தனிமனித கடமைகளைப் பேணுதல்

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் என்னிடம் வந்து, நீர் இரவெல்லாம் நின்று வணங்குவதாகவும் பகலெல்லாம் நோன்பு நோற்பதாகவும் எனக்கு தெரிவிக்கப்பட்டதே (அது உண்மைதானா?) என்று கேட்டார்கள். நான், ஆம் என்று பதிலளித்தேன். (அதற்கு) நபி(ஸல்) அவர்கள், அவ்வாறு செய்யாதீர்கள்; (சிறிது நேரம்)தொழுவீராக, (சிறிது நேரம்)உறங்குவீராக, (சில நாட்கள்)நோன்பு நோற்பீராக, (சில நாட்கள் நோன்பை)விட்டு விடுவீராக.  ஏனெனில் உமது உடலுக்கு செய்ய வேண்டிய கடமையும் உமக்கு உண்டு; உமது கண்ணுக்கு செய்ய வேண்டிய கடமையும் உமக்கு உண்டு;  உம் விருந்தினருக்கு செய்ய வேண்டிய கடமையும் உமக்கு உண்டுஉம் துணைவியருக்கு செய்யக்கூடிய கடமையும் உமக்கு உண்டு……… என்று கூறினார்கள் (நீண்ட ஹதீஸின் ஒரு பகுதி)அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி), நூல் புகாரி : 6134.

 

இந்நபிமொழி இஸ்லாமிய மார்க்கத்தில் ஏக இறைவன் மனிதர்களுக்கு விதித்துள்ள தொழுகை, நோன்பு, ஜகாத், ஹஜ் போன்ற கடமையான வணக்க வழிபாடுகளை முஸ்லிம்கள் நிறைவேற்றுவது அவசியமும் நன்மையும் என்பதை போல், அதிலேயே தன்னை மூழ்கடித்து விடாமல், தன்னையும், தன் உடலையும், உடல் உறுப்புக்களையும், தன்னை சார்ந்துள்ள மனைவி, மக்கள், பெற்றோர், விருந்தினர் போன்றவர்களையும் கவனிப்பதும் அவசியம் என்று கோடிட்டு காட்டுகின்றது.

 

இறைவணக்கம் என்றாலும் தமது தேவைகளையும் பொறுப்புக்களையும் மறந்து அதில் ஈடுபடுவதற்கு இஸ்லாம் ஒருபோதும் அனுமதிக்கவில்லை. மட்டுமல்ல அதனை தெளிவாக கண்டிக்கவும் செய்கிறது.

 

இஸ்லாம் இனிமையான அமைதியான வாழ்வுக்கு உகந்த ஓர் வாழ்க்கை நெறி என்பதற்கு இந்த நபிமொழி ஒரு சான்றாக அமைகின்றது. இஸ்லாம் எப்பொழுதுமே மனிதனை எல்லாவிஷயத்திலும் நடுநிலையைப் பேண பணிக்கின்றது.

 

இஸ்லாத்தின் அடிப்படை முழுவதும் இறைவனை சார்ந்து அவனிடம் அனைத்தையும் ஒப்படைத்து அவனுக்கு அடிபணிதலாகும். அதில் இறைவனுக்கு வணக்கத்தின் மூலம் நன்றி செலுத்துதல் முதல் படியாகும். ஆனால் தனது குடும்பத்தையும், தனக்கு உரிய பொறுப்புக்களையும் மறந்து விட்டு இறைவனை வணங்குவதை இஸ்லாம் விரும்பவில்லை.

எவ்வாறு தான் படைத்த தனது படைப்பான மனிதன் தன்னை வணங்கி நன்றி செலுத்தாமல் இருப்பதை இறைவன் வெறுக்கின்றானோ, அதே அளவுக்கு இவ்வுலக அனைத்து ஆசாபாசங்களையும் துறந்து ஓர் சன்னியாசி போன்று தியானத்தில் இறைவணக்கத்தில் மனிதன் ஈடுபடுவதையும் இறைவன் வெறுக்கின்றான்.

 

ஒரு முஸ்லிமை பொறுத்தவரை அவனுக்கு குடும்ப வாழ்விலிருந்து விலகி இருக்க அனுமதி இல்லை. அவ்வாறு குடும்பவாழ்வில் ஈடுபடும் ஒரு மனிதனுக்கு அவன் செய்து நிறைவேற்ற வேண்டிய பல பொறுப்புக்கள் உள்ளன. அவன் பொறுப்பில் இறைவனால் விடப்பட்ட அப்பொறுப்புக்களுக்கு அவனே நாளை பதில் கூறியாக வேண்டும்.

 

அது அவனுடைய அங்க உறுப்புக்களாக இருக்கட்டும்; அவனுக்கு வழங்கப்பட்ட செல்வமாக இருக்கட்டும்; அவன் பொறுப்பில் இருக்கும் மனைவி மக்களாக இருக்கட்டும்; இவைகளின் தேவைகளை நிறைவேற்றுவதற்காக முயற்சிப்பதும் அவனுடைய முக்கிய கடமையாகும். அவற்றில் அவன் எந்த கவனமும் செலுத்தாமல் அவன் பொறுப்பில் உள்ளவைகளின் தேவைகளை குறித்து எவ்வித சிந்தையுமின்றி அவற்றை சிரமத்திற்குள்ளாக்கிக் கொண்டு அவன் இறைவணக்கத்தில் ஈடுபடுவதை இஸ்லாம் விரும்பவில்லை.

 

தொழுகை வணக்கங்களில் தலையாயதாகும். அதிலும் இரவுத் தொழுகைக்கு இஸ்லாத்தில் மிகுந்த முக்கியத்துவம் உண்டு. அதற்காக ஒருவர் இரவு முழுவதும் நின்று வணங்கிக் கொண்டிருப்பதையே தனது வேலையாகக் கொண்டால், அவர் இழக்கும் தூக்கும் அவரின் வாழ்வில் புயலை ஏற்படுத்தும். அதுபோன்றே நாள் முழுக்க நோன்பு நோற்பதும். முழுக்க இறைவணக்கத்தில் மட்டுமே ஒருவர் கவனம் செலுத்தும் பொழுது அவர் செய்ய வேண்டிய மற்ற கடமைகள் நிறைவேற்றப்படாமல் மறுபுறம் தேங்கி நிற்கின்றது. இதனால் குடும்பத்தில் குழப்பம் உருவாகி அவர் வாழ்வும் சீர்குலைய காரணமாகின்றது.

 

இதன் காரணத்தால் நாளை மறுமையில் அவர் மீது சுமத்தப்பட்ட பொறுப்புகளுக்கு பதில் கூற வேண்டிய கட்டாயத்தில் இறைவன் முன் குற்றவாளியாக நிற்க வேண்டிய சூழலுக்கு உள்ளாகிறார்.

 

எனவே நாளை இறைவன் முன் குற்றவாளியாக நிற்காமல் இருக்க வேண்டுமெனில் அனைத்து காரியங்களிலும் நடுநிலையை பேணி ஒவ்வொன்றுக்கும் நிறைவேற்ற வேண்டிய கடமைகளில் கவனமாக இருப்பதற்கு முயல வேண்டும்.  

 

பொறுப்புக்களை உரிய முறையில் கவனித்து இறைவனுக்கு முழுமையாக அடிபணிந்து நடக்கும் கடமை சீலர்களாக வாழ அல்லாஹ் அனைவருக்கும் நல்லருள் புரிவானாக. ஆமீன்.

 

ஆக்கம்:  இப்னு ஹனீஃப்