடை செய்யவில்லை.

ஆனால், ஒருவர் அழகில்லாமல் இருக்கிறார் என்றால் அவரைப் படைத்ததும் இறைவன் தான். அவரைக் குறை சொல்வதன் மூலம் அல்லாஹ்வின் படைப்பை நாம் குறை சொல்கிறோம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். ''காலத்தைக் குறை சொல்வதன் மூலம் ஆதமின் மகன் என்னை நோவினை செய்கிறான். காலத்தை நானே இயக்குபவனாக இருக்கிறேன்'' என்று அல்லாஹ் கூறியதாக நபிமொழியில் பார்க்கிறோம்,

அழகற்றவர்களும், உடல்  ஊனமுற்றோர்களையும் இன்ன பிற குறையுடையோர்களையும் அல்லாஹ் படைத்திருக்க அவர்களைக் குறை சொல்வது இறைவனின் படைப்பைப் பழிப்பதாகும் என்பது மட்டுமன்று, நாம் பழிப்பதும், குறை சொல்வதும் சம்பந்தப்பட்டவர்கள் அறிய நேர்ந்தால் இதைக் கேட்ட அவர்களின் உள்ளங்கள் எவ்வளவு வேதனைப்படும் என்பதையும் நம் புரிந்து கொண்டு குறை சொல்வது போன்ற தீயப் பேச்சுக்களிலிருந்து நாம் தவிர்ந்து கொள்ள வேண்டும். அதுவே அழகான செயலாகும், இறைவனுக்கும் இதுவே உவப்பாகும்.

இறைவன் மிக அறிந்தவன்.