இஸ்லாத்தில் பொறுமை

Share this:

வெகு சொற்பமாகவே சிலரிடத்தில் காணப்படும் “பொறுமை” என்ற இக்குணம் பலருக்கு வெறும் வார்த்தையாகவே உள்ளது. பொறுமை என்பது இறைவனிடத்தில் இருந்து வருகின்ற ஓர் அருள் (ரஹ்மத்) ஆகும். பொறுமைக்கெதிரான குணங்கள் “உணர்ச்சிவசப்படுதல்” அல்லது “கோபம் கொள்ளுதல்” என்பதை நன்கு அறிந்திருந்தாலும், நடைமுறையில் இவற்றிற்கே பலர் அடிமையாக உள்ளனர்.

மனிதனுக்கு ஏற்படும் பல துன்பங்களுக்கு மூல காரணம் இக்கோபம் தான். இன்று உலகெங்கிலும் நடக்கும் அநியாய சண்டை, சச்சரவுகள் மற்றும் பேரிழப்புகளுக்குக் காரணம் இக்கோபமே!

காலத்தின் மீது சத்தியமாக! நிச்சயமாக மனிதன் நஷ்டத்தில் இருக்கின்றான்! ஆயினும், எவர்கள் ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்து, சத்தியத்தைக் கொண்டு ஒருவருக்கொருவர் உபதேசம் செய்து, மேலும் பொறுமையைக் கொண்டும் ஒருவருக்கொருவர் உபதேசிக்கிறார்களோ அவர்களைத் தவிர (அவர்கள் நஷ்டத்திலில்லை) எனும் அல்குர்ஆனின் (103:1-3) திருவசனத்தின் மூலம் இறைவன் உணர்த்தும் விஷயம் என்னவென்று நாம் சிந்தித்ததுண்டா?

இறைநம்பிக்கையுடன் நற்காரியங்களைச் செய்வது, சத்தியத்தைக் கொண்டும், பொறுமையைக் கொண்டும் நல் உபதேசம் செய்வது ஆகிய குணங்களை இறைவன் இவ்வசனத்தின் மூலம் உணர்த்துகின்றான்.

இவ்வுலகத்தில் அமைதியை விரும்பும் ஒரு மனிதன் மேற்கண்ட இவற்றைச் சரியான முறையில் கடைபிடித்தால் ஏற்படும் உலக அமைதிக்கான அடிப்படை விதிகளை இறைவன் காலத்தின் மீது சத்தியமிட்டு கூறுகிறான். அத்துடன், இம்மை, மறுமை எனப்படும் ஈருலகிலும் நஷ்டங்களைத் தவிர்க்கும் சிறந்த வழிகளையும் தெளிவுபடுத்துகிறான்.

நிச்சயமாக ஷைத்தான் மனிதனின் இரத்த நாளங்களில் ஓடுகிறான் (சஹீஹ் புஹாரி, முஸ்லிம்) என்பதை அறிவித்த இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கோபத்தைத் தடுக்க இறைவனிடத்தில் பாதுகாப்புத் தேடும் முறையையும் கற்றுத் தந்திருக்கிறார்கள்.

“ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு” என்பது தமிழ் மக்களிடையே வழக்கில் உள்ள சொல்லாகும். கோபத்தால் புத்தி பேதலித்து சிந்திக்காமல் செயல்படுவதனால் வரும் பின் விளைவுகள் வருத்தங்களாக, இழப்புகளாக முடிவதைக் காண்கிறோம்.

உதாரணமாக ஒருவன் ஒரு பெண்ணைப் பார்த்துத் தவறாக எண்ணத்துடன் உணர்ச்சி வசப்படுவானாயின் பின் விளைவுகளைப் பற்றி அக்கணத்தில் சிந்திக்காமல் பலாத்காரத்திற்குத் துணிந்து விடுகிறான். தேர்விலோ, அல்லது வேலை வாய்ப்புகளிலோ தோல்வியைத் தழுவும் ஒருவன் தவறுகளுக்கான காரணங்களைச் சிந்திக்காததினால் தற்கொலைக்குச் சென்று விடுவதைக் காண்கிறோம்.

ஏன் இவ்வாறு நடக்கின்றது என்று உள்மனம் எழுப்பும் கேள்விகளுக்கு விடையில்லாமல் இல்லை. ஏனெனில், அறிவுள்ள சிந்தனைக்குத் தடை விதித்து கட்டுப்பாடற்று உணர்ச்சி வசப்படவைக்கும் ஷைத்தானின் ஆட்சி மனிதனின் மனதிற்குள் நடந்து கொண்டிருக்கிறது. அலைபாயும் மனதினைக் கட்டுப்படுத்த உணர்வலைகள் அடங்கி அறிவு மேலோங்கும் ஒரு நிமிட நேரம் போதும். அதன் பின்  தவறு இழைக்க எண்ணும் மனிதனின் மனதிற்குக் கடிவாளம் கிடைத்துவிடும்.

கோபத்தைத் தணிக்க உங்களில் ஒருவருக்கு தான் நின்று கொண்டிருக்கும் போது கோபம் ஏற்பட்டால் உடனே அமர்ந்து விடுவீராக: இன்னமும் கோபம் அவரை விட்டு நீங்கவில்லை எனில் அவர் படுத்துக் கொள்ளட்டும்! – அபூதர்(ரலி) நூல்: திர்மிதி என இறைத்தூதர் கூறிவிட்டுச் சென்றிருப்பதை நினைவு கூர்வோம்.

கோபம் என்பது இறைவன் மனிதனுக்களித்த  பண்புகளில் ஒன்றாக இருப்பினும், அக்கோபம் கடுமையான நோயாக மாறி விளைவுகளை விபரீதப்படுத்துவதிலிருந்து தவிர்க்க பொறுமை என்ற மருந்தைக் கொண்டு தீர்க்க வேண்டும். சகிப்புத்தன்மைக்கு மற்ற பெயரான பொறுமையை நாம், நம் குடும்பத்தினரிடமிருந்து துவங்கி பழகிய பின்பு சமுதாய மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்.

எவனொருவன் (தன் வாழ்வில்) துன்பங்கள் நேரிடும்போது அதைச் சகித்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் கொள்கிறானோ, அவனுக்கு அல்லாஹ் சகிப்புத் தன்மையை வழங்கி விடுகிறான். (துன்பங்களைச்) சகித்துக் கொள்ளும் தன்மையை விட சிறந்த ஒரு அருட்கொடையை எவரும் பெற்றதில்லை.  அபூசையித் அல் குத்ரீ (ரலி) புஹாரி, முஸ்லிம்

பொறுமையுடன் சகித்துக் கொள்வது இறைவனின் அருட்கொடை என்றால் அதனைப்பெற நாம் முயற்சிக்கவேண்டாமா? கோபத்தை மனிதனுக்கு அளித்த இறைவனே அதனை முறியடிக்கும் மருந்தான பொறுமை பற்றியும் கூறுகிறான்.

2:153 நம்பிக்கை கொண்டோரே! பொறுமையுடனும், தொழுகையுடனும்(இறைவனிடம்) உதவி தேடுங்கள். நிச்சயமாக அல்லாஹ் பொறுமையுடையவர்களுடன் இருக்கிறான்.

3:134 (பயபக்தியுடையோர் எத்தகையோர் என்றால்,) அவர்கள் இன்பமான (செல்வ) நிலையிலும், துன்பமான (ஏழ்மை) நிலையிலும் (இறைவனின் பாதையில்) செலவிடுவார்கள். தவிர கோபத்தை அடக்கிக் கொள்வார்கள். மனிதர்(கள் செய்யும் பிழை)களை மன்னிப்போராய் இருப்பார்கள். (இவ்வாறு அழகாக) நன்மை செய்வோரையே அல்லாஹ் நேசிக்கின்றான்.

3:200 முஃமின்களே! பொறுமையுடன் இருங்கள் (இன்னல்களை) சகித்துக் கொள்ளுங்கள் (ஒருவரை ஒருவர்) பலப்படுத்திக் கொள்ளுங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள் (இம்மையிலும், மறுமையிலும்) நீங்கள் வெற்றியடைவீர்கள்!

11:11 ஆனால் (துன்பங்களைப்) பொறுமையுடன் சகித்து எவர் நற்கருமங்கள் செய்கின்றார்களோ, அவர்களுக்கு மன்னிப்பும், மகத்தான நற்கூலியும் உண்டு.

11:115 (நபியே! எந்நிலையிலும்) பொறுமையைக் கடைப்பிடிப்பீராக! நிச்சயமாக அல்லாஹ் அழகிய செயல்கள் செய்வோரின் கூலியை வீணாக்கி விடமாட்டான்.

மேலும் அல் குர் ஆனில் பொறுமையின் அவசியத்தை விவரிக்கும் மேலும் ஏராளமான இறைவார்த்தைகள் காணக்கிடைக்கின்றன. (பார்க்க: 2:45, 2:155, 2:156, 2:177, 2:249, 3:17, 3:120, 3:125, 3:142, 3:146, 3:186, 3:200, 4:25, 7:87, 7:126, 7:128, 8:46, 8:65, 8:66, 10:109, 11:11, 12:18, 12:83, 13:22, 13:24, 16:42, 16:96, 16:110, 16:126, 16:127, 17:44, 18:28, 18:68, 19:65, 20:132, 22:35, 23:111, 25:75, 28:54, 29:59, 30:60, 32:24, 33:35, 38:17, 40:55, 40:77,41:35, 42:33, 46:35, 50:39, 54:27, 70:5, 74:7, 76:12, 76:24, 90:17)

எத்தகைய சூழலையும் பொறுமையோடு சிந்தித்து செயல்பட்டால் வெற்றியைத் தான் தருவதாக இறைவன் வாக்களிக்கிறான். ஆதலால், இறைவா! நாம் அனிச்சையாய் கோபப்படும் சமயத்தில் கூட ஷைத்தானை விரட்டியடித்து நீ கூறிய அருட்கொடையாம் பொறுமையை எனக்குத் தந்தருள்வாயாக என்று நாம் ஒவ்வொருவரும் பிரார்த்திப்போம். அதற்கான பலன்களை ஈருலகத்திலும் அடைவோம்!

ஆக்கம்: ஷர்புத்தீன் உமரி

Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.