ஸஹரும் இஃப்தாரும் (பிறை-10)

மீண்டும் ஒரு ரமளான்: பிறை 10

ஸஹரின் போதும் இஃப்தாரின்போதும் கடைப்பிடிக்கப்பட வேண்டிய சில ஒழுங்குகள்:

ஸஹர் உணவு:

“நீங்கள் ஸஹர் செய்யுங்கள்! ஏனெனில் ஸஹர் செய்வதில் பரக்கத் இருக்கின்றது” என்று நபி (ஸல்) கூறினார்கள் (அறிவிப்பாளர் அனஸ் பின் மாலிக் (ரலி); நூல்கள்: புகாரி 1923, முஸ்லிம் 2000, நஸயீ 2166, திர்மிதி 642).

நமது நோன்புக்கும் வேதமுடையோரின் நோன்புக்கும் இடையே ஸஹர் உண்பதே வித்தியாசமாகும்” என்று நபி (ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அம்ர் பின் அல்ஆஸ் (ரலி, நூல்கள்: முஸ்லிம் 2001, நஸயீ 2168, திர்மிதி 643).

பஜ்ருக்கு அரைமணி நேரத்திற்கு முன்பு எழுந்து ஸஹர் உணவு உண்பது நல்லது. ஸஹர் நேரத்துக்கு எழுந்து உண்ணாமல், வழக்கமான இரவு உணவு வேளையில் சாப்பிட்டு விட்டுத் தூங்கிவிடும் பழக்கத்தை உடையவர்கள் அதை மாற்றிக் கொள்ள வேண்டும். ஏனெனில், அது நபிவழிக்கு மாற்றமானது. ஸஹர் நேரத்தில் எழுந்து (ஒரு பேரீத்தம் பழம், தண்ணீர், பால் போன்ற) எதையாவது சாப்பிடுவது நபிவழியும் நன்மையானதுமாகும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

நோன்பு துறப்பது:

சூரியன் மறைந்தவுடன் தாமதப்படுத்தாது பேரீத்தம்பழத்தைக் கொண்டு நோன்பு துறப்பது, இல்லையெனில்  தண்ணீரைக் கொண்டு நோன்பு துறப்பது நபிவழியாகும்.

“உங்களில் ஒருவர் நோன்பு துறக்கும் போது பேரீத்தம் பழத்தால் நோன்பு துறக்கட்டும்! அது கிடைக்காவிட்டால் தண்ணீரால் நோன்பு துறக்கட்டும்! ஏனெனில் அது தூய்மையானதாகும்” என்று நபி (ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: ஸல்மான் பின் ஆமிர் (ரலி), நூல்கள்: திர்மிதி 631,இப்னுமாஜா 1699).

விரைந்து நோன்பு துறக்கும் காலமெல்லாம் மக்கள் நன்மையில் நிலைத்திருக்கிறார்கள்” என்று நபி (ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: ஸஹ்லு பின் ஸஃது (ரலி), புகாரி 1957, திர்மிதி 635, இப்னுமாஜா 1697).

நோன்பு துறந்ததும் ஓதவேண்டிய துஆ (பிரார்த்தனை):

நபி (ஸல்) அவர்கள் நோன்பு துறந்த வேளையில்,

ذَهَبَ الظَّمَأُ وَابْتَلَّتِ الْعُرُوْقُ وَثَبَتَ الأَجْرُ إِنْ شَاءَ اللَّهُ
‘தஹபள் ளமவு, வப்தல்லதில்  உரூகு, வஸபதல் அஜ்ரு இன்ஷா அல்லாஹ்” என்று ஓதுவார்கள். (பொருள்: தாகம் தணிந்தது, நரம்புகள் நனைந்தன, அல்லாஹ் நாடினால் கூலியும் உறுதியாகி விடும்) (அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி), நூல்: அபூதாவூது 2350).

துஆ ஏற்றுக்கொள்ளப்படும் அனுகூலம்:

‘மூவரின் பிரார்த்தனைகள் நிராகரிக்கப்படுவதில்லை. தனது நோன்பைத் துறக்கும் நோன்பாளியின் பிரார்த்தனை, நேர்மையான அரசனின் பிரார்த்தனை, (அநீதி இழைக்கப்பட்ட) பாதிக்கப்பட்டவரின் பிரார்த்தனை ஆகியவைதாம் அவை” என்று நபி (ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), திர்மிதி 3668).

oOo

(மீள் பதிவு)
– தொடரும் இன்ஷா அல்லாஹ்