பண்டிகை காலச் சலுகை அறிவிப்புகள்

Share this:

ணிகத்தில், வணிகர்களின் மக்கள் ஈர்ப்புத் தூண்டில் ஒன்று உண்டு – ‘பண்டிகைக்காலச் சிறப்புச் சலுகை தள்ளுபடிகள்’. இன, மொழி பேதமின்றி உலகமெங்கும் இது பொது. தமிழகத்தில் தலைநகர் சென்னை மாநகரிலே ஆடித் தள்ளுபடி, தீபாவளி விசேஷத் தள்ளுபடி, ரம்‘ஜா’ன் தள்ளுபடி என்று வஞ்சனையில்லாமல் ஏதாவது விசேஷம் அடிக்கடி வந்துவிடுகின்றது.

இவ்வாறு சீஸனில் அறிவிக்கப்படும் தள்ளுபடி சலுகை விற்பனை விலையில் இதர நாட்களைவிட எந்தளவு மக்களுக்குச் சகாயம் உள்ளது என்பதைக் கூட்டத்தில் முண்டியடித்துக் கொண்டு ஏதாவது ஒரு நிறுவனம் புள்ளிவிவரம் எடுத்துச் சொன்னால் தள்ளுபடி விலையில் அவர்களுக்கு ஒரு கைக்குட்டை பரிசளிக்கலாம்.

♥ சத்தியமார்க்கம்.காம் தள ஆக்கம், வாசகர்களின் நினைவுறுத்தலுக்காக மறுபதிப்பு செய்யப்பட்டுள்ளது.

மற்றபடி, தள்ளுபடி ‘விசையால்’ ஈர்க்கப்படும் மெல்லிய மனம் கொண்ட பெண்களையும் அவர்களின் பரிதாப வாழ்க்கைத் துணையின் பர்ஸ்களையும் இவ்வியாபாரிகள் மானசீகமாக நம்புவதால், உள்ளே நுழையும் வாடிக்கையாளர்களின் கூடையில் தள்ளுபடிக்கு ஒட்டோ, உறவோ இல்லாத இதரப் பொருட்களெல்லாம் மாயமாய் இடம்பிடித்து, கழிவைச் சமன் செய்துவிடும் என்பது ஊரறிந்த ரகசியம். அதைப்பற்றி யாருக்குக் கவலை?

இதைப் போலவே, ச்சீட்டிங் சீட்டுக் கம்பெனிகள், “அதிக வட்டி” போன்ற விளம்பரங்கள். இவற்றுக்கு மக்களுடைய ஆதரவு குறைவதே இல்லை. பெரிய படிப்பாளியாக இருந்தாலும் சரி; பத்திரிகையில் ‘சீட்டுக் கம்பெனி முதலாளி மாயம்’ என்று அவ்வப்போது வரும் செய்திகளைப் படித்திருந்தாலும் சரி; பாய்ந்து சென்று ‘இந்தா’ என்று கட்டிவிட்டுத்தான் மறுவேலை. மோகம், ஆசை, பேராசை என்பதைத் தவிர இதில் நியாயமான காரணங்கள் ஏதும் ஒளிந்திருப்பதில்லை. இத்தகு உதாரணங்களால் நாம் அறிந்து கொள்ளக்கூடியது யாதெனில் – குறைவான நோவில் கணக்கிலடங்கா நுங்கு சாப்பிட வேண்டும் எனும் மக்களின் யதார்த்த மனோபாவம்.

படைத்தவன் இவற்றை அறியாதவனா? நம் பலவீனங்களையும் அவசரத்தையும் சுட்டிக்காட்டுபவன் ஆயிற்றே! எனவே, அவனிடமிருந்து நமக்காக நிறைய சகாய அறிவிப்புகள் உண்டு. ஆனால், அவற்றில் மிகப்பெரும் வித்தியாசம் ஒன்று உண்டு. வணிகர்களுடைய நோக்கமானது மிக எளிது – சுய இலாபம். மற்றபடி மக்கள் சேவை, கரிசனம், அன்பு, பாசம் போன்ற எந்த மண்ணாங்கட்டியும் இல்லை. இறைவன் அறிவித்தவை எல்லாம் முழுக்க முழுக்க மக்கள் நமக்கானது; நம் ஈடேற்றத்துக்கானது.

மனிதனின் ஆயுள் மிகக் குறுகிய ஆயுள். ஈருலக வெற்றிக்கு இந்த அற்ப ஆயுள் முழுவதும் இறைவனுக்குச் சிரம் குப்புற விழுந்து வணங்கியே கிடந்தாலும் அவனது அருட்கொடைகளுக்கு நன்றி சொல்லிமாளாது. இருப்பினும் எல்லாம் அறிந்தவனல்லவா இறைவன்? அதனால் சகாயங்களும் சிறப்பு அறிவிப்புகளும் ஏகப்பட்டது வழங்கியுள்ளான். ஒப்பற்ற உன்னதம் அவை.

கைச்சேதம் யாதெனில் – 25 சதவிகிதம் தள்ளுபடியில் வாங்கும் அணிகலன்களில் நாம் கொள்ளும் மகிழ்வும் பெருமையும் இந்த அறிவிப்புகளில் நம்மில் பெரும்பாலானவருக்குக் கண்ணில் படுவதே இல்லை. அதனால் நமக்கான சிறப்புச் சலுகைகளை உரிய முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டிய அவசரமோ, அக்கறையோ நமக்கு இருப்பதில்லை.

ஓர் அறிவிப்பை மட்டும் இங்கு எடுத்துக் கொண்டு சற்றுக் கூர்ந்து பார்ப்போம். விசேஷ அறிவிப்பின் பலன் புரிய வரலாம்.

நாளும் கிழமையும் மாதங்களும் எப்பொழுதும் போல் வந்து போய்க் கொண்டிருந்தாலும் சில நாட்களை, சில கிழமைகளை, சில மாதங்களைத் தேர்ந்தெடுத்து அதைச் சிறப்பாக்கி அதில் நமக்குச் சலுகைகளும் அளித்துவிடுகிறான் அவன் – அல்லாஹ் சுப்ஹானஹு வதஆலா. குர்ஆனில் 89-ஆவது சூரா அல்-ஃபஜ்ரு. அதன் இரண்டாவது வசனத்தில் “பத்து இரவுகளின் மீது சத்தியமா க!” என்று இறைவன் செய்திகள் சில கூறுகிறான். சத்தியமிடும் அளவிற்குப் பெருமைவாய்ந்த அந்தப் பத்து நாட்களும் துல்ஹஜ் மாதத்தின் முதல் பத்து நாள்கள் என்பது இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் வியாக்கியானம்.

எல்லா நாட்களையும் படைத்த அந்த இறைவனே ஆணையிட்டுக் கூறும் அந்தப் பத்து நாட்களின் சிறப்பைப் பற்றி நபிகள் நாயகம் (ஸல்) கூறியவையும் ஹதீதுகளில் இடம் பெற்றுள்ளன. ஓர் அறிவிப்பில், (துல்ஹஜ்ஜின் முதல்) பத்து நாட்களில் செய்யும் நல்லறங்கள் (அவற்றை அடுத்து வரும்) அய்யாமுத் தஷ்ரீக் நாட்களில் செய்யும் நல்லறங்களைவிடச் சிறந்தவை” என்று நபி (ஸல்) கூறினார்கள். “அறப்போரைக் காட்டிலுமா?” என்று நபித் தோழர்கள் வினவினர். “ஆம், அறப்போரைக் காட்டிலும்“ என்று கூறிவிட்டு, “ஆனால், தன் உயிரையும் பொருளையும் பணயம் வைத்துப் புறப்பட்டு, இரண்டையும் (இறைவழியில்) இழந்துவிட்டவன் செய்த ஜிஹாதைத் தவிர” என்று நபி (ஸல்) சேர்த்துச் சொன்னார்கள் – புகாரீ 969.

இங்குச் சற்றுக் கூடுதல் கவனம் தேவை. இறைவனுக்கான வழிபாட்டில், அர்ப்பணிப்பில் கடினமானது, உயிரை வாளில் ஏந்தி, களம் புகும் அறப்போர். அத்தகைய போருக்கு இணையாய் ஒப்பிட்டுச் சொல்லப்படும் அளவிற்கு இந்தப் பத்து நாட்களில் அல்லாஹ்வுக்காகச் செய்யப்படும் நல்லறங்கள் விதந்து பேசப்படுகின்றன என்பது செய்தியின் கரு. அவ்வளவு உயர்வு எனில், பெரும் முயற்சிகள் மேற்கொள்ள வேண்டியிருக்குமோ? என நினைத்தால்… ‘அச்சம் தவிர்ப்பீர்!’.

இயலுமான, எளிதான, நற்காரியங்கள் – அவற்றைச் செய்தல் போதுமானது. தேவையெல்லாம் இவை இறைவனுக்கு என்ற மனவுறுதியும் கருமமே கண்ணான செயல்பாடும் மட்டுமே.

ஹஜ் கடமையை நிறைவேற்றச் செல்லாதவர்கள் துல்ஹஜ்ஜின் பெருநாள் வரைக்கும், அதாவது 1-9 நாள்கள் நோன்பிருக்கலாம்.  குறிப்பாக ஹஜ்ஜுடைய அரஃபா நாளில் நோன்பிருந்தால் கிடைக்கக்கூடிய சிறப்பு வெகுமதி பற்றி நபிகள் நாயகம் அறிவித்த செய்தி ஹதீதில் பதிவாகியுள்ளது.

அரஃபா நாளில் நோன்பு நோற்பது பற்றி நபி (ஸல்) அவர்களிடம் கேட்டதற்கு அவர்கள் “அது கடந்த வருடத்தின் மற்றும் வரக்கூடிய வருடத்தின் பாவத்தை போக்கும் என நான் ஆதரவு வைக்கிறேன்” என்று கூறினார்கள் . அறிப்பாளர் அபூகதாதா (ரலி – முஸ்லிம், திர்மிதி).

அது மட்டுமின்றி, அரஃபா நாளின்போது, நோன்பிருந்துகொண்டு ஒருமித்த மனத்தோடு, படைத்தவனை நினைத்து, பிரார்த்தனை புரிவதற்கான பலன் என்னவாயிருக்கும்? என்பதையும் ஹதீது விவரிக்கின்றது.

“அல்லாஹ், தன் அடியார்களை நரகிலிருந்து அதிகமாக விடுதலை செய்யும் நாள் அரஃபா நாளாகும். இதைவிட வேறு எந்த நாளிலும் அவன் இவ்வாறு விடுதலை செய்வதில்லை. இந்நாளில் இறைவனே பூமியின் வானுக்கு இறங்கி வந்து ‘என் அடியார்கள் என்ன விரும்புகிறார்கள்? (அவர்கள் கேட்பதைக் கொடுப்பேன்)‘ என வானவர்களிடம் பெருமையோடு கூறுவான்” என நபி (ஸல்) கூறியதாக அன்னை ஆயிஷா(ரலி) அறிவிக்கும் செய்தி முஸ்லிமில் இடம் பெற்றுள்ளது.

ஆச்சா?

அடுத்து மிகமிக எளிய கூற்றுகளால் எண்ணிலடங்கா நன்மைகளையும் இந்தப் பத்து நாட்களில் பெற்றுக் கொள்ளும் சலுகை அறிவிப்பை நபி (ஸல்) அவர்கள் அறிவிக்கின்றார்கள்:

“நாட்களுள் இந்த (துல்ஹஜ்) பத்து நாட்களைவிட அல்லாஹ்வுக்கு மிகவும் உவப்பான நாட்கள் வேறு எதுவுமில்லை. ஆகவே இந்த நாட்களில் அதிகமதிகமாக ‘லாயிலாஹ இல்லல்லாஹ்’ என்னும் தஹ்லீலையும் ‘அல்லாஹு அக்பர்’ என்னும் தக்பீரையும் ‘அல்ஹம்துலில்லாஹ்’ என்னும் தஹ்மீதையும் கூறிக்கொள்ளுங்கள்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள். -அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு உமர், (தப்ரானீ).

இவை மட்டுமன்றி உபரித் தொழுகை, தான தர்மம், இன்னபிற நற்செயல்கள் அனைத்தும் பல மடங்குகளாகச் சிறப்புச் சலுகை பெறுகின்றன. இந்தப் பத்து நாட்களும் பைசா செலவில்லாமல் மூட்டை கணக்கில் இறைந்து கிடக்கும் வெகுமதிகளை அளவற்று அள்ளி எடுத்துக்கொள்ளலாம் எனும்போது, இன்னும் என்ன? பணம் இருந்து, பயணத்துக்குரிய சௌகரியங்களும் படைத்தவர்களுக்கு ஹஜ் கடமை. இதர மக்களுக்கு அவரவர் இருக்குமிடத்திலேயே வாய்ப்புகள், வெகுமதிகள்.

துல்ஹஜ் மாதத்தின் முதல் பத்து நாட்களில் ஆற்றப்படும் நல்லறங்களுக்குத் தனிச் சிறப்பு வழங்கப்படுவதற்குக் காரணம் தொழுகை, நோன்பு, தர்மம், ஹஜ் ஆகிய தலையாய வணக்கங்கள் அனைத்தும் அந்நாட்களில் ஒருங்கே அமையப் பெற்றிருப்பதுதான் எனத் தோன்றுகிறது. மற்ற தினங்களில் இவ்வாறு அமைவதில்லை ” என்பதாக இமாம் இப்னு ஹஜர் அஸ்லானீ (ரஹ்) தமது நூலான ஃபத்ஹுல் பாரியில் குறிப்பிட்டுள்ளது இங்கு நினைவு கொள்ளத்தக்கது. ஒன்பது நாட்களின் மற்ற நல்லறங்களோடு பத்தாம் நாளில், (ஓரளவு வசதியுள்ளவர்களால்) கொடுக்கப்படும் உயிர்ப்பலியான குர்பானியும் சேர்ந்து கொள்ள, எண்ண முடியாத சலுகைகள் கணக்கில் வரவு வைக்கப்படுகின்றன.

கண்ணுக்குப் புலப்படும் ஜட வஸ்துகள், அதன் பலா பலன் போலன்றி இவை, இவற்றின் சிறப்புகள் உள்ளார்ந்து உணரப்பட வேண்டும். பிரச்சினை என்னவென்றால் நவநாகரீக உலகில் நம் மனங்களை அலைக்கழிக்கும் கவனக் கலைப்பு சமாச்சாரங்கள் எக்கச்சக்கம். அதைப் புறந்தள்ளிவிட்டால் போதும். மேலும் உறங்கும் முன்போ, தனிமையிலோ அமைதியாக அமர்ந்து கொண்டு, இறைவனும் அவன் தூதரும் அறிவித்துள்ள இந்தச் சிறப்பு சலுகையை மனக் கண்ணில் வலமும் இடமும் ஓடவிட்டுக் கொண்டால், பட்டென இதன் சத்தியம் மனதில் ஆழப்பதியும்.

பிறகு? உள்ளார்ந்த செயல்பாடுகள் எளிய சாத்தியம்.

இதோ! வந்துவிட்டன இந்தப் புனித மாதத்தின் சுப தினங்கள். விசேஷ சலுகைக்குத் தயாராகுங்கள். அள்ளிக் கொள்ளுங்கள் அனைத்தையும் இன்ஷா அல்லாஹ்.

-நூருத்தீன்


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.