அநியாயக்கொலைகள் பற்றி இஸ்லாம்!

பரபரப்பான உலகின் இன்றைய சூழலில் தினசரி பத்திரிக்கை, வானொலி, தொலைக்காட்சி மற்றும் இணைய தளங்களின் செய்திகளில் போர் மற்றும் வன்முறைக்கலவரங்களில் பலியாகும் உயிர்களின் பட்டியலே முதன்மை வகிக்கின்றது. இன்று மனிதம் என்பது மதிப்பற்ற செல்லாக் காசாக்கப்பட்டு வன்முறை தாக்குதல்காளின் மூலமாக மனித உயிர்கள் அனுதினமும் அழிக்கப்படுகிறது. அதிலும் வன்முறைத் தாக்குதலில் பலியாகுபவர்கள் இத்தகைய சம்பவங்களுக்குச் கொஞ்சமும் சம்பந்தப்படாத சிறுவர்கள், பெண்கள், வயோதிகர்கள் போன்றவர்களே!.


மனித நேயமற்று அநியாயமாக இப்படிக் கொலை செய்யப்படும் உயிர்கள் பற்றி இஸ்லாம் என்ன சொல்கிறது?

போரில் கலந்து கொள்ளும் பெண்களையும் சிறுவர்களையும் கூட கொலை செய்யப்படுவதைத் தடுத்த நபி(ஸல்) அவர்கள் இது பற்றி என்ன சொல்லியிருப்பார்கள்? என்ற கேள்விகள் ஆங்காங்கே எழாமலில்லை.

(மறுமையில்) மனிதர்களிடயே தீர்ப்புக் கூறப்படுபவற்றில் முதன்மையானது(கொலை செய்த) இரத்தம் பற்றித்தான் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்

அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) ஆதார நூல்கள் : புகாரி-6533, முஸ்லிம்-3178, திர்மிதி-1316, நஸயீ-3926, இப்னுமாஜா-2605, அஹ்மத்-3492.

மறுமை நாளில் மனிதர்களிடையே நீதிபதியான அல்லாஹ் விசாரணையைத் துவங்கும் போது தனக்குச் செய்ய வேண்டிய கடமைகளில் “தொழுகை” பற்றியே முதலில் கேட்பான்.

மனிதன் மனிதர்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளில் “கொலை” பற்றியே முதலில் விசாரிப்பான்.

இவ்விசாரணை பற்றி அபூஹூரைரா(ரலி) அறிவிக்கும் மற்றொரு ஹதீஸில் “கொலை செய்யப்பட்டு இவ்வுலகில் இறந்தவன், தன் தலையைக் கையில் தூக்கி வைத்துக்கொண்டு, இறைவா! இன்ன மனிதன் என்னை அநியாயமாகக் கொலை செய்து விட்டான். அவனிடம் காரணம் கேள் என்று கூறுவான்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

“இவ்வுலகில் யாராவது அநியாயமாக ஒருவரைக் கொலைச் செய்தால் அது இவ்வுலகிலுள்ள அனைத்து உயிர்களையும் கொன்றதற்கு சமமாகும்” என்ற நபி(ஸல்) அவர்களின் கூற்று அநியாயமாக உயிர்களைக் கொலை செய்யும் ஒவ்வொருவருக்கும் அளிக்கும் தாக்கீதாகும்.

இவ்வுலக நீதிமன்றத்தில் பொய் சாட்சியங்களை உண்மை சாட்சியங்களாக்கி ஒருவன் தன்னைக் குற்றமற்றவன் என்று உலக அரங்கிற்கு முன் கூறித் தப்பித்துவிடலாம். அல்லது உலக ஊடகங்கள் கண்களில் மண்ணைத் தூவி மறைத்து தாங்கள் புரியும் அநியாயக் கொலைகள் உலகறியா வண்ணம்  மறைத்து விடலாம். ஆனால் மறுமையிலோ இதற்கு வாய்ப்பே இல்லை. ஏனெனில் பாவங்களைச் செய்த உடல் உறுப்புக்களே முன் வந்து சாட்சி கூறி தவறை ஒப்புக்கொள்ளும்.

பிற உயிர்களிடத்தில் இரக்கம் கொள்ளாதவர் மீது இறைவன் இரக்கம் கொள்ளமாட்டான் என்ற நபி மொழிக்கேற்ப, மனித உயிர்களைப் பறிக்கும் அளவு கொலையுணர்வு கொண்டவர்களாக எவரும் இருக்கக்கூடாது என்பதே நபி (ஸல்) அவர்களின் போதனையாகும்.

-அபூ ஸாலிஹா