சுவையான அந்த உரையாடல் நடந்த இடம், இலங்கையிலுள்ள வேவல்தெனிய (wewaldeniya) நகரத்திலுள்ள ஒரு பள்ளிவாயிலின் பெண்கள் தொழுகை அறை.
அஸர் தொழுகைக்குப் பின் திக்ர் செய்து முடித்த அந்தப் பெண்கள் மூவரும் ஒருவரை ஒருவர் பார்த்து சினேகப் பூர்வமாய் முறுவலித்தபடி ஸலாம் கூறிக் கொண்டனர். அப் பெண்களில் இருவர் வெளிநாட்டவர். ஒருவர் நம் இலங்கைப் பெண் ஃபாத்திமா.
மற்ற இரு பெண்களிடமும் நெருங்கிய ஃபாத்திமா, அவர்களைப் பற்றி தான் அறிந்து கொள்ள விரும்புவதாகக் கூறினாள். அவர்களிடையே துவங்கிய ஆங்கில உரையாடலை தமிழில் வாசிக்கலாம் வாருங்கள்:
இல்ஹாம் அல் கர்ளாவி (Dr. Ilham Al-Qaradawi): சகோதரி, என்னுடைய பெயர் இல்ஹாம். உலகப் புகழ்பெற்ற நவீன இஸ்லாமிய அறிஞர் அல்லாமா யூஸுஃப் அல் கர்ளாவியின் மகள். அவரைப் பற்றி நீங்களும் அறிந்திருப்பீர்கள் அல்லவா?
ஃபாத்திமா: ஆஹா! அவரைப் பற்றித் தெரியாத முஸ்லிம்கள் இருக்க முடியுமா? நன்றாகவே தெரியும். அவருடைய பல நூல்களைத் தமிழிலும் மொழி பெயர்த்து இருக்கிறார்கள். அவற்றில் சிலவற்றை நானும் வாசித்துள்ளேன்.
இல்ஹாம் அல் கர்ளாவி: அப்படியா? மிகவும் மகிழ்ச்சி. எனது தந்தைக்கு நான்கு பெண்களும் மூன்று ஆண்களுமாக ஏழு பிள்ளைகள். நான் லண்டன் பல்கலைக் கழகத்தில் Positron Physics இல் என்னுடைய பி எச் டி பட்டப்படிப்பை முடித்தேன். தற்போது கத்தார் பல்கலைக் கழகத்தில் அணுத்துறையில் (nuclear physics) பேராசிரியையாகப் பணியாற்றி வருகிறேன்.
மார்க்க விசயங்களில், யூசுஃப் அல் கர்ளாவி மற்றும் ராஷித் அல் கன்னூஷி ஆகிய இரு அறிஞர்களின் கருத்துக்களை மேற்கோள் காட்டி தஃவாவில் ஈடுபடும் சகோதரர்கள் சிலர், “முஸ்லிம் பெண்ணுக்கு வீட்டுப் பணியே மகத்தானது; சமூகத்துக்கு தேவையான ஆளுமைகளை (குழந்தைகளை) வீட்டில் இருந்து உருவாக்கினால் போதுமானது, அதுவே சமூகப்பணி” என்ற ரீதியில் தொடர்ந்து கருத்துக்களைக் கூறி வருகின்றனர். அவர்கள், அந்த அறிஞர்களின் சொந்த வாழ்வில் தமது பெண் பிள்ளைகளின் விசயத்தில் காட்டியுள்ள முன்மாதிரியை தம் தஃவாவில் எடுத்துக்காட்டவோ, வலியுறுத்தவோ முனைவதில்லை. இது ஒருவகையான இரட்டை நிலைப்பாடு. இந்தப் புனைவின் மூலம் அதைச் சுட்டிக்காட்ட முனைந்துள்ளார் கட்டுரையாளர் அப்துல் ஹக் லறீனா. |
என்னுடைய தங்கையும் லண்டன் பல்கலைக் கழகத்தில் இரசாயனவியலில் (doctorate in chemistry) பி.எச்.டி. முடித்துள்ளார். மற்ற தங்கைகளும் அவரவர் விரும்பிய துறைகளில் கல்வி கற்று வருகிறார்கள். இஸ்லாம் அறிவும் ஆற்றலும் வாய்ந்த ஆண் – பெண் இருபாலாருக்கும் சமவாய்ப்புக் கொடுக்கக் கூடிய மார்க்கம் என்பதை உலகுக்கு எடுத்துரைக்கும் என் தந்தை, எங்கள் விஷயத்திலும் அதை மெய்ப்படுத்தி இருக்கிறார், அல்ஹம்துலில்லாஹ்!
இதோ, இந்த விஸிட்டிங் கார்டில் உள்ள என்னுடைய இணையதளத்தில் (http://ilhamalqaradawi.com/) நீங்கள் என்னைப் பற்றியும், என்னுடைய பணிகளைப் பற்றியும் அறிந்து கொள்ளலாம்.
அதோடு, இந்த லிங்க்கில் அல் ஜஸீரா தொலைக்காட்சிக்கு என்னுடைய துறைசார்ந்து நான் அளித்த முழுமையான பேட்டிகளை நீங்கள் பார்க்கலாம். அதிலிருந்து ஒரு பகுதியைக் கீழே பாருங்களேன்.
{youtube}iXH9t8vuVeQ{/youtube}
ஃபாத்திமா: மிக்க நன்றி. (மற்றவர் பக்கம் திரும்பி) சகோதரியே நீங்கள்?
யுஷ்ரா கன்னூஷி (Yusra Ghannouchi): நான் யுஷ்ரா. ட்யூனீஸிய நாட்டு இஸ்லாமிய அறிஞர் ராஷித் அல் கன்னூஷியின் மகள். அவரைத் தெரியும் அல்லவா?
ஃபாத்திமா: அவரைப் பற்றிக் கேள்விப்பட்டுள்ளேன். ஆனால், அவரது நூல்கள் எதையும் தமிழில் வாசித்ததில்லை. இந்திய-இலங்கை இஸ்லாமிய இதழ்களில் எழுதுவோர் தமது கட்டுரைகளில் மேற்கோள் காட்ட அங்கொன்றும் இங்கொன்றுமாய்த் துண்டுதுண்டாய்ப் பயன்படுத்திய சிற்சில மேற்கோள்களை வாசித்துள்ளேன், அவ்வளவுதான்! பின் அலியின் ஆட்சி கவிழ்ந்தபின் உங்கள் தந்தையின் அந்நஹ்ழா கட்சிதான் அமோக மக்கள் ஆதரவோடு வெற்றி ஈட்டியது என்று படித்தேன்.
யுஷ்ரா கன்னூஷி: ஆம், நீங்கள் சொல்வது சரி. அல்லாமா யூஸுஃப் அல் கர்ளாவியைப் போல, என்னுடைய தந்தைக்கும் நான்கு பெண் பிள்ளைகள். நானும் என் கல்வியை லண்டனிலேயே பெற்றுக்கொண்டேன். ஒரு சட்டத்தரணியாக மட்டுமின்றி, என்னுடைய தந்தை உருவாக்கிய அந்நஹ்ழா அரசியல் கட்சியின் உத்தியோகபூர்வப் பேச்சாளராகவும் பணியாற்றி வருகின்றேன். எங்கள் கட்சியில் சுமார் 45 பெண்கள் மக்களால் பொதுசனத் தேர்தலின்போது தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளனர். உங்கள் ஈமெயில் ஐ.டியைத் தாருங்கள். ஆஹ், ஜஸாக்கல்லாஹ்! இதோ இப்போதே இந்த உரைகளின் சுட்டிகளை (லின்க்) உங்களுக்கு மெயில் பண்ணுகிறேன்… ம்… இதோ:
இது என்னுடைய பிபிசி பேட்டி:
{youtube}tWRkaUMJ-X0{/youtube}
இது நான் பங்குபற்றிய அரசியல் விவாதம்.
{vimeo}40717256{/vimeo}
என்னுடைய சகோதரி சுமைய்யா கன்னூஷி பற்றியும் நீங்கள் கேள்விப்பட்டு இருக்கலாம். லண்டன் பல்கலைக் கழகத்தில் மெய்யியல் துறையில், குறிப்பாக, political philosophy துறையில் தனது பி. எச். டி. யை அவர் முடித்துள்ளார். அல்ஜஸீராவில் அரசியல் பகுதியில் எழுத்தாளராகவும் இருந்து வருகிறார்.
அல்ஜஸீரா இணைய தளத்தின் இப்பக்கத்தில் நீங்கள் அவற்றை வாசித்துப் பார்க்கலாம். அவரது சமய சுதந்திரம் தொடர்பான உரையை, இங்கே கேட்கலாம். என்னுடைய மற்ற சகோதரியின் பெயர் இன்திஸார். அவரும் அரசியலில் ஈடுபாடு உடையவர்தான். இந்த இணைய தளச் சுட்டியில் போய் அவரது உரையை நீங்கள் கேட்கலாம்.
இப்படியாக, எங்கள் தந்தை பெண்கல்வி, பெண்களின் அரசியல் சமூகச் செயற்பாடு ஆகியவற்றிற்கு முழு ஆதரவும் அதற்கான வாய்ப்புக்களையும் ஏற்படுத்தித் தந்திருக்கிறார், அல்ஹம்துலில்லாஹ்! இப்போது, உங்களைப் பற்றிச் சொல்லுங்களேன். இலங்கையில் தஃவா செயற்பாடுகள் எந்தளவில் உள்ளன? முஸ்லிம் பெண்களின் சமூகச் செயற்பாடு வெற்றிகரமாகக் காணப்படுகின்றதா?
ஃபாத்திமா: (ஹ்ம்ம்ம்!!!) இலங்கையின் தஃவா வரலாற்றுக்குக் கிட்டத்தட்ட நூறு ஆண்டுகள்… எனது தந்தையரும் சகோதரர்களும் தஃவாக் களத்தில் மிகுந்த அர்ப்பணிப்போடு செயற்பட்டு வருகிறார்கள். “சிறந்த இஸ்லாமியத் தாய்மார்களை உருவாக்குதல்” என்ற உயரிய நோக்கில் முஸ்லிம் பெண்களுக்கான அரபு மத்ரஸாக்களும் இங்கே உள்ளன. அவற்றில் நமக்கு தையல், பின்னல், சமையல், குழந்தை வளர்ப்பு என்பவற்றுக்கான விசேட பயிற்சிகள் தரப்படுவதோடு, கம்ப்யூட்டர் கல்வியும் வழங்கப்படுகின்றது.
இலங்கை முஸ்லிம் பெண்களாகிய நமக்கு, குடும்பம், அதன் பராமரிப்பு குறித்த போதனையே மிக அழுத்தமாகத் தரப்படுகின்றது. அதாவது, ஒரு முஸ்லிம் பெண் தன் கணவனுக்காகக் குழந்தைகளுக்காக, குடும்பத்துக்காக வீட்டில் இருந்து செய்யும் பணியே மகத்தானது; தன்னிகரற்றது; அல்லாஹ் நம்மிடம் அதையே எதிர்பார்க்கின்றான்; சமூகத்துக்குத் தேவையான ஆளுமைகளை அதாவது குழந்தைகளை வீட்டில் இருந்து உருவாக்குவதே நமது முதலும் இறுதியுமான மாபெரும் சமூகப்பணி என்று மீண்டும் மீண்டும் எங்களுக்குச் சொல்லித் தரப்படுகின்றது. இத்தனைக்கும் நாங்கள் குடும்ப அமைப்பை ஒருபோதும் எதிர்க்கவும் இல்லை; அதன் கடமைகளைப் புறந்தள்ளவும் இல்லை.
உண்மையில், “ஒரு பெண்ணான நீ வீட்டில் சும்மா தானே இருக்கிறாள்?” என்று மிகுந்த அலட்சிய மனப்பான்மையோடு இருக்கும் ஆண்களை நோக்கித்தான் இக்கருத்துக்கள் வலியுறுத்தப்பட்டு, பெண்ணின் கண்ணியத்தை அவர்கள் உணருமாறு செய்யவேண்டும். அதன் மூலம் பெண்களின் பணிகளில், பொறுப்புகளில் தாமும் பங்குகொண்டு, பெண்களுக்குச் சமூகச் செயற்பாடுகளுக்கான “வெளி”யை வழங்குமாறும், பெண்கள் தமது உயர் கல்வியைத் தொடர்வதற்கு உதவுமாறும் அவர்களைத் தூண்ட வேண்டும். அதை விட்டுவிட்டு, பெண்களாகிய நம்மிடமே அக்கருத்துக்கள் திரும்பத் திரும்ப வலியுறுத்தப்பட்டு வருவது ஏன் என்று சற்றுக் குழப்பமாகவும், சில சமயம் அலுப்பாகவும் உள்ளது.
ஆனாலும் இத்தகைய சிந்தனைகளின் நீட்சி, நம்மை மேலைத்தேயப் பெண்ணியச் சிந்தனையை நோக்கியே இட்டுச் செல்லும் என்று நாங்கள் அடிக்கடி எச்சரிக்கப்படுவதால், இப்படியெல்லாம் சிந்திப்பதையும், கேள்விகள் கேட்பதையும் கிட்டத்தட்ட நாங்கள் மறந்தே போய் விட்டோம். சரி அதெல்லாம் இருக்கட்டும், எனக்கொரு சந்தேகம் சகோதரிகளே!
இல்ஹாம், யுஷ்ரா: (புன்னகையோடு) என்ன சந்தேகம் சகோதரி? தயங்காமல் கேளுங்கள்!
ஃபாத்திமா: அல்லாமா யூஸுஃப் அல் கர்ளாவி, அஷ்ஷேய்க் ராஷித் அல் கன்னூஷி ஆகிய இருவரும் அதாவது, உங்கள் ரெண்டு பேருடைய தந்தைகளும் மிகப்பெரிய இஸ்லாமிய அறிஞர்கள்தாம். அனேகமாய் அவர்களின் புத்தகங்கள் மற்றும் சிந்தனைகளை முன் வைத்துத்தான் இலங்கையில் தஃவாவே செய்து வருகிறார்கள். அது வேறு விஷயம்.
நான் என்ன கேட்க வந்தேன்னா, இந்த… பாலிடிக்ஸ், கெமிஸ்ட்ரி, நியூக்ளியர் ஸயன்ஸ் ஆகிய துறைகளில் உங்களை சிறப்புத் தேர்ச்சி உடையவங்களாய் உங்கள் தந்தையர் உருவாக்கி இருப்பதாய் நீங்களே சொல்றீங்க. ஒரு முஸ்லிம் பெண்ணுக்கு அவளுடைய குடும்பத்தைப் பார்த்துப் பணிசெய்து பராமரிக்கிறது மட்டும்தானே மகத்தான, மேன்மையான பணி? அப்படியிருக்க, மேற்கின் சடவாத உலகு போற்றுகின்ற இந்த… பாலிடிக்ஸ், கெமிஸ்ட்ரி, நியூக்ளியர் ஸயன்ஸ் இதெல்லாம் முஸ்லிம் பெண்களுக்கு எதுக்கு? அதனால், இஸ்லாத்துக்கும் இஸ்லாமியக் குடும்பத்துக்கும் என்ன பிரயோசனம்? சும்மா, வீட்டை மட்டும் பராமரிச்சிட்டு ‘அல்ஹம்துலில்லாஹ்’ என்று நிம்மதியா இருக்கிறதைவிட இவ்வளவெல்லாம் கஷ்டப்பட்டு பி.எச். டி எல்லாம் முடிக்கிறதெல்லாம் சும்மா வீண் வேலைதானே?
ஆகவே, என்னுடைய கேள்வி, “என்னதான் மிகப் பெரிய இஸ்லாமிய அறிஞர்களாய் இருந்தாலும், இஸ்லாத்தில் பெண்ணின் நிலை, அவளின் மகத்தான பணிகள்… இது பற்றியெல்லாம் இலங்கை தஃவா களத்தில் இருக்கிற நம்முடைய “தாயீ”க்களுக்குத் தெரிஞ்ச அளவுக்கு உங்கட தந்தைகளுக்கு இஸ்லாம் தெரியல்லையா?” என்பதுதான்.
இல்ஹாமும் யுஷ்ராவும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டனர். உணர்ச்சிப் பெருக்கோடு பதில் கூறத் தொடங்கும் போதே, “உம்மா, உங்களை வாப்பா அழைக்கிறார்” என்ற சிறுவனின் குரல் இடையிட்டது. “அஸ்ஸலாமு அலைக்கும், நான் போகணும், அவர் கூப்பிடுறார். வரட்டா?” என்று பதிலையும் எதிர்பாராமல் விரைந்து சென்றாள் ஃபாத்திமா.
– லறீனா அப்துல் ஹக்