உத்தமமான காரியம்

Share this:

சாக்ரடீஸிடம் ஒருவர் ஓடோடி வந்து சொன்னார்.

“சாக்ரடீஸ் இதைக் கேள்விப்பட்டீர்களா?”

வந்தவர் மற்றவர்களைப் பற்றிய புரளிகளிலும், வதந்திகளிலும் மிகுந்த ஈடுபாடுடையவர். சாக்ரடீஸ் அவரை மேலே பேச விடாமல் நிறுத்தி கேட்டார்.

“ஐயா நீங்கள் சொல்ல வரும் விஷயம் முற்றிலும் உண்மை என்று உங்களால் உறுதியாகச் சொல்ல முடியுமா?”
அவர் பேச்சில் ஆரம்பித்தில் இருந்த வேகம் குறைந்தது. “இல்லை….”

“நீங்கள் சொல்லப் போவது எனக்கோ சமூகத்திற்கோ மிகவும் உபயோகப்படக்கூடிய விஷயமா?”

“அதில்லை…”

“இதைத் தெரிந்து கொள்ளாவிட்டால் எனக்கோ சமூகத்திற்கோ ஏதேனும் நஷ்டம் உண்டா?”

“இல்லை”

“இதைச் சொல்வதில் உங்களுக்காவது நற்பயன் ஏற்படுமா?”

“அப்படிச் சொல்ல முடியாது…..” அவர் குரல் ஈனசுரத்தில் வந்தது.

“ஐயா, எதை உண்மையென்று உறுதியாகக் கூற முடியாதோ, எதனால் நமக்கோ, சமூகத்திற்கோ பயனுமில்லையோ, எதை அறிந்து கொள்ளாததால் நமக்கு நஷ்டமுமில்லையோ அதைத் தெரிந்துகொள்ள நான் விரும்பவில்லை. குறுகிய வாழ்க்கையில் தெரிந்து கொள்ளவும் பேசவும் எத்தனையோ நல்ல விஷயங்கள் இருக்கின்றன. அதில் நம் கவனம் செலுத்தலாமே” என்று சாக்ரடீஸ் சொல்ல, வந்தவர் அசடு வழிய அங்கிருந்து நகர்ந்தார்.

மற்றவர்களைப் பற்றிய விஷயங்கள் நம்மிடம் சொல்லப்படும் போது நம்மில் எத்தனை பேர் சாக்ரடீசின் மனோபாவத்தில் இருக்கிறோம்? கேட்கும் விஷயங்கள் உண்மையா என்பதை அறிய நாம் உண்மையில் முயல்கிறோமா? நமக்கோ மற்றவர்களுக்கோ பயன்படும் விஷயங்களாக அவை இருக்கின்றனவா என்று சல்லடையிட்டு தேர்ந்தெடுக்கிறோமா?

மற்றவர்கள் விஷயங்களையும், அவர்களது பணத்தையும் நம்மில் பெரும்பாலானோர் நம்முடையதைப் போல் பயன்படுத்தத் தவறி விடுகிறோம். ஒருவித அலட்சியம் தானாக வந்து விடுகிறது. அதன் விளைவுகள் நம்மை பாதிப்பதில்லை என்பதும் அவர்களை எந்த அளவில் பாதிக்கிறது என்பதை நாம் உணரத் தவறி விடுகிறோம் என்பதுமே அதற்கு முக்கியக் காரணம் என்று சொல்லலாம்.

எங்கோ படித்த ஒரு குட்டிக்கதை நினைவுக்கு வருகிறது.

ஒரு சீடன் மற்றவர்களைப் பற்றி உள்ளதும் இல்லாததுமாய் செய்திகளை மற்றவர்களிடம் சொல்லும் பழக்கம் உடையவானாய் இருந்தான். அதைக் கண்ட குரு அவனைக் கண்டித்தார். அவன் மன்னிப்பு கோரினான். ஆனாலும் அவனுடைய செய்கையின் தீமை அவன் மனதில் ஆழமாய் பதியவில்லை என்பதை அறிந்த குரு அவனிடம் ஒரு சிறு பஞ்சு மூட்டையைத் தந்து நகரத்தின் மையத்தில் உள்ள மைதானம் ஒன்றில் நின்று அதை சிறிது சிறிதாகப் பிய்த்து காற்றில் ஊதிப் பறக்க விட்டு வரும்படி சொன்னார்.

சீடன் வெகு சுலபமாக அதைச் செய்து விட்டு வந்தான். குரு சொன்னார். “சரி இப்போது போய் அதையெல்லாம் ஒன்று விடாமல் சேகரித்துக் கொண்டு வா”.

சீடன் திகைத்தான். இதென்ன ஆகிற காரியமா? “குருவே அந்த பஞ்சு காற்றில் இன்னேரம் எங்கெங்கு பறந்து போய் இருக்கிறதோ? அதை எப்படி மறுபடி சேகரித்து வர முடியும்?”

“ஒரு மணி நேரத்திற்கு முன் பறக்க விட்ட பஞ்சுகளை உன்னால் சேகரித்து திரும்பக் கொண்டு வர முடியவில்லை. மற்றவர்களைப் பற்றி என்னென்னவோ சொல்லி வதந்திகளைப் பறக்க விட்டு வந்திருக்கிறாய். அவை யார் யார் வாயில் எப்படியெல்லாம் மீண்டும் திரிந்து என்னென்ன விளைவுகளை ஏற்படுத்தி இருக்கின்றனவோ. நீ மன்னிப்பு கேட்பதன் மூலம் அவற்றைத் திரும்பப் பெற முடியும் என்று நினைக்கிறாயா?”

அப்போது தான் அந்த சீடனுக்குத் தன் செயலின் தீமை முழுவதுமாகப் புரிந்தது. கண்ணீர் மல்க வெட்கித் தலை குனிந்த சீடன் அன்றிலிருந்த அந்தப் பழக்கத்தை அடியோடு விட்டான்.

நம்முடைய தவறான செய்திகள் எத்தனை பேரிடம் சென்று எப்படியெல்லாம் திரிந்து மற்றவர் மனதில் என்னென்ன அபிப்பிராயங்களை உருவாக்கி சம்பந்தப்பட்டவர்களை எப்படியெல்லாம் பாதிக்கின்றன என்பதை நாம் அறிவோமா? விளையாட்டாய் பொழுது போக்காய் அடுத்தவர் பற்றி நாம் முழுவதுமாக அறியாததைப் பற்றி சொல்லும் போது எத்தனை பெரிய பாதகத்தைச் செய்கிறோம் என்பதை நாம் நினைவில் வைத்துக் கொள்வது நல்லது.

சிலர் நாங்கள் உள்ளதைத் தானே சொல்கிறோம், உண்மையைத் தானே சொல்கிறோம் என்று மற்றவரின் பலவீனமான உண்மைகளையும், நல்லதல்லாத உண்மைகளையும் சொல்லக்கூடும். அப்போதும் ஒரு கேள்வியை நம்முள் கேட்டுக் கொள்வது மிகவும் நல்லது. “நம்முடைய எல்லா உண்மைகளையும் நாம் வெளியில் சொல்கிறோமோ? வெளியே நம்மைப் பற்றி தெரிய வேண்டாம் என்று நினைக்கிற தர்மசங்கடமான உண்மைகள் நம் வாழ்வில் இல்லவே இல்லையா?”

நாம் மனிதர்கள். நம்முள் மிக மேன்மையாவர்கள் கூட அந்த மேன்மையை எட்டுவதற்கு முன் எத்தனையோ தவறுகளை செய்து அதிலிருந்து கற்றிருக்கிறார்கள்; எத்தனையோ பலவீனங்களுடன் போராடிய பிறகே வென்றிருக்கிறார்கள். மற்றவர்களைப் பற்றி நாம் சொல்லும் தவறுகளை நாம் செய்யாதிருக்கக்கூடும். ஆனால் மற்ற எத்தனையோ தவறுகள் நாமும் செய்கிறோம். இப்படியிருக்கையில் நாம் அடுத்தவர் பற்றி வம்பு பேசுவது நியாயமா?

இனி யாராவது அடுத்தவர் பற்றி உங்களிடம் நல்லதல்லாதவற்றைச் சொல்ல வந்தால் பெரிய ஆர்வம் காண்பிக்காதீர்கள். சாக்ரடீஸ் போல சொல்ல முடியா விட்டாலும் நீங்கள் ஆர்வம் காண்பிக்காத போது மற்றவர்கள் உங்களிடம் சொல்வதைத் தானாகக் குறைத்துவிடுவார்கள். அதே போல் மற்றவர்களைப் பற்றி நல்லதல்லாதவற்றை நீங்கள் சொல்ல நினைக்கும் போது உதடுகளை இறுக்கிக் கொள்ளுங்கள். அந்த நேரத்தில் நீங்கள் செய்யும் மிக உத்தமமான காரியம் அதுவாகத் தான் இருக்க முடியும்.

மூலம்: மின்னஞ்சல்


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.