தக்வா தரும் பாடம் (பிறை-7)

மீண்டும் ஒரு ரமளான்: பிறை 7

க்வா எனும் அரபுச் சொல், ‘விகாயா’ என்னும் வேரடி வினையிலிருந்து பிறந்ததாகும். அதற்கு, சொல் வழக்கில் “தற்காத்தல்” என்று பொருளாகும்.

இறைவன் மீதுள்ள அச்சம் மேலோங்கி, பாவச் செயல்களிலிருந்து தற்காத்துக் கொள்ளும் பொருளில் தக்வா எனும் சொல், இறைமறை வழக்கில் ‘இறையச்சம் – பயபக்தி’ என்று பொருள் கொள்ளப்படுகிறது. அதாவது மனிதனையும் இந்தப் பேரண்டத்தையும் அதில் உள்ள அனைத்தையும் படைத்து நிர்வகித்துவரும் (படைப்பாளியான) ஏக இறைவனாகிய ‘அல்லாஹ்’ நம்மை எங்கிருந்தாலும் எந்நேரமும் கண்காணிக்கின்றான். எனவே, பாவச் செயல்களிலிருந்து நம்மை நாமே தற்காத்துக் கொள்கின்றோம் என்னும் எண்ண உறுதியை ஏற்படுத்துவது ‘தக்வா’வாகும்.

நம்முடைய ஒவ்வொரு செயலும் தனிமையிலோ, கூட்டத்திலோ, இரவிலோ, பகலிலோ, எங்கு நிகழும்போதும் அது அவன் பார்வைக்கு மறைந்தது அல்ல. நாம் நிச்சயமாக நம் அனைத்துச் செயல்களுக்கும் பதில் சொல்ல வேண்டும். நன்மைச் செயல்களுக்குப் பரிசும் தீமைகளுக்கு (மன்னிப்பு இல்லையெனில்) தண்டனையும் பெறுவோம் எனும் எண்ணத்தில் உறுதியாக வாழ்வது என்பது ‘தக்வா’ எனும் சொல்லின் விரிந்த பொருளாகும்.

“அல்லாஹ் என்னைப் பார்த்துக் கொண்டிருக்கின்றான்” என்ற எண்ணத்தில் அல்லாஹ்விற்குப் பயந்து, அவன் ஏவியவற்றைச் செய்தும், விலக்கித் தடை செய்தவற்றைத் தவிர்த்தும் வாழ்வதன் மூலம் ‘தக்வா’வைப் பெற்றுக் கொள்ளலாம்; அதிகரித்துக் கொள்ளலாம்.

உதாரணமாக ஒரு நோன்பாளி அவர் சிறுவராக இருந்தாலும் வயதான முதியவராக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் ஆணாக இருந்தாலும் தனிமையில் இருக்கும்போது பசியிருந்தும், தாகம் இருந்தும், சுவையான ஹலாலான உணவு வகைகள் வீட்டில் இருந்தாலும்கூட அதை நெருங்க மாட்டார். தன்னை யாருமே பார்க்கவில்லையே என்று அதனைச் சாப்பிடவோ குடிக்கவோ எண்ணங்கூட கொள்ள மாட்டார்.

ஏனெனில், தனிமையில் இருந்தாலும் தம்மை இறைவன் கண்காணிக்கின்றான் எனும் எண்ணம் ஒரு நோன்பாளிகளுக்கு அனுமதிக்கப்பட்ட ஹலாலான உணவை உண்டாலும், “நாம் நோன்பை முறித்த பாவத்திற்கு அல்லாஹ்விடம் தண்டனை பெறுவோம்” என்று இறைவனுக்கு அஞ்சி, தமது பசியை, தாகத்தைக் கட்டுபடுத்தி வைக்கின்றார்.

ஹலாலானவற்றையே இறைவனின் கட்டளைக்கு அஞ்சிக் கட்டுப்பாட்டுடன் தவிர்த்துக் கொண்ட நோன்புப் பயிற்சியின் பலனாக, மனத்தில் இறையச்சம் மிகுந்து என்றைக்கும், எங்கும், எந்நிலையிலும் ஹராமானவற்றை அதாவது அல்லாஹ்வால் அனுமதிக்கப்படாத உணவுகள், போதைப் பொருட்கள், மதுபானங்கள் ஆகியவற்றை விலக்கி வாழ்வதோடு,  தவறான முறையில் ஏமாற்றித் திருடுதல், மோசடி செய்தல் போன்ற விலக்கப்பட்ட செயல்கள்கள் மூலம் சம்பாதித்தால், அல்லாஹ்விடம் கடுமையான தண்டனை உண்டு என்று எண்ணம் எற்பட்டு ஹராமானவற்றை விட்டு விலகி நேர்வழியில் வாழவும் நோன்புப் பயிற்சி வழி வகுக்கிறது.

இந்தச் சிந்தனை சிறுவர்களான பள்ளி மாணவ-மாணவியர் முதல் வீட்டில் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் கணவன், மனைவி, தந்தை, தாய், சகோதரன், சகோதரி, அண்டை வீட்டார், உற்றார், உறவினர், நண்பர்கள் என்று முழுச் சமுதாயத்திற்கும் சீராக நீதமாக சுமூகமாக உண்மையாளர்களாக வாழக்கூடிய ஒரு நல் வாய்ப்பை அளிக்கிறது. இவ்வாறான அனைத்து நற்பண்புகளுக்கும் இறையச்சம் எனும் தக்வாவே அடிப்படையாகத் திகழ்கிறது.

oOo

(மீள் பதிவு)
– தொடரும் இன்ஷா அல்லாஹ்