காலங்காலமாய் அழியாத நேசம்…

Share this:

காலங்காலமாய் அழியாத (இந்து முஸ்லிம்) நேசம் – புதுக் காவிகளால் கலையுமென்றால் இது என்ன தேசம்?

இந்திய முஸ்லிம்களுக்கு எதிராக பயங்கரவாதமும் வன்முறையும் குஜராத்தில் உச்ச நிலையைத் தொட்டதும் அதற்கு அடுத்தபடியாக அண்மையில் ஆந்திராவில் ஹிந்துத்துவ தேசவிரோதக் கும்பல், முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளில் ஈடுபட்டு வருவதும் வாசகர்கள் அறிந்ததே!

கடந்த 10.10.2008 இல் ஆந்திர மாநிலத்தின் அடிலாபாத் மாவட்டதிலுள்ள பைன்ஸாவில், துர்கா ஊர்வலம் என்ற பெயரில் இவர்கள் நடத்திய அட்டூழியத்தை சத்தியமார்க்கம்.காம் படம் பிடித்துக் காட்டி இருந்தது நினைவிருக்கலாம்.

மனித நேயத்துக்கும் நமது நாட்டின் சமூக நல்லிணக்கத்துக்கும் சவாலாக உருவெடுத்து வளர்ந்து வருகின்ற ஹிந்துத்துவாவினரின் வெறித்தனத்தை, 60 வயதை எட்டிய துல்ஜா பாய் என்ற இந்துப் பெண்மணி எதிர்த்து நின்ற – உள்ளத்தை நெகிழ வைக்கும் – நிகழ்வை இங்குப் பதிவு செய்து நன்றி பாராட்டுவது நமக்குக் கட்டாயமாகிறது.

குடிவெறியோடும் கொலை வெறியோடும் முஸ்லிம்களை வீடுகளுக்கு உள்ளே வைத்துத் தீவைத்துக் கொளுத்திய இந்த வன்முறைக் கும்பலிலிருந்து தனது அடுத்த வீட்டாரான ஒரு முஸ்லிம் குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காக, தன் மகன் தாக்கூர் ரமேஷ் சிங்கோடு தன் பேரப்பிள்ளைகளையும் ஈடுபடுத்தி, ஈனர்களை எதிர்த்து நின்று விரட்டியடித்த துல்ஜா பாயின் தீரத்தை எவ்வளவு பாராட்டினாலும் தகும்!

பைன்ஸாவிலுள்ள பஞ்சேஷா மஸ்ஜிதுக்குப் பின்புறம் வசிப்பவர்கள் உஸ்மானும் அவரது குடும்பத்தினரும். “கடந்த 3-4 ஆண்டுகளாக நடைபெற்று வந்த துர்கா ஊர்வலத்தில் யாருக்கும் எவ்வித இடையூறும் ஏற்பட்டதில்லை என்ற தைரியத்தில் என் சகோதரர் உஸ்மான், வெளியே சென்றிருந்தார். அன்று நானும் என் பணி நிமித்தம் வெளியிலிருந்தேன்” என்று கூறினார் உஸ்மானின் சகோதரரும் ஹைதரபாத் நாளிதழ் ஒன்றின் நிருபருமான ஸய்யித் முஹம்மத் பாஷா.

“எங்கள் வீட்டு ஜன்னல் வழியாகப் பார்த்தபோது ஒரு வெறிக்கும்பல் எங்கள் சந்துக்குள் நுழைந்து, குறிப்பிட்ட வீடுகளை உடைத்து நொறுக்கிக் கொண்டு முன்னேறிக் கொண்டிருந்தது. சற்று நேரத்தில் உஸ்மானுடைய வீட்டிலிருந்து புகைமூட்டம் கிளம்பி மேலெழுந்து பரவியது. உடனே எனது குடும்பம் மொத்தத்தையும் துணைக்கழைத்துக் கொண்டு உஸ்மானுடைய வீட்டுப் பக்கம் விரைந்தேன். அப்போது அந்த வீட்டுக் குழந்தைகளில் ஒன்று வீட்டுக்குள்ளிருந்து வாசலுக்கு ஓடி வந்ததைப் பார்த்தேன். உடனே ஓடிப்போய் வீட்டுக்குள்ளிருந்த மேலும் இரு குழந்தைகளையும் (உஸ்மானின் மனைவி) ஸஃபிய்யாவையும் பத்திரமாக அழைத்துக் கொண்டு வந்து எனது வீட்டில் சேர்த்து விட்டு, உஸ்மானுடைய வீட்டுத் தீயை அணைக்கும் முயற்சியில் நாங்கள் அனைவரும் ஈடுபட்டோம்” என்று அன்றைய நிகழ்வின்போது, தான் செய்த செயற்கரிய செயலை மிகச் சாதாரணமாக விவரித்தார் துல்ஜா பாய்.

தனது வீட்டிலிருந்த தண்ணீரை வாளிகள் மூலம் அள்ளிக் கொண்டு போய் உஸ்மான் வீட்டுத் தீயை அணைக்கப் போன துல்ஜா பாயையும் அவரது குடும்பத்தினரையும் வன்முறைக் கும்பல் தடுத்து மிரட்டியது. கும்பலின் மிரட்டலுக்கு அஞ்சாமல், “இது எங்க அண்டை வீடு; இது எங்க பிரச்சினை. அவங்க எங்க உறவுக்காராங்க போல. நீயெல்லாம் வெளியாளு. ஒங்க அட்டகாசத்தையெல்லாம் ஒங்க பகுதியோட நிறுத்திக்க. இங்க வேணாம்; என்னை யாரும் தடுக்க முடியாது” என்று வெறிக்கும்பலை ஒதுக்கித் தள்ளி விட்டுத் தம் கடமையைச் செய்ததாகக் கூறினார் துல்ஜா பாய்.

“வீட்டிலிருந்த சேமிப்பான 1,30,000 ரூபாய் ரொக்கம், 19 தோலா தங்க நகைகள், 40 தோலா வெள்ளி நகைகள், ஆண்டுக் கணக்கில் சேர்த்த விலையுயர்ந்த ஆடைகள் அனைத்தையும் வன்முறையாளர்கள் கொள்ளையடித்துக் கொண்டு போய் விட்டனர். பீரோ, கட்டில், சோஃபா அனைத்தும் எரிந்து சாம்பலாகி விட்டன” என்று இழப்புகளை அடுக்கிய பாஷா, “என்றாலுமென்ன? பெரியம்மாவின் தீரச் செயலால் எங்கள் குடும்பத்தினரது உயிர்கள் காப்பாற்றப் பட்டிருக்கின்றன. அவருக்கு நாங்கள் வாழ்நாள் முழுதும் கடமைப் பட்டவர்களாவோம்” என்று நன்றிப் பெருக்கோடு கூறினார் பாஷா.

“எங்களிரு குடும்பத்தின் உறவு பல நூற்றாண்டுகளைக் கடந்ததாகும். உஸ்மானுக்கு நான் பெரியம்மா மாதிரி. அப்படித்தான் என்னை அவன் அழைப்பான். அந்தக் குழந்தைகள் எல்லாரும் என் (குடும்பத்துக்) குழந்தைகள். அவர்களுக்கான என் கடமையைத்தான் நான் செய்தேன். ஆபத்தான சூழ்நிலையில் அவர்களைக் காப்பாற்றாமல் சும்மா பார்த்துக் கொண்டிருக்க என்னால் முடியாது” என்றார் 60 வயதைக் கடந்த துல்ஜா பாய்.

துல்ஜா பாய் போன்ற மனித நேயத்தோடு துணிச்சலும் இணைந்த பெண்மணிகள் இருப்பதால்தான் நம் நாடு இன்னும் தலை நிமிர்ந்து நிற்கிறது.

இது ஒரு போராட்டம்! காவிகளால் குனியும் நாட்டின் தலை, துல்ஜா பாய் போன்றோரால் அவ்வப்போது நிமிர்த்தப் படுகிறது.

காலங்காலமாய் அழியாத (இந்து முஸ்லிம்) நேசம் – புதுக்

காவிகளால் கலையுமென்றால் இது என்ன தேசம்?

 

 

 


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.