அகீகா …!

Share this:

ஐயம்:
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்,

அகீகா கொடுக்கும் முறை பற்றி விளக்கம் தரவும்.

– சகோதரர் ஷாஜஹான். (மின்னஞ்சல் வழியாக)

தெளிவு:

வ அலைக்குமுஸ்ஸலாம் வரஹ்,

பிறக்கின்ற ஒவ்வொரு குழந்தைக்காகவும், மார்க்க ரீதியாக நிறைவேற்ற வேண்டிய செயலைச் சார்ந்தது ”அகீகா” என்பதாகும். குழந்தை பிறந்த ஏழாம் நாளில், அந்தக் குழந்தைக்காக ஓர் ஆடு அறுக்கப்பட்டு, தலைமுடி மழிக்கப்பட வேண்டும். அன்றே குழந்தைக்குப் பெயரிட வேண்டும். இதுதான் அகீகா கொடுப்பதின் முறை!

இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘பையன் (பிறந்த) உடன் ‘அகீகா’ (கொடுக்கப்படல்) உண்டு. எனவே, அவனுக்காக (ஆடு அறுத்து) ‘குர்பானி’ கொடுங்கள். அவன் (தலை முடி களைந்து) பாரத்தை இறக்கிடுங்கள்’ என்று சொல்ல கேட்டிருக்கிறேன். அறிவிப்பவர் சல்மான் இப்னு ஆமிர் (ரலி) (நூல்கள்: புகாரி 5472. நஸயீ, அபூதாவுத், இப்னுமாஜா)

குழந்தைகள் அகீகாவுக்குப் பொறுப்பாக்கப்பட்டுள்ளார்கள். ஏழாம் நாள் (பிராணி) அறுக்கப்பட வேண்டும். பெயரிடப்பட வேண்டும். தலை மழிக்கப்பட வேண்டும். என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் ஸமுரா (ரலி) (நூல் – திர்மிதீ 1559)

அகீகாவுக்கென அறுத்து பலியிடும் ஆட்டின் இறைச்சியை பங்கிடுவது குர்பானிச் சட்டம் போன்றதாகும். குர்பானி இறைச்சியின் சட்டம் அறிய,

தங்களுக்குரிய பலன்களை அடைவதற்காகவும்; குறிப்பிட்ட நாட்களில் அல்லாஹ் அவர்களுக்கு அளித்துள்ள (ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற) நாற்கால் பிராணிகள் மீது அவன் பெயரைச் சொல்(லி குர்பான் கொடுப்)பவர்களாகவும் (வருவார்கள்); எனவே அதிலிருந்து நீங்களும் உண்ணுங்கள்; கஷ்டப்படும் ஏழைகளுக்கும் உண்ணக் கொடுங்கள்.

இன்னும் (குர்பானிக்கான) ஒட்டகங்கள்; அவற்றை உங்களுக்காக அல்லாஹ்வின் அடையாளங்களிலிருந்தும் நாம் ஆக்கியிருக்கிறோம்; உங்களுக்கு அவற்றில் மிக்க நன்மை உள்ளது; எனவே (அவை உரிய முறையில்) நிற்கும் போது அவற்றின் மீது அல்லாஹ்வின் பெயரைச் சொல்(லி குர்பான் செய்)வீர்களாக; பிறகு, அவை தங்கள் பக்கங்களின் மீது சாய்ந்து கீழே விழுந்(து உயிர் நீத்)த பின் அவற்றிலிருந்து நீங்களும் உண்ணுங்கள்; (வறுமையிலும் கையேந்தாமல் இருப்பதைக் கொண்டு) திருப்தியாய் இருப்போருக்கும், யாசிப்போருக்கும் உண்ணக் கொடுங்கள் – இவ்விதமாகவே, நீங்கள் நன்றி செலுத்தும் பொருட்டு அவற்றை உங்களுக்கு வசப்படுத்திக் கொடுத்திருக்கிறோம். (அல்குர்ஆன் 22:28, 36)

குர்பானி இறைச்சியை உண்ணலாம், தர்மமும் செய்யலாம்!

ஏழாம் நாள் பெயரிடப்பட வேண்டும் என்று நபிமொழியிலிருந்து அறிந்தாலும், பிறந்த அன்றும் குழந்தைக்குப் பெயர் சூட்டலாம். மர்யம் (அலை) பிறந்த அன்று அவரது தயார் அவருக்கு மர்யம் என்று பெயரிட்டதாக குர்ஆன் வசனம் கூறுகிறது.

அவர் (தனது எதிர்பார்ப்புக்கு மாறாக) அதைப் பிரசவித்தபோது ”என் இறைவனே! நிச்சயமாக நான் பெண் குழந்தையையே பிரசவித்து விட்டேன்” என்றார். அவர் பிரசவித்ததை அல்லாஹ் நன்கறிந்தவன். மேலும் ஆண், பெண்ணைப் போலல்ல. இன்னும் நான் அதற்கு மர்யம் என்று பெயரிட்டுள்ளேன். அவளையும் அவளது சந்ததியினரையும் விரட்டப்பட்ட ஷைத்தானி(ன் தீங்குகளி)ருந்து நிச்சயமாக உன்னிடத்தில் நான் பாதுகாவல் தேடுகிறேன் (என்றார்) (அல்குர்ஆன் 3:36)

ஆண் குழந்தை சார்பில் சமவயதுடைய இரண்டு ஆடுகளும், பெண் குழந்தை சார்பில் ஓர் ஆடும் (அறுக்க வேண்டும்) என்று நபி (ஸல்) அவர்கள் உத்தரவிட்டார்கள். அறிவிப்பவர் ஆயிஷா (ரலி) (நூல்கள்: திர்மிதீ 1549, இப்னுமாஜா)

ஹஸன் (ரலி) ஹுஸைன் (ரலி) சார்பாக (ஒவ்வொருவருக்கும்) ஓர் ஆட்டை நபி (ஸல்) அவர்கள் அகீகா கொடுத்தார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) (நூல்: அபூதாவூத்)

அறியாமை காலத்தில் எங்களுக்கு ஆண் குழந்தை பிறந்தால் ஆட்டை அறுத்து குழந்தையின் தலை முடியை நீக்கி ஆட்டின் இரத்தத்தைத் தலையில் தடவுவோம். (அல்லாஹ் எங்களுக்கு) இஸ்லாத்தைத் தந்தபோது ஓர் ஆட்டை அறுப்போம். குழந்தையின் தலை முடியை நீக்கி, தலையில் குங்குமப் பூவைப் பூசுவோம். அறிவிப்பவர்: புரைதா (ரலி) (நூல்கள்: நஸயீ, அஹ்மத்)

ஆண் குழந்தைக்கு இரண்டு ஆடுகளும், பெண் குழந்தைக்கு ஓர் ஆடும் என்றும் அறிவிப்புகள் உள்ளது போல், ஆண் குழந்தைக்கு ஓர் ஆட்டை அகீகா கொடுத்ததாவும் அறிவிப்புகள் உள்ளன. இரு விதமாகவும் செய்து கொள்ளலாம்.

ஏழாம் நாள் அகீகா கொடுப்பது சம்பந்தமாக வரும் அறிவிப்புகள் தவிர, 14, 21ம் நாள் அகீகா கொடுக்கலாம் என வரும் அறிவிப்புகளும், குழந்தையின் தலை முடி இறக்கி, முடியின் எடைக்கு எடை வெள்ளியை தர்மம் செய்யவேண்டும் என்று வரும் அறிவிப்புகளும் பலவீனமானவை!

(இறைவன் மிக்க அறிந்தவன்)


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.